அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி வழக்கில் 6 மாதம் அவகாசம் தர உச்சநீதிமன்றம் மறுப்பு

வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் விசாரணையை நீட்டிக்க அனுமதி தரமுடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அடுத்த மாதத்துக்குள் முடிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையின் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக அறுபதுக்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக பிரச்னை எழுந்தது. உச்சநீதிமன்றம்வரை போன இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் சமாதானமாகச் சென்றனர். ஆனாலும் அதனாலேயே குற்றம் இல்லை என்றாகிவிடாது எனக் கூறி, அவர் மீதான விசாரணையை 2 மாதங்களில் நடத்தி முடிக்கவேண்டும் என்று கடந்த மே 14ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதையடுத்து, கடந்த மாதம் 14ஆம் தேதி புலன்விசாரணை அதிகாரி சார்பில், விசாரணையை முடிக்க 6 மாத காலம் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நேற்று விசாரித்த நீதிபதிகள் விக்ரம்நாத், அமானுல்லா கான் ஆகியோர், காவல்துறையின் மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். அரை மணி நேரத்தில் டிஜிபியிடம் கேட்டு பதில்கூறுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

உடனடியாக அரசிடம் கேட்டு பதில்கூறிய தமிழக அரசு வழக்குரைஞர்கள், 2 மாதங்களில் விசாரணையை முடிப்பதாகத் தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அடுத்த மாதம் 30ஆம் தேதிவரை விசாரணைக்கு அவகாசம் அளித்து உத்தரவிட்டனர். இதை நடைமுறைப்படுத்தாமல் விட்டால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com