அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி
அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி

ஆன்மிக அரசியல்!

அரசியல் முகமூடியில் ஆன்மிக முகங்கள்!
Published on

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான பக்கம் ஒன்று புரண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் முகமே மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ராமர் கோவில் சிலை நிர்மாண விழா மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இதன் நாயகனாக பிரதமர் நரேந்திரமோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்.

ராமர் ஜென்மபூமி பிரச்னையின் வரலாற்றை சுருக்கமாகப் பார்க்கலாம்.

1528 - இல் பாபரின் படைத்தளபதியான மீர் பாகி அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டுகிறார்.

1885 - இல் மகந்த் ரகுபிர் தாஸ் என்ற துறவி மசூதிக்கு வெளியே கோவில் ஒன்று கட்டிக்கொள்ள அனுமதி கேட்கிறார். அன்றைய நீதிமன்றம் மறுத்துவிடுகிறது.

1949 - இல் இந்திய சுதந்திரத்துப்பின்னர் பாபர்

மசூதிக்குள் மத்திய கோபுரத்துக்குக் கீழாக பிரச்னைக்குரிய இடத்தில் ராமர் விக்கிரகம் ஒன்று வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அரசு அந்த இடத்தைப் பூட்டிவிடுகிறது. ஆனாலும் பூஜைகள் செய்யமட்டும் அனுமதி.

1950 - இல் கோபால் சிம்லா விஷாரத் என்பவர் ராமர்

சிலைகளை வழிபட உரிமை கோரி பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறார். பரமஹம்ச ராமசந்திர தாஸ் என்பவரும் இதற்காக வழக்குத் தொடர்கிறார்.

1959 - இல் நிர்மோஹி அகாடா என்ற மடமும் இந்த இடத்துக்கு உரிமை கோருகிறது.

1961 - இல் உபி சன்னி வக்ப் வாரியமும் இந்த இடத்தைக்கோரி வழக்கில் இணைகிறது.

பிப்ரவரி1, 1986 இல் மாவட்ட நீதிமன்றம் இந்த இடத்தை இந்துகள் வழிபடத் திறந்துவிட உத்தரவு போடுகிறது. அப்போது ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தார்.

ஆகஸ்ட் 14, 1989, இல் இந்த பிரச்னைக்குரிய இடத்தில் தற்போது நிலவும் நிலையில் எந்த மாறுதலும் செய்யக்கூடாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செப்டம்பர் 25, 1990: குஜராத் சோமநாதபுரத்தில் இருந்து ராமஜென்மபூமி யாத்திரையை அத்வானி தொடங்கினார்.

டிசம்பர் 6, 1992: கரசேவகர்களால் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி சட்டத்துக்குப் புறம்பாக இடிக்கப்பட்டது.

ஏப்ரல் 3, 1993: சர்ச்சைக்குரிய நிலம் மத்திய

அரசால் கையகப் படுத்தப்பட்டது.

ஏப்ரல் 2002: அயோத்தி வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடக்கம்.

செப்டம்பர் 10, 2010: அலகாபாத் உயர்நீதிமன்றம் 2:1 என்ற பெரும்பான்மைப்படி இந்த சர்ச்சைக்குரிய இடத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாடா, குழந்தை ராமர் தரப்பு இடையே மூன்றாகப் பிரித்தது.

மே9, 2011: அயோத்தி தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை

ஆக 17, 2017: உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் குழு வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறது.

ஜனவரி 25, 2019: இதை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசனக் குழு உருவாக்குகிறது.

நவம்பர் 9, 2019: இந்து தரப்புக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டு, முஸ்லிம் தரப்புக்கு அயோத்தியில் முக்கியமான இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்குமாறு உத்தரவிட்டது.

2020: கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ஜனவரி, 2024. ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1989 - இல் அத்வானி தொடங்கிய ராமஜென்ம பூமி யாத்திரையையொட்டி இது ஆன்மிகம் என்ற எல்லையில் இருந்து அரசியல் என்ற எல்லையைத் தாண்டி வளர்ந்ததில் பாஜகவும் ஒரு கட்சியாக வளர்ச்சி பெற்றது. ராமருக்கு கோவில் கட்டுவோம் என்ற கோஷம் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து தற்போது நனவாகி இருக்கிறது.

‘ராமர் நெருப்பு என்றார்கள் சிலர்; அவர் நெருப்பு அல்ல; ஆற்றல். அவர் விவாதம் என்றார்கள். அவர் சமாதானம். ராமர் கோவிலால் நம் நாட்டுக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கே பலன் கிடைக்கப் போகிறது' என்று இந்த விழாவில் பிரதமர் பேசினார்.

அரசியலைப் பொறுத்தவரை ஆன்மிகத்தைத் தள்ளியே வைக்கவேண்டும் என்றுதான் நாட்டில் மதச்சார்பின்மை பேசும் கட்சிகள் சொல்லிவந்தன. ஆனால் அரசியல்வேறு ஆன்மிகம் வேறு அல்ல என்பதே பாஜகவின் நிலைப்பாடு. அதுவே அக்கட்சிக்கு இதுவரை வெற்றி தேடித் தந்துள்ளது. 2024 தேர்தலிலும் இதுவே எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை அக்கட்சியினரிடம் வலுவாக உள்ளது.

வட இந்திய மாநிலங்களில் ஏற்கெனவே பாஜக தன்னுடைய உச்சபட்ச எம்பிக்களின் எண்ணிக்கையை எட்டி விட்டது. ஆட்சியிலும் பத்தாண்டுகள் தொடர்ந்து இருந்துவிட்டது. எனவே அது வெற்றி பெறக்கூடிய எம்பிகள் எண்ணிக்கை குறையலாம் என்ற ஆருடங்கள் சொல்லப்பட்டு வந்தன.

ஆனால்,‘அதெல்லாம் சரிதான். ஆனால் எங்களுக்குப் போடலைன்னா யாருக்குப் போடுவாங்க? எதிரே யார் இருக்கிறார்கள்?' என்று கேட்கும் பாஜக தரப்பு இந்தியா கூட்டணி இன்னும் முழுமை அடையாமல் தவிப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

ராம ஜென்ம பூமி இயக்கம் என்பது சுமார் 40 ஆண்டுகளாக இந்திய வலது சாரி இயக்கத்தினருக்கு உயிர்மூச்சாக இருந்து வந்த ஒன்று. அது பலகட்டப் போராட்டங்களுக்குப் பின் இந்த ராமர் கோவில் கட்டப்பட்டதுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.

இதே ஆன்மிக அரசியலை மேலும் பாஜக முன்னெடுத்துச் செல்லுமா? 2024 தேர்தலில் தங்கள் முக்கிய சாதனையாக இந்நிகழ்வைக் கட்டாயம் அவர்கள் முன் வைப்பார்கள்.

'இந்த போக்கு தவறானது' என்று காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

முடிவு வாக்காளர் கையில்.

குழந்தை ராமரின் அணிகலன்கள்!

அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலில்  வைக்கப்பட்டிருக்கும் சிலை ஐந்து வயது குழந்தை ராமர் சிலையாகும். எனவே அவரது சிலை முன்னால் அவர் விளையாடுவதற்காக வெள்ளியில் செய்யப்பட்டிருக்கும் விளையாட்டுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.கிலுகிலுப்பை, யானை, குதிரை, பம்பரம் போன்றவை அவை. ஜனவரி சுசு அன்று ப்ரான பிரதிருஷ்டை முடிந்த பின்னர் ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை ராமருக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் நகைகள் பற்றிய நுணுக்கமான விவரங்களை வெளியிட்டது.

வட இந்திய முறைப்படி செய்யப்பட்டிருக்கும் ராமரின் பொன்னால் செய்த மணி முடியில் வைரம், வைடூரியங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. சூரியனின் முத்திரை இதன் நடுவில் பொறிக்கப்பட்டிருக்கிறது. மணிமுடியின் வலதுபுறத்தில் முத்துக்கள் வேயப்-பட்டிருக்கின்றன.

விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களும் அணியும் கௌஸ்துப மணியை அவர் தன் நெஞ்சில் அணிந்-துள்ளார். அதிலும் பெரிய வைரக்கல் பொறிக்கப்-பட்டுள்ளது.

விஜயமாலை (வெற்றி மாலை). இது அவர் அணிந்-திருக்கும் நீளமான நெக்லஸ். இந்த தங்க நெக்லஸில் மாணிக்கக் கற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சங்கு, தாமரை, சுதர்சன சக்கரம், மங்களக் கலசம் போன்ற வைணவ சம்பிரதாய சின்னங்கள் இதில் உண்டு.

பிறை வடிவிலான நெக்லஸ் ஒன்று அவர் அணிந்துள்ளார். இதிலும் சூரிய முத்திரை உண்டு. மரகதமும் வைரமும் இழைக்கப்பட்ட படிகம் என்ற மாலையும் அவர் அணிந்துள்ளார்.

காஞ்சி எனப்படும் இடுப்பில் அணியில் பட்டையில் கற்களும் மணிகளும் கோர்க்கப்பட்டுள்ளன.

நெற்றியில் அணியும் திலகம் வெள்ளி நிறத்தில் வைர, மாணிக்கக் கற்கள் வெள்ளியில் பொதியப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மஞ்சள் நிற பனாரஸ் தங்க ஜரிகை வேட்டி, அங்கவஸ்திரம் ஆகியவற்றை சிறப்பாக வைணவ சின்னங்கள் பொறித்து செய்து அணிவித்து அழகு பார்த்திருக்கிறார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com