தேநீர் விருந்து ரத்து ஏன்? - ஆளுநர் மாளிகை விளக்கம்

தேநீர் விருந்து ரத்து ஏன்? - ஆளுநர் மாளிகை விளக்கம்

ஆளும் தி.மு.க. உட்பட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், நாளைய விருந்து நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர நாள், குடியரசு நாள், புத்தாண்டு போன்ற முக்கிய நாள்களில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறும். முதலமைச்சர் உட்பட்ட மாநில அமைச்சரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், பிற சமூக பிரபலங்கள் என பல தரப்பினரும் இந்த நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுவது வழக்கம்.

நாளை சுதந்திர நாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான அழைப்பும் அனைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், நீட் விவகாரத்தில் ஆளுநர் இரக்கமே இல்லாமல் பேசுகிறார் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்த முதலமைச்சர், தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த, நாளைய தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டணி கட்சிகளும் இதே முடிவை அறிவித்தன. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மட்டும் புறக்கணிப்பதாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், நாளைய விருந்தை மழை காரணமாக தள்ளிவைப்பதாக ஆளுநர் மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் அறிவிப்பில், “ தொடர் கன மழையால் கிண்டி, ஆளுநர் மாளிகையைப் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. நாளையும் இடிமின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, நாளைய ஆளுநர் இல்ல வரவேற்பு விருந்துக்கு வரும் விருந்தினர்களுக்கு வசதிக்குறைவு ஏற்படுவதைத் தவிர்க்கும்வகையில், நிகழ்வு ரத்து செய்யப்படுகிறது. ஆனால் இன்னொரு நாளில் இந்த நிகழ்வு நடைபெறும்.” என்று ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com