மோடியுடன் சரத்குமார்- ராதிகா
மோடியுடன் சரத்குமார்- ராதிகா

பிரச்சாரப் படத்தை இயக்கிய கட்சித் தலைவர்!

தேசிங்கு ராஜாவும் குதிரையும்- அரசியல் கிசுகிசு பகுதி

குதிரை வழக்கத்துக்கு மாறாக மிகவும் உற்சாகத்துடன் வந்தது.

தேசிங்கு அதைப் பார்த்ததும் கையில் இருந்த பெரிய கேரட்டை அப்படியே கொடுத்தான்.

“ உன் சந்தோஷத்துக்கான காரணம் தெரிந்ததுதான். அன்றே சொன்னார் தேசிங்குராஜா என்றுதானே கட்சிகள் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலைப் பார்த்து சொல்லிக் கொள்ளப்போகிறாய்?’’

கேரட்டை கபளீகரம் செய்த குதிரை, ”பின்னே சொல்லிக்கொள்ள மாட்டேனா? நடிகை ராதிகா விருதுநகரில் பாஜக சார்பாக களமிறக்கப்பப்படப்போகிறார் என்று பல நாள்களுக்கு முன்னரே நாம் சொன்னோமில்லையா?’’ என்றது.

“அதுமட்டுமா? மேலும் பல வேட்பாளர்களை நாம் கணித்திருந்தோம்… அரசியல் வட்டாரச் செய்திகளை காதுகொடுத்துக் கேட்டதில் கிடைத்த பலன் இது” என்ற தேசிங்கு..

’ புதிய செய்திகள் ஏதேனும் உண்டா?’’ என்றான்

”அதிமுக- பாமக என்ற கூட்டணியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த திமுக வட்டாரம், பாஜக பக்கம் பாமக போய்விட்டதில் உற்சாகமாகிவிட்டதாம். பல வேட்பாளர்கள் சிரமப்படாமல் வென்று விடலாம் என உற்சாகக் களிப்பில் மிதக்கிறார்களாம்! வட மாவட்டங்களில் இப்படி வாக்குகள் பிரிந்தது ஒருவிதத்தில் தங்களுக்கு உதவும் என அவர்கள் நினைக்கிறார்கள்! உதாரணத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டிஆர் பாலு. அவருக்கு எதிராக அதிமுக, பாஜக கூட்டணியில் தமாகா என்று வியூகம் அமைந்துள்ளது. கணக்குப் போட்டுப் பார்த்தால் அவரது வெற்றி எளிதுதானே..?”

“ரொம்ப கணக்குப் போடாதே. தேர்தல் சமயத்தில் உஷாராக இருக்கவேண்டும்”

”நாம் தமிழர் கட்சிக்கு கடைசியில் தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கி உள்ளது. சீமானுக்குப் பொருத்தமான சின்னம்தான்!” எனச் சிரித்தது குதிரை.

“ஒரு கட்சியின் தலைவர் இயக்குநராக இருப்பது மிகவும் வசதி. கடந்த இரண்டு நாள்களாக சென்னை, வடபழனியில் ஒரு ஸ்டூடியோவில் கட்சி வேட்பாளர்களை எல்லாம் வரவைத்து தங்கள் பிரச்சாரப் படத்தை சீமானே இயக்கி இருப்பதாகச் செய்தி..”

“ஓஓ… நான் பார்க்க ஆவலாக இருக்கிறேன் மன்னா?”

” பாஜகவில் எதிர்பார்த்தபடியே தமிழிசை தென் சென்னையில் களமிறங்கி இருக்கிறார். போட்டியிட விரும்பவில்லை என சொல்லிக்கொண்டிருந்த அண்ணாமலை கோவையில் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் கோவை தொகுதியில் சுற்றிக் களமாடவேண்டும். பாஜக நம்பிக்கொண்டிருக்கும் சில தொகுதிகளில் அதுவும் ஒன்று என்கிறார்கள் அக்கட்சிக்காரர்கள். ஆனால் அதிமுக-பாஜக மோதல் போக்கு உண்மை என்றால் வேலுமணி கடுமையான போட்டியை அண்ணாமலைக்கு உருவாக்குவார்… அப்படி இல்லாமல் போனால் அதிமுக உள்ளடி வேலைகள் நடந்தால் அது அண்ணாமலைக்கு ஆதரவாக அமையும் என்கிறார்கள். 36 வயதாகும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன், துடிப்பான இளைஞராகத் தெரிகிறார்! அண்ணாமலை கோவையில் போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்றுதான் சிபிஎம் கட்சியிடமிருந்து கோவையைப் பெற்று செந்தில்பாலாஜி ஆதரவுடன் கணபதி ராஜ்குமாரை திமுக நிறுத்தி இருக்கிறது. இந்த தேர்தலில் முக்கியமாக கவனிக்கப்படும் தொகுதியாக கோவைதான் இருக்கப்போகிறது”

‘மன்னா, ஒற்றர் படைத் தலைவர் ராஜ்பவன் செய்தி சில சொன்னார்’

“பொன்முடி விவகாரத்தில் உச்சநீதிமன்றக் குட்டு வாங்கினாரே ரவி.. அதைப் பற்றியா?’

“ஆமாம். திமுகவுக்கு எதிராகச் செயல்படுகிறேன் என்று அரசியல்சாசன சிக்கல்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம். அதே சமயம் திமுகவின் தவறுகளை வெளிப்படுத்தும் விதத்தில் பேசுமாறும் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஒரு கட்டத்தில் ஆளுநரை மாற்றலாமா என்றுகூட டெல்லியில் பேச்சு எழுந்திருக்கிறது. இந்த சமயத்தில் வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்களாம்!”

“ஆளுநர்கள் பதவியைத் துறந்து அரசியலில் குதிக்கும் காலமாயிற்றே இது!”

”பாமகவில் அன்புமணி விருப்பமே வென்றுள்ளது. ராமதாஸை மோடி கட்டியணைத்து வரவேற்றதைப் பார்த்தாய் அல்லவா?’

“பார்த்தேன். தருமபுரிக்கு அரசாங்கம் என்பவர் அறிவிக்கப்பட்டதையும் பின்னர் அவர் மாற்றப்பட்டு அன்புமணியின் துணைவியார் சௌமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும் கண்டேன்”

“சௌமியாவை நிறுத்தக்கூடும் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மருத்துவர் ராமதாஸ் ஆரம்பத்தில் அது வேண்டாம் எனச் சொன்னதாகச் சொல்லப்பட்டது. இடையில் என்ன நடந்ததோ… சௌமியா களமிறக்கப்பட்டார்! ஏற்கெனவே அன்புமணி மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் தயக்கம் காட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்”

“தருமபுரியில் சின்ன அய்யா துணைவியார் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் தம்பதி சகிதமாக நுழைவார்கள்.. இல்லையா? ’ என்றது குதிரை.

“நடக்கட்டும்” என்ற தேசிங்கு ராஜா யோசனையில் ஆழ்ந்தான். குதிரை மெல்ல நடந்து அகன்றது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com