சிலை திறப்பில் முதல்வருடன் டிஎம்எஸ் குடும்பத்தினர்
சிலை திறப்பில் முதல்வருடன் டிஎம்எஸ் குடும்பத்தினர்

பி.டி.ஆர். கலந்துகொள்ளாத முதல்வரின் மதுரை டி.எம்.எஸ். விழா!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று கலந்துகொண்ட டிஎம்சௌந்தர்ராஜன் சிலை திறப்பு நிகழ்வில், மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொள்ளவில்லை.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகிவிட்ட பின்னணிப் பாடகர் டி.எம்.எஸ். சௌந்தர்ராஜனின் நூற்றாண்டை முன்னிட்டு, மதுரை முனிச்சாலையில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது. அச்சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலையில் திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, சாத்தூர் இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, இரகுபதி, மு.பெ.சாமிநாதன், இராஜகண்ணப்பன் ஆகியோருடன் மதுரையைச் சேர்ந்த அமைச்சர் மூர்த்தியும் பங்கேற்றார். ஆனால் மதுரையைச் சேர்ந்த இன்னொரு அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை.

டிஎம்எஸ் சிலை திறப்பில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின்
டிஎம்எஸ் சிலை திறப்பில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின்

இதுபற்றி விசாரித்தபோது, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன், மலேசியாவில் கடந்த 13ஆம் தேதி முதல் வரும் 18ஆம் தேதிவரை நடைபெறும் தனியார் மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றுவிட்டார் என்று தெரியவந்தது. பணிச்சூழலியலும் மனித காரணிகளும் என்கிற பொருளில் நடத்தப்படும் அந்த மாநாட்டில், தமிழ்நாட்டின் மனிதவளத் துறை முன்னாள் அமைச்சர் எனும் முறையிலும் தியாகராஜன் அழைக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட பயணமாக இதில் கலந்துகொள்ளும் அவர், இதற்கு அனுமதி அளித்ததற்காக, முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக தன் சமூக ஊடகப் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.

மதுரையின் முக்கிய ஆளுமையான டி.எம்.சௌந்தரராஜனின் சிலை திறப்பில் அவர் பங்கேற்காதது நிகழ்வில் கேள்விகளை எழுப்பியது.

logo
Andhimazhai
www.andhimazhai.com