தூத்துக்குடி சோபியா
தூத்துக்குடி சோபியா

தமிழிசை வழக்கு- சோபியாவை விடுவித்ததன் காரணம் தெரியுமா?

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக முழக்கமிட்ட இளம் பெண் சோபியா 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் தமிழிசை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்தார். அப்போது உடன் பயணம்செய்த சோபியா என்கிற இளம் பெண், அப்போதைய மத்திய அரசின் நிலைப்பாடுகளைக் கண்டித்து, பாசிச பாஜக அரசு ஒழிக என்று முழக்கமிட்டார். இதனால் விமானத்தில் வந்தவர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழிசையின் புகாரின் பேரில் சோபியா மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர் தமிழிசை ஆளுநராக ஆனதால், விமான நிலைய இயக்குநர் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்டார். பிறகு தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையும் எதிர்மனுதாரராக இணைக்கப்பட்டார்.

இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சோபியா வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த நீதிபதி தனபால், நேற்று சோபியாவை வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.

சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களின் காவல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி, சோபியா மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தூத்துக்குடி காவல்துறையினருக்கு இதற்கு அதிகாரம் இல்லை என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அதை ஏற்று நீதிபதி உத்தரவைப் பிறப்பித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com