கலைஞர் மாரத்தான்- 1,063 திருநர் உட்பட 72,206 பேர் ஓடி கின்னஸ் சாதனை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக கலைஞர் மாரத்தான் ஓட்டம் இன்று சென்னையில் நடத்தப்பட்டது. இதில் 1,063 திருநர்கள் உட்பட 72,206 பேர் பங்கேற்று கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
கருணாநிதி நூற்றாண்டு நினைவாக அவரின் தி.மு.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் இன்று காலையில் மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.
மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கருணாநிதி நினைவிடத்தில் அதிகாலை 4 மணியளவில் நிகழ்வு தொடங்கியது. இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
42 கிமீ, 21 கிமீ, 10 கிமீ, 5 கிமீ என நான்கு பிரிவுகளாக இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

மாரத்தானில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், காவல்துறையைச் சேர்ந்த பிற அதிகாரிகள் என ஐந்நூறு பேருக்கும் மேல் கலந்துகொண்டனர். கடலோரக் காவல்படை, இராணுவ வீரர்கள் என 1500 பேரும் இதில் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
மாரத்தானில் பங்கேற்றவர்கள் செலுத்திய பதிவுக் கட்டணம் மூலமாக 3.42 கோடி ரூபாய் கிடைத்தது. அந்தத் தொகையை சென்னை, இராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த மாரத்தானை ஏற்பாடு செய்து நடத்திக்காட்டிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் புகழ்ந்து பேசினார். அவர் மா.சுப்பிரமணியன் அல்ல, மாரத்தான் சுப்பிரமணியன் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
பங்கேற்றவர்களில், 50 ஆயிரத்து 629 பேர் ஆண்கள்; 21 ஆயிரத்து 514 பேர் பெண்கள். முதல் முறையாக, திருநங்கைகள், திருநம்பிகள் என ஆயிரத்து 63 திருநர்கள் மாரத்தானில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கினார்.
கின்னஸ் அமைப்பின் அதிகாரிகள் நேரில் வந்து இந்த ஓட்டத்தை சாதனையாக அங்கீகரித்து சான்றிதழை வழங்கினார்கள்.