தி.மு.க. மா.செ.கள் காணொலிக் கூட்டம்
தி.மு.க. மா.செ.கள் காணொலிக் கூட்டம்

தி.மு.க. மா.செ.கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் விட்ட டோஸ்!

தி.மு.க. நிர்வாகிகளுக்கு இடையில் ஒற்றுமையான போக்கு இல்லை என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டச்செயலாளர் கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வின் மறைந்த மூத்த தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது என அக்கட்சி தீர்மானித்துள்ளது. அதைப் பற்றி மாவட்டச்செயலாளர்களுடன் காணொலிவாயிலாக ஸ்டாலின் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

அப்போது, ”கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டமும் வரும் மக்களவைத் தேர்தல் பரப்புரையின் ஓர் அங்கம்தான்.” என்று வலியுறுத்திய அவர், வாக்குச்சாவடி வாரியாக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் நியமனம் பற்றியும் அவர்களுக்கான பயிற்சி பற்றியும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மீதான தன் அதிருப்தியையும் ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.

” சில மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை. இது பற்றிய தகவல் எனக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இது உங்களுக்கும் நல்லது இல்லை, கட்சிக்கும் நல்லது இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், சிலர் பொது மேடைகளிலேயே சண்டை போட்டதை வாட்சாப்பில் காட்சிகளாக நானே பார்க்கிறேன்.” என்றவர், தென்காசி விவகாரத்தையும் விவரித்துப் பேசினார்.

“ தென்காசியில் மாவட்டச்செயலாளருக்கும் ஒன்றியப் பெருந்தலைவருக்கும் இடையிலான மோதல் எல்லா ஊடகங்களும் இருக்கும்போதே ஆர்ப்பாட்டம் மேடையில் நடந்திருக்கிறது. அதையடுத்து அங்கு மாவட்டச்செயலாளர் மாற்றப்பட்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும்.” என்றும்,

“ அமைச்சர் மஸ்தான் இருக்கும் மாவட்டத்தில் நேருக்கு நேராக மோதல் ஏற்பட்டிருக்கிறது. மைக் முன்னாலேயே தன்னைக் கேள்வி கேட்பவருக்கு அமைச்சர் பதில் சொல்கிறார். இதை எல்லா தொலைக்காட்சி ஊடகங்களும் பதிவு செய்துகொண்டிருந்தன. இதுகூட அமைச்சருக்குத் தெரியவில்லை.” என்றும்,

“ தி.மு.க. எல்லா தொண்டர்களுக்கும் பொதுவான ஒரு கட்சி. நிர்வாகிகளுக்கு மட்டுமே இந்தக் கட்சி சொந்தமில்லை. ஆட்சி அனைவருக்கும் பொதுவானது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும்தான் சொந்தமானது அல்ல. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அண்ணா பயப்பட்டார், மகிழ்ச்சி அடையவில்லை. கட்சி என்ன ஆகும் என கவலைப்பட்டார். கட்சியையும் ஆட்சியையும் ‘கலைஞர்’ ஒருசேர வளர்த்தெடுத்தார். அவருடைய வழியை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். ஆட்சியைப் பிடிக்க கட்சி பயன்பட வேண்டும்; கட்சியை வலுப்படுத்த ஆட்சி துணையாக இருக்கவேண்டும். இதற்கு அமைச்சர்களும் மாவட்டச்செயலாளர்களும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒரே சிந்தனையோடு, ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். ” என்றும் மு.க. ஸ்டாலின் பேசியதாக, தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com