பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்

ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கமா?- பா.ம.க. எதிர்ப்பு

சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதை உடனே கைவிடவேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய அறிக்கை ஒன்றில், ”தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் கட்டப்பட இருப்பதாகவும், கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படவுள்ள 60 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பெரும்பகுதி ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் கடுமையாக கண்டிக்கத்தக்கது.” என்று கூறியுள்ளார்.

”சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற கண்காட்சி அரங்கம், ஊடக அரங்கங்கள், நட்சத்திர விடுதிகள், ஊர்தி நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் பன்னாட்டு அரங்கம் கட்டப்பட வேண்டியது கட்டாயத் தேவை தான். ஆனால், அதற்காக கையகப்படுத்தப்படும் நிலம் இன்னொரு உன்னத நோக்கத்தைச் சீர்குலைப்பதாக இருக்கக் கூடாது. கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்க சென்னையிலும், சென்னைக்கு வெளியிலும் அரசுக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றில் பன்னாட்டு அரங்கத்தைக் கட்டுவதை விடுத்து ஆயிரம்காணி ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கட்டக்கூடாது.” என்றும் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் பிறந்த ஆளவந்தார் பெயரில் செயல்பட்டு வரும் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமாக இப்போது 1054 ஏக்கர் நிலம் உள்ளது. ஆளவந்தார் எழுதி வைத்த நிலங்கள், அவரால் குறிப்பிடப்பட்ட இறைப்பணிக்கான தேவையைவிட பல மடங்கு அதிகம் என்பதால், அவற்றை வேறு பணிகளுக்காக பயன்படுத்தலாமா? என்ற வினா எழுந்த போது, அவற்றைக் கல்விப் பணிக்காக பயன்படுத்தலாம் என்று நீதியரசர் சேஷாத்ரி அய்யர் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கடந்த 1918-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் தீர்ப்பளித்தது.

அதைச் சுட்டிக்காட்டியுள்ள இராமதாசு, ”அதற்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது. கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் என்பது இறைபணியோ, கல்விப் பணியோ சார்ந்தது அல்ல. அதற்காக ஆளவந்தார் நிலங்களை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது.” என கறாராகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் திரைப்பட நகரம் உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட இருந்ததாகவும், அதைக் கைவிடுமாறு கடந்த ஜூலையில் முதலமைச்சருக்கு தான் கடிதம் எழுதியதாகவும் அதனைத் தொடர்ந்து திரைப்பட நகரம் அமைக்கும் திட்டம் பூந்தமல்லிக்கு அருகில் மாற்றப்பட்டதாக அறிவதாகவும் இராமதாசு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com