மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து... தொடரும் சர்ச்சை!

Velmurugan
தி. வேல்முருகன்
Published on

தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கலந்துகொண்ட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழாவில், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “ முதன்முறையாக தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது. வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேட்டவர், இப்போது இதைக் கண்டித்து ஏதாவது பேசுவாரா?” என்று கேட்டுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,

"தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் பெயரைத் தாங்கும் பல்கலைக்கழகத்திலேயே, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ள முயல்வது, தமிழர் மீதும், மொழி அடையாளத்தின் மீதும், அரசியல் உரிமையின் மீதும் நடத்தப்படும் ஆதிக்க அரசியலாகும்.

ஆளுநர் மாளிகையின் விருப்பத்தைத் திணிக்க முயல்வது, தமிழ்நாட்டின் பண்பாட்டு உரிமைகளை அவமதிக்கும் செயல்பாடாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புக்குள் செயல்பட வேண்டிய ஆளுநர், மாநிலத்தின் அடையாளங்களை நிர்ணயிக்கும் நிலைக்கு தம்மை உயர்த்திக் கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தமிழின் பெருமையையும் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியையும் காக்க வேண்டிய துணைவேந்தர், அதிகாரத்திற்கு அடிபணிந்து தமிழ்த்தாயின் மரியாதையை விட்டுக்கொடுப்பது, அவரது பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்த செயலல்ல. இந்த அணுகுமுறை கடுமையான கண்டனத்திற்குரியது.

எனவே, தமிழ்நாடு அரசு இதை எந்தச் சூழலிலும் அனுமதிக்க கூடாது. ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உட்பட, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசுப் பல்கலைக்கழகம் மற்றும் அரசு சார்ந்த நிகழ்வுகளிலும், தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்பட வேண்டும் என்பதைத் தமிழ்நாட்டின் மாற்ற முடியாத கொள்கை முடிவாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

எந்த அரசியல் அழுத்தத்திற்காகவும் தமிழ்த்தாயின் மரியாதையில் சமரசம் செய்யக்கூடாது எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com