‘எங்கள் கட்சியில் சாராய ஆலை அதிபர் யாரும் இல்லை!’

எஸ்.சங்கர்
எஸ்.சங்கர்
Published on

சென்னை அண்ணா நகர் தொகுதியில்  நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டாவதுமுறையாக சட்டமன்றத் தேர்தலில் களம் காண்கிறார் வழக்கறிஞர் எஸ்.சங்கர். இவர் அந்த கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர்.  கடந்த தேர்தலில் 10,406 வாக்குகளை நா.த.க. சார்பில் இவர் இத்தொகுதியில் பெற்றிருந்தார். திமுக சார்பாக சிற்றரசுவும் அதிமுக சார்பாக கோகுல இந்திராவும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு இடையில் தற்போது களத்தில்  சுற்றி வாக்கு சேகரித்துவரும் சங்கரிடம் பேசினோம்.

தேர்தல் வேலைகளைத் தொடங்கி இருக்கிறீர்கள்… தொகுதிக்குள் நிலவரம் எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்? 

பிரச்சாரத்துக்காக எங்கள் தொகுதி மக்கள் பலரையும் சந்தித்துப் பேசிவருகிறேன். அண்ணா நகர் என்றாலே பெரும் செல்வந்தர்கள் நிரம்பிய தொகுதி என்றுதான் நினைக்கிறார்கள். இது கிட்டத்தட்ட எண்பது சதவீதம் மத்திய தர மக்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிக்கும் மக்கள் வசிக்கும் தொகுதியாகத் தான் உள்ளது.  இந்த பெரும்பான்மை மக்களுக்கு எவ்விதமான மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்படவே இல்லை. இடவசதி யின்மை, போக்குவரத்து நெருக்கடி, சாலை, குடிநீர் வசதிகளோ மக்கள் தொகைக்கு ஏற்பசெய்யப்படவில்லை.  திமுகவின் எம் கே மோகன் கடந்த இரு முறையாக இங்கே எம்.எல்.ஏ பதவியில் இருக்கிறார். ஒருமுறைகூட தொகுதிக்காக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, தொகுதிப் பிரச்னைகளுக்காக சட்டமன்றத்தில்  பேசியதே இல்லை.  அவர் மீதான ஏமாற்றத்தை மக்களிடம் காணமுடிகிறது. அவர்கள் மாற்றம் வரவேண்டும் எனக் கூறுகிறார்கள்.

நீங்கள் எம்மாதிரி வாக்குறுதிகளை முன் வைத்து வாக்குகேட்கிறீர்கள்?

எங்கள் கட்சியின் கொள்கை வழிப்பட்டுத்தான் நான் வாக்குறுதிகளை முன்வைக்கிறேன். மகளிர் வாக்காளர்களிடம் இலவசத் திட்டங்கள் உங்கள் வாக்குகளை மட்டும் குறிவைத்து வைக்கப்படுபவை. உண்மையான மேம்பாட்டுத் திட்டங்கள் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் ஒரு மதுக்கடை கூட இருக்காது. அனைத்தும் இழுத்து மூடப்படும் என்கிற அண்ணன் சீமானின் வாக்குறுதியைச் சொல்கையில் நல்ல வரவேற்பைக் காண்கிறேன். ஒரு பெண்மணி மற்றவர்களைப் போல நீங்களும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போய்விட்டால் என்ன செய்வது எனக்கேட்டார். சாராய ஆலையை நடத்துவது திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மதுக்கடைகளை மூடவே விடமாட்டார்கள். ஆனால் எங்கள் கட்சியில் சாராய ஆலை அதிபர் யாரும் இல்லை; இதனால் எங்களுக்கு இழப்பு இல்லை. கட்டாயம் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று பதில் சொன்னேன். உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம், சாலை வசதிகள் போன்ற எங்கள் கட்சியின் வாக்குறுதிகளைச் சொல்லி வாக்குக் கேட்கிறோம். ‘மாதந்தோறும் 1000 ரூபாய் வாங்குகிறீர்கள்… அது இரண்டு நாளுக்குக் கூட வராது. அதை வைத்து வாழமுடியாது. சொந்தக்காலில் நிற்பதற்கான வழிகளை ஏற்படுத்துவதே சிறந்தது’ என்று சொல்லும்போது படித்த இளம் பெண்கள் ஆதரிக்கிறார்கள். மூத்தவர்களிடம் இந்த வாக்கு உங்களுக்காக மட்டுமல்ல; உங்கள் சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கக்கூடியது என்பதால் கவனமாக இருங்கள் எனக் கூறுகிறேன்.

அண்ணா நகர் தொகுதிக்கான சிறப்புத் தேவைகள் என்ன?

அம்பத்தூர் பக்கம் தொடங்கும் ஒட்டேரி நல்லா எனும் கால்வாய் இத்தொகுதிக்குள் நோய்களைப் பரப்பும் கால்வாயாக உள்ளது. இதைச் சரிசெய்ய யாரும் முயற்சி செய்யவில்லை. எங்கள் ஆட்சி அமைந்தால் இதைச் சீரமைத்து, பாதாளக் கால்வாயாக மாற்றி ஒட்டுமொத்தமாக மூடிவிடுவோம் என வாக்குறுதி அளிக்கிறோம். இங்கு பல பகுதிகளில் குறிப்பாக பொன்னுவேல் தோட்டம் போன்ற பகுதிகளில் பல குடும்பங்களுக்கு பட்டா இல்லை. அதை வழங்க ஏற்பாடு செய்வோம். சாலைகளைக் கடக்க ஏற்பாடுகள் செய்வது, சாலையோர வியாபாரிகளின் பிரச்னைகள், தொகுதி முழுக்க பரவியிருக்கும் போதைப் பொருள் பயன்பாட்டுப் பிரச்னையையும் தீர்ப்போம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com