கோப்புப் படம்
கோப்புப் படம்

ரியல் மும்முனைப் போட்டி எந்த தொகுதிகளில்?

தேசிங்கு ராசாவும் குதிரையும் - அரசியல் கிசுகிசு பகுதி

உச்சி வெயிலில் கோட்டைச் சுவர் உருகி வழிவதுபோல் பளபளத்தது. குதிரையை அகலமான மரநிழலில் நிறுத்திவிட்டு தேசிங்கு ராஜா குதித்தான்.

“எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது தேர்தல் பிரச்சாரமெல்லாம்?’’ என்று குதிரையிடம் கேட்டான்.

“முதல்வாரம் மந்தமாக இருந்து, இரண்டாவது வாரம் சூடு பிடித்துவிட்டது. இருப்பினும் வெயில் காரணமாக பல இடங்களில் ஆட்கள் சிரமப்படுகிறார்கள்.  இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அதிமுக தரப்பில் சற்று சுணக்கமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். வாக்கு வங்கி அப்படியே இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பு கம்மியாக இருக்கிறதாம். குறிப்பாக கூட்டணிக் கட்சிகள் நிற்கும் இடங்களில் சோர்வுதானாம்! எடப்பாடியாரின் பிரச்சாரம் எடுபடுகிறது என்றாலும் பலர் சும்மா பேருக்கு வேலை பார்த்து ஒதுங்குவதாகவும் வைட்டமின் சத்து குறைவாகப் பாய்வதாகவும் பேச்சு இருக்கிறது!’

‘ஓ’

“ பாஜகவைப் பொறுத்தவரையில் அவர்களின் வலிமை அவர்களுக்குத் தெரியும். வாக்கு வங்கியை ஏற்றிக்காண்பிப்பதுதான் அவர்களின் இலக்கு. ஒன்றிரண்டு தொகுதிகள் வெல்ல முடிந்தால் ரொம்ப சந்தோஷப்படுவார்கள். சுமார் மூன்று தொகுதிகள் வரை அவர்கள் இரண்டாம் இடம் பிடிப்பது உறுதியாம்!”

“சரி.. பிரதமரைத் தவிர வேறு மத்திய அமைச்சர்கள் யாரும் பிரச்சாரக்கூட்டத்துக்கு தமிழகம் வருவதாகத் தெர்யவில்லையே..’’

‘’மோடி அடிக்கடி வருகிறாரே… அதைவிட வேறு தேவையா? அமித்ஷா வருவதாக இருந்தது ரத்து ஆகிவிட்டது! மற்ற அமைச்சர்கள் அவரவர் தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடுவதால் இங்கே வர முடியவில்லை என்கிறார்கள்”

“ஓ… அதுதான் காரணமா? வேறு ஏதாவது உள் குத்தா எனத் தெரியவில்லையே…”

”மன்னா… உமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை..” என குதிரை சிரித்தது.

“ பழைய செய்தி ஒன்று… 1962-தேர்தலில் அப்போதைய பிரதமர் நேரு, பிரச்சாரத்துக்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை தமிழ்நாட்டுக்கு வந்தாராம்! அதைப் பார்த்ததும் அப்போது சுதந்திரா கட்சி நடத்திக்கொண்டிருந்த ராஜாஜி,’ நோயாளி மோசமாக இருந்தால்தான் பெரிய டாக்டர் அடிக்கடி பார்க்க வருவார்’ என்று கிண்டல் செய்தாராம்!”

“அனேகமாக மன்னா, இந்த செய்தி உமக்குத் நேரடியாகத் தெரிய வாய்ப்பில்லை.. ஒற்றர் படைத் தலைவர்தான் சொல்லி இருப்பார்!’

“ குதிரையே…” கடுகடுத்தான் தேசிங்கு.

“ சரி விடுங்கள்… நேரு பற்றிப் பேசுகிறீர்கள்… இந்தியாவின் முதல் பிரதமர் நேரு கிடையாது.. சுபாஷ் சந்திரபோஸ்தான் என கங்கனா ரணாவது சொல்லியது சமூக ஊடகங்களில் பரவாலாக கவனம் பெற்றதே கவனித்தீர்களா?’’

“ஆம்.. இது வழக்கமாக பாஜகவில் சொல்லப்படுவதுதானே…” என்ற தேசிங்கு ‘திமுக சார்பில் மின்னணு வாக்கு எந்திரங்களில் வரும் ஒப்புகைச் சீட்டுகளை தொகுதி முழுக்க எண்ணவேண்டும் என்று சொல்லி வழக்குப் போட்டிருக்கிறார்களே?’ எனக் கேட்டான்.

“ஆமாம். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஐந்து வாக்குச் சாவடிகளை மட்டும் மாதிரிக்கு எடுத்து ஒப்புகைச் சீட்டுகளை எண்ணிச் சரிபார்ப்போம் என தேர்தல் ஆணையம் சொன்னது. கூடாது எல்லா சாவடிகளிலும் கிடைக்கும் ஒப்புகை சீட்டுகளை எண்ணவேண்டும் என திமுக கேட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வர உள்ளன. இதில் நாம் தமிழர் கட்சி சார்பாகவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்ய இருக்கிறார்களாம்!’’

‘’அரசியல் தகவல்களாகவே இருக்கிறது…. ஏதாவது இதைத்தாண்டி வெளித் தகவல் உண்டா?’’

“சைக்கிள் ஓட்டும் பழக்கம் கொண்ட ஒரு பத்திரிகை அதிபர் இருக்கிறார்.. இந்த தேர்தல் சமயம் பார்த்து சைக்கிளில் இருந்து விழுந்து இரு கைகளிலும் அடி… மருத்துவமனையில் உள்ளார். சீக்கிரம் குணமடைய நம் சமஸ்தானத்தின் வாழ்த்துகளைத்தெரிவிக்கலாமே..”

“ஓ… கட்டாயம் தெரிவிப்போம்” என்ற தேசிங்கை நோக்கி தூதுப் புறா ஒன்று பறந்துவந்தது. அதைப் பிடித்து காலில் கட்டியிருந்த ஓலையைப் படித்தான் தேசிங்கு.

“தர்மபுரி, கோவை, தேனி, நெல்லை, வேலூர் ஆகிய தொகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவுகிறது என ஒற்றர் படைத் தலைவர் செய்தி போட்டிருக்கிறார்!”

“ இவ்வளவு லேட்டாகச் சொல்கிறாரே…அவரும் வெயிலால் பாதிக்கப்பட்டிருப்பார் போலிருக்கிறது” என குதிரை சிரிக்க, தேசிங்கு கோபப்பார்வையுடன் நடையைக் கட்டினான்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com