திமுகவும் ஜென்ஸீயும்: மாற்றங்கள் கவருமா?

திமுகவும் ஜென்ஸீயும்: மாற்றங்கள் கவருமா?
Published on

சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது பெரும்பாலும் தோல்வியின் அழுத்தங்கள் வெளிப்படுத்திய உண்மைகள் ஆகும். இதுபோன்ற வெளிப்படையான பேச்சுகள் தேவை என்பது தி.மு.க. இன்று இருக்கும் நிலையில் மிக அவசியமான ஒன்று.

2019-லிருந்து வெற்றியை ருசித்துவந்த கட்சி, 2026 தோல்விக்குப் பிறகு தன்னை மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அதுவும் தி.மு.க.வுக்கு மாற்றாக இரு துருவ அரசியலில் களமாடிவந்த அ.தி.மு.க.வை ஓரங்கட்டிவிட்டு, கட்சி தொடங்கிய இரண்டே வருடங்களில் ஆட்சியைப் பிடித்த நடிகர் விஜய், 77 வருட கட்சியைக் கலங்கடித்துவிட்டார் என்பது நிதர்சனம்.

இந்த அதிர்ச்சியிலிருந்து தி.மு.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் இன்னமும் மீண்டெழவில்லை என்பதும் உண்மை. எனவே அவர்களைத் தட்டியெழுப்ப, உற்சாகப்படுத்த, த.வெ.க.வுக்கு எதிராக வளிமையாக அரசியல் செய்ய, நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் செய்வது என்பது இப்போதைய அவசர தேவை. இது கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு. இனியும் தாமதித்தால் "கட்சி கலகலத்துப் போய்விடும்" என்ற நிலையில் தலைமை விழித்துக் கொண்டது. இது ஒரு வகையில் பார்த்தால் தேன்கூட்டில் கை வைக்கும் செயல்பாடு தான். ஏனென்றால் தி.மு.க.வின் கட்டமைப்பு அப்படி. அங்கு சீனியாரிட்டி விசுவாசத்தை விட முக்கியம். அதன் காரணமாகவே மாற்றங்களைப்பற்றி யோசிப்பதற்கே யோசிப்பார்கள்.

“இனி தள்ளிப் போட முடியாது" என்ற நிலையில்தான் செயற்குழுவில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் ஸ்டாலின். செய்யப்போகும் மாற்றங்கள் குறுநில மன்னர்களாக இருக்கும் சீனியர்களை பதற்றப்பட வைக்கும் என்று அவருக்குத் தெரியும். எனவேதான் பேசும்போது, “இந்த மாற்றங்கள் கசப்பாகத்தான் இருக்கும். கசப்பு தான் உடலுக்கு நன்மை செய்யும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்,’’ என்றார் அவர்.

அப்படி என்னதான் மாற்றங்களை செய்யவிருக்கிறார் ஸ்டாலின்?

77 கட்சி மாவட்டங்கள், 110 கட்சி மாவட்டங்கள் ஆகின்றன. கிளைக் கழக செயலாளருக்கு அதிகபட்சம் 45 வயது தான் இருக்க வேண்டும். இரண்டு முறைக்கு மேல் பதவி கிடையாது. மாவட்டச் செயலாளருக்கு வயது வரம்பு 70. ஆனால் மூன்று முறை பதவியில் இருக்கலாம். இடையில் நகர, ஒன்றிய, செயலாளர்களுக்கும் 50, 60 என்ற வயது வரம்பு. நியமனங்கள் கிடையாது. கட்சித் தேர்தல் மூலம்தான் பொறுப்புக்கு வர முடியும்!

இந்த மாற்றங்களும் தி.மு.க. தொண்டர்களை உற்சாகப்பட வைத்திருக்கின்றன. தேர்தல் தோல்வி ஏற்பட்டதால் தான் இந்த மாற்றங்கள் வந்திருக்கின்றன. வென்றிருந்தால் மாவட்டங்களில் குறுநில மன்னர்களின் குடும்ப வாரிசுகளின் ஆட்சியே தொடர்ந்து இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

தி.மு.க. தோற்றதால் மட்டுமல்ல; த.வெ.க. வென்றதால்தான் இந்த மாற்றங்களுக்கான தேவை வந்துவிட்டது என்பதையும் மறுக்க முடியாது. குறிப்பாக விஜய்க்கு ஜென்ஸீ தலைமுறை இளைஞர்கள் ஆதரவு கணிசமாக இருக்கிறது என்ற உண்மை நிலை, முதியவர்கள் பெரும்பான்மையாக நிர்வாகிகளாக இருக்கிற திமுகவில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையை விரைவுபடுத்தி இருக்கிறது.

பழைய மாவட்டச் செயலாளர்களின் 77 பேரில் 22 பேருக்கு இனி வாய்ப்பு கிடையாது. அவர்களில் 10 பேர் இருபது வருடங்களுக்கும் மேல் பதவியில் இருப்பவர்கள். அதிலும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 34 ஆண்டுகளாக ஒரே பதவியில் இருக்கிறார். புதிதாக உருவாக்கப்படும் முப்பத்து மூன்று மாவட்டங்களையும் சேர்த்து 55 பேருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கப் போகிறது.

திமுக நிர்வாகிகளின் ஜென்ஸீ மகன்களும் மகள்களுமே கடந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை. இதைப் புரிந்து கொண்டு தான் ஸ்டாலின், ‘கட்சிக்காரர்கள் முதலில் அவர்கள் வீட்டில் அரசியல் பேச வேண்டும்; உறவினர்களிடம் அரசியல் பேச வேண்டும்’ என்கிறார். திமுக குடும்பத்து ஜென்ஸீகள் கட்சிக்கு ஓட்டு போடாததற்கு முக்கிய காரணம், பல தசாப்தங்களாக கட்சிக்கு உழைத்துக் கொண்டிருக்கிற தங்கள் தந்தைக்கு, தாத்தாவுக்கு கட்சி எதுவும் செய்யவில்லை என்பதுதான். ஏன் இந்த நிலை? அதற்கான பதிலையும் ஸ்டாலின் தனது பேச்சில் சொல்கிறார். “மாற்றுக் கட்சி இளைஞர்களைப் பார்த்து வணக்கம் சொல்லும் நமது சில அமைச்சர்கள் நமது கட்சிக்காரர்களைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டு போவதும் எனக்குத் தெரியும்.”

இது மட்டுமல்ல ஏதாவது சிபாரிசுக்குப் போனால் சில அமைச்சர்கள் நீ கட்சிக்காரனாக இருந்தால் செய்ய வேண்டுமா என்று கடுப்படித்து அனுப்பி இருக்கிறார்கள். இதன் காரணமாக நிர்வாகிகள் சோர்ந்துபோன நிலையில் திமுக குடும்பத்து ஜென்ஸீ எப்படி ஓட்டுப் போடுவான்?

எனவே கட்சி நிர்வாக அமைப்பில் மாற்றம் என்பது எந்த கட்சியையும் சாராத ஜென்ஸீக்களை மட்டுமல்லாமல் திமுக குடும்பத்து ஜென்ஸீக்களையும் கவர அவசியமும் இருக்கிறது. இந்தச் சூழலில் கட்சித்தலைமை தேர்தலை நடத்த இருக்கிறது. புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடக்க இருக்கிறது.

உதயநிதி இளைஞரணி செயலாளரான பிறகு 50 லட்சம் உறுப்பினர்களை இளைஞர் அணிக்குச் சேர்த்தார் என்றார்கள். அதிலும் இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியல் முரசொலியில் பல நாள்கள் முழுப்பக்கங்களில் வந்து கொண்டிருந்தது. தேர்தலின் போது அவர்கள் எப்படி மாயமாய்ப் போனார்கள் என்று கட்சி தான் ஆராய வேண்டும்.

இப்போது கட்சிக்காரர்களின் கவலை என்னவாக இருக்கிறது என்றால் ‘தேர்தல் ஒழுங்காக நடக்குமா?’ என்பதுதான். ஏற்கனவே மாவட்டங்களில் கட்சியைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் பழம் பெருச்சாளிகளான நிர்வாகிகள் தங்கள் வாரிசுகளைக் களம் இறக்கினால் என்ன செய்வது என்ற கலக்கம் பலருக்கும் இருக்கிறது.

எந்தக் குடும்ப பின்னணியும் இல்லாத கழகத்திற்காக பல ஆண்டுகள் கடுமையாக உழைத்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமே என்ற கவலையும் பரவலாக இருக்கிறது. திமுக தலைமை இதைக் கணக்கில் கொள்ள வேண்டும்; இரு தரப்புகளையும் பேலன்ஸ் செய்ய வேண்டும்.

1977-1991 போன்ற நெருக்கடியான காலகட்டங்களில்கூட உட்கட்சி ஜனநாயகத்தை நிலைநிறுத்த தேர்தல்களை நடத்தி இருக்கிறது திமுக. இப்போது இரு துருவ அரசியலில் புதிய சவாலாக இளமை ததும்ப எதிரே நிற்கிறது த.வெ.க. இந்த நிலையில் இரு கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் திமுக இருக்கிறது ஒன்று மிக விரைவாக உட்கட்சித் தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் காத்திரமாக மக்களிடையே எதிர்க்கட்சி அரசியல் செய்ய வேண்டும். போராட்டம், ஆர்ப்பாட்டம் என்ற கட்சியின் அறிவிப்பு செயலாக்கம் பெற வேண்டும்.

“நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை. வி ஆர் ஸ்பெஷலிஸ்ட்ஸ் இன் கம்பேக்ஸ்,” என்கிறார் ஸ்டாலின். கடந்த காலங்களில் அது சாத்தியமானது. ஆனால் புதிய சூழலில் அது சற்றுக் கடினமாகவும் சவாலாகவும் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

(ப்ரியன், மூத்த பத்திரிகையாளர்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com