தேவையற்ற வந்தே மாதரம் சர்ச்சை: சந்தேகம் கிளப்பும் அரசின் நோக்கம்!

இந்திய நாடாளுமன்ற அவை
இந்திய நாடாளுமன்ற அவை
Published on

வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம் நவம்பர் 7, 2025 அன்று நடைபெற்றது. அதற்கு வெகு முன்னதாகவே, இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். ரஹ்மான், வந்தே மாதரம் பாடலின் இசையை அடிப்படையாகக் கொண்டு “மா துஜே சலாம்” என்ற ஆல்பத்தை வெளியிட்டார். அந்தப் பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அப்படி இருக்கும்போது திடீரென வந்தே மாதரம் மீதான இந்த புதிய கவனம் எதற்காக? நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, இந்த அசல் பாடலின் சில வார்த்தைகள் ஒரு சில பிரிவினரை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு இது காங்கிரஸின் துரோகம் என ஏன் சொல்லப்பட்டது?

இப்போதைய அரசு அந்த பாடல் ‘சிதைக்கப்பட்டதாகக்’ கூறுகிறது. ஆனால் அதன் அடிப்படை அக்டோபர் 30, 1937 அன்று கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழு (CWC) கூட்டத்தில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ தீர்மானங்களின் ஒரு பகுதி ஆகும். அந்தக் கூட்டம் ஜவஹர்லால் நேரு தலைமையின் நடந்தது. கூட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத், மௌலானா அபுல்கலாம் ஆசாத், புலாபாய் தேசாய், ஜம்னாலால் பஜாஜ், ஆச்சார்யா ஜே.பி. கிருபாலனி (பொதுச் செயலாளர்), பட்டாபி சீதாராமையா, ராஜாஜி, ஆச்சார்யா நரேந்திரதேவ், ஜெயப்பிரகாஷ் நாராயணன், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய முக்கியமான தேசிய தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். மகாத்மா காந்தி CWC உறுப்பினராக இல்லாவிட்டாலும், அவர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தீர்மானங்களை இறுதிசெய்வதில் பங்கேற்றார்.

அந்தத் தீர்மானத்தை ராஜேந்திர பிரசாத்( பின்னாளில் இந்திய குடியரசுத்தலைவர்) முன்மொழிந்தார்; சர்தார் பட்டேல்( சுதந்தர இந்தியாவின் உள்துறை அமைச்சர்) வழிமொழிந்தார்.

அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது: ”காங்கிரஸ் கீதமான ‘வந்தே மாதரம்’ குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளை காங்கிரஸின் செயற்குழு கவனமாகப் பரிசீலித்தது. இந்தப் பாடல் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. நமது சுதந்திரப் போராட்டத்தில் ஆழமான உற்சாகத்தையும் சக்திவாய்ந்த உணர்வுகளையும் உருவாக்கியுள்ளது. ஆகவே இப்பாடலுக்கு நம் தேசிய இயக்கத்தில் முக்கியமான இடம் உருவாகியுள்ளது. அதேசமயம் இந்த பாடலின் சில வரிகளுக்கு நம் முஸ்லிம் நண்பர்கள் எழுப்பிய எதிர்ப்புகளில் நியாயம் இருப்பதை பணிக்குழு உணர்கிறது.இந்த எதிர்ப்புகளைக் கவனித்து அது நியாயமானது என்று உணர்ந்த நிலையில் இதை விவாதமாக்க விரும்பவில்லை. ஆகவே, பொதுவாக காங்கிரஸ் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வந்த இப்பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டும் தேசியப் பாடலாக ஏற்கப்பட வேண்டும் என்று குழு முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு பத்திகளும் எதிர்ப்பாளர்கள் கூறிய கோணத்திலும் எந்தவிதமான குறையும் இல்லாதவை. இவை பாடலின் சாராம்சத்தை கொண்டவை. தேசிய நிகழ்ச்சிகளில் எங்கு வந்தேமாதரம் பாடல் பாடப்பட்டாலும் இந்த இருபத்திகள் மட்டுமே பாடப்படவேண்டும், ரவீந்திரநாத் தாகூர் அமைத்த இசைவடிவமே பயன்படுத்தப்பட வேண்டும் என இக்குழு பரிந்துரைக்கிறது. இந்த முடிவு நாட்டின் அனைத்து சமூகங்களாலும் ஏற்கப்படும் என நம்புகிறோம்.”

பிரதமர் நரேந்திர மோடி இப்போது மறைமுகமாகக் குறிவைக்கும் காங்கிரஸ் தீர்மானம் இது. சர்தார் பட்டேல் உட்பட அனைத்து தலைவர்களும் பங்கேற்றிருந்த காங்கிரஸ் குழு அது. ஆனால் பெரிய தேசியத் தலைவர்கள் குழுவையே அவர் குறிவைத்துத் தாக்கி இருப்பதை உணர்ந்துள்ளாரா? அவர்களின் குறிப்பிட்ட சில பேச்சுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் பலனுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

நாடாளுமன்றத்தில் இதை விவாதிப்பதன் நோக்கம் என்ன? அரசியல்சாசன அவையில் முடிவெடுக்கப்பட்ட ஒரு விஷயத்தின் மீது இரண்டாவதுமுறை விவாதிக்கவா? வந்தே மாதரம் பாடலை பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் இயற்றினார். அது பங்கதர்ஷன் என்ற இலக்கிய இதழில் 1875-இல் முதலில் வெளியானது. 1896 காங்கிரஸ் மாநாட்டில் தாகூரால் பாடப்பட்டது. வங்கப்பிரிவினைக்கு முன்னரே இவையெல்லாம் நடந்துமுடிந்திருந்தன.

பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்
பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்

தேசிய விடுதலை இயக்கத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் இந்தப் பாடல் உணர்ச்சியுடன் பாடப்பட்டது. இந்த விடுதலை இயக்கங்களில் இஸ்லாமியர்களும் பெருமளவு பங்கு வகித்தனர். 1935 இல் இந்திய அரசு சட்டம் உருவாக்கப்பட்டபோது இந்தியர்களுக்கு தேர்தல்களில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. மாகாண சட்டசபை, மத்திய சட்ட மன்றத்தில் அவர்கள் நுழைந்தனர். 1937-இல் நடைபெற்ற தேர்தல்களில் பங்கெடுப்பது என்பது உள்கட்சிப் பின்விளைவுகளை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மாகாண சட்டசபைகளைக் கைப்பற்றியது. சிலவற்றை முஸ்லிம் லீக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபோது வேறுபட்ட கலாச்சாரங்களை உறுதிப்படுத்தும் கடமை அதற்கு இருந்தது. அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவதையும் உறுதிப்படுத்தியது. கல்கத்தா மாநாட்டில்தான் இந்தியர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட ஏதுவாக திருத்தப்பட்ட வந்தே மாதரம் பாடலைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பாடலில் இந்துப் பெண் தெய்வங்களைப் பற்றிய பதிவுகள் இருந்தன, பல்வேறு மதக்குழுக்களின் விரிவான ஒற்றுமை வேண்டுமெனில் இப்பாடலின் சாரம் குறித்த அடிப்படை புரிதல் அவசியமாக இருந்தது.

நடைமுறை சார்ந்த இந்த முடிவுதான் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடவும் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருக்கவும் உதவி செய்தது. 1939 இல் பிரிட்டிஷ் இந்தியாவின் எட்டு மாகாணங்களில் காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின.

பின்னாளில் அரசியல் நிர்ணய சபை 1947-இல் கூடியபோது இடைக்கால நாடாளுமன்றமே அரசியல் நிர்ணய சபையாகவும் செயல்பட்டது. அதில் 208 காங்கிரஸ் உறுப்பினர்கள், 73 முஸ்லிம் லீக் உறுப்பினர்கள், 15 மற்றைய அமைப்பு உறுப்பினர்கள் இடம் பெற்று இருந்தனர். இந்திய சமஸ்தானங்களில் இருந்து நியமிக்கப்பட்ட 93 உறுப்பினர்களையும் சேர்த்து 389 உறுப்பினர்கள் இருந்தனர். பிரிவினைக்குப் பின் அரசியல் நிர்ணய சபையில் இருந்து முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் விலகியதைத் தொடர்ந்து 299 உறுப்பினர்களே இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள். இங்கு ஒருவிஷயத்தைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். முஸ்லிம் லீக்கினர் அதிகமாக இருந்த வங்காள சட்டசபையில் இருந்துதான் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்வானார். பிரிவினைக்குப் பின்னால் அவரால் தொடர முடியவில்லை. அதன் பின்னர் பம்பாய் ஆளுர் மூலமாக அம்பேத்கரை நிர்ணய சபைக்கு நியமனம் செய்யும் முடிவை நேருதான் எடுத்தார்.

அரசியலமைப்பு சபைக்கு நாட்டிற்கான தேசிய கீதம் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. இதற்கான தேர்வில் இருந்த மூன்று முக்கியமான பாடல்களை உறுப்பினர்கள் கேட்க வைக்கப்பட்டனர் — அவை வந்தே மாதரம், சாரே ஜஹான் சே அச்சா, ஜன கண மன.

மதச்சார்பற்றதாகவும், அணிவகுப்பு தாளத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும் சாரே ஜஹான் சே அச்சா தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஏனெனில் அப்பாடலின் ஆசிரியர் அல்லாமா முகமது இக்பால், தீவிர பாகிஸ்தான் ஆதரவாளராக மாறியிருந்தார்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அவையில் 1949 இல் அரசியல் சாசனத்தின் இறுதி வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரும், 1950 இல் அது நடைமுறைக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும், வந்தே மாதரம் ஒரு குழுவினரால் அவையில் பாடப்பட்டது.

எனினும், உறுப்பினர்கள் ஜன கண மன-விற்கு ஆதரவாக இருந்தனர். அதுவே தேசிய பாடலாக இருக்கும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். ஆனால் 395 சரத்துக்களைக் கொண்ட அரசியலமைப்பு, எந்தவொரு தேசிய பாடலையும் அரசியலமைப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக ஒருபோதும் குறிப்பிடவில்லை.

இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டம்
இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டம்

1976-இல்தான் இந்திரா காந்தியின் பதவிக்காலத்தில், 42வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் சரத்து 51ஏ இன் கீழ் ஒரு அடிப்படை கடமைக்கான பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது (இது ஒவ்வொரு குடிமகனும் அரசியலமைப்பிற்கு இணங்க வேண்டும் மற்றும் அதன் இலட்சியங்கள், நிறுவனங்கள், தேசிய கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும் என்று கடமைப்படுத்தும் ஒரு உட்பிரிவையும் கொ ண்டிருந்தது).

பின்னாளில் தேசிய கவுரவத்தை அவமதிப்புகள் தடுப்புச் சட்டம், 1971-ன் கீழ், தேசிய கீதத்தை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது.

பிஜோ இம்மானுவேல் எதிர் கேரள மாநிலம் வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம், மத சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமைகளை நிலைநிறுத்தியது. ஆனால், பொது ஒழுங்கிற்கு இடையூறு விளைவிக்காமல் அல்லது தேசிய சின்னங்களுக்கு அவமரியாதையைக் காட்டாமல் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இதை நிலைநிறுத்தியது.

பெரும்பான்மையாக இந்துக்களைக் கொண்டிருந்தபோதிலும், அரசியலமைப்பு சபை ஜன கண மன-வை தேசிய கீதமாகத் தேர்ந்தெடுத்ததுடன், வந்தே மாதரம் அதன் ஏற்கப்பட்ட வடிவத்தின் கீழ் தேசிய பாடலாக இருக்கும் என்ற கருத்தைக் கொண்டிருந்தது.

இந்த பின்னணியில்தான், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், சரத்து 51ஏ இன் கீழ் ஒரு புதிய அடிப்படை கடமையாக, ஜன கண மன-வுக்குக் கொடுக்கப்படும் அதே மரியாதையை வந்தே மாதரத்திற்கும் வழங்கலாமா என்று பரிசீலிக்குமாறு திடீரென விடுத்த கோரிக்கையைப் பார்க்கவேண்டியுள்ளது.

2017 ஆம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி. முரளிதரன், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, பள்ளிகள் வாரத்திற்கு ஒரு முறையாவது வந்தே மாதரத்தைப் பாட வேண்டும், மேலும் அலுவலகங்களில் மாதத்திற்கு ஒரு முறை பாட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த பாடல் பிற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மாதத்திற்கு ஒரு முறையாவது இசைக்கப்படலாம் என்று குறிப்பிட்ட நீதிபதி, இப்பாடலை வங்காளம் அல்லது சமஸ்கிருதத்தில் பாடுவது மிகவும் கடினம் என்று மக்கள் கருதினால், தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினார்.

டெல்லி உயர் நீதிமன்றம், வந்தே மாதரத்தை தேசிய கீதத்திற்கு இணையாகக் கருதும்படி இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதே நரேந்திர மோடி அரசுதான் தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் ஆகிய இரண்டும் தனிச்சிறப்புடையவை, சமமான மரியாதைக்குரியவை என்று நீதிமன்றத்தில் கூறியது.

இருப்பினும், இந்த வழக்கு விசாரணை ஒரு ரிட் மனுவின் (Writ Petition) பொருண்மையின் கீழ் வர முடியாது என்றும் அரசாங்கம் கூறியது.

தேசிய கீதத்திற்கு இணையான சட்டபூர்வமான அந்தஸ்தை தேசியப் பாடலுக்கு வழங்குவதை எதிர்த்து மோடி அரசு நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தது. அதற்கு, தேசிய கவுரவத்தை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971-ஐ சுட்டிக் காட்டியது. இந்தச் சட்டம் தேசிய கீதத்திற்குக் குந்தகம் விளைவிப்பதை குற்றமாக ஆக்குகிறது. ஆனால், இதற்கு இணையாக தேசியப் பாடலுக்கு அத்தகைய ஏற்பாடு இல்லை. இவ்வேறுபாட்டை அது குறிப்பிட்டது.

இந்த விஷயம் அரசியலமைப்பு சபையால் தீர்மானிக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்போது தேசிய பாடல் தொடர்பாக உருவாக்க முற்படும் புதிய சர்ச்சை, தற்போதைய அரசின் நோக்கங்கள் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைப் போன்றே, நாடாளுமன்றத்தில் ஒரு சாதாரண தீர்மானம் கொண்டுவந்து தேசியப் பாடலை மாற்றியமைக்கும் ஒரு திட்டம் உள்ளதா?

ஒன்றுமில்லாத ஒரு விஷயத்திற்கு இப்போது கொடுக்கப்படும் முக்கியத்துவமும் விளம்பரமும், இது நரேந்திர மோடி அரசின் அடுத்த நகர்வாக இருக்கலாம் என்று நினைக்க வைக்கிறது — அதாவது இந்திய அரசியல் சாசனம் அல்லது வேறெந்தச் சட்டத்திலோ மாற்றம் செய்யாமலேயே நாட்டிற்கு வேறொரு தேசிய கீதத்தைக் கொண்டு வருவதுதான் அந்த நகர்வு.

கே.சந்துரு, ஓய்வுபெற்ற நீதிபதி
கே.சந்துரு, ஓய்வுபெற்ற நீதிபதி

( நன்றி: The Hindu. தமிழாக்கம்: அந்திமழை ஆசிரியர் குழு )

logo
Andhimazhai
www.andhimazhai.com