நம்பிக்கையில்லாத் தீர்மானம்: பிரதமருக்கு காங் எம்.பி. வைத்த 3 கேள்விகள்!
மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இதை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக் கொண்டார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது இன்றும், நாளையும் விவாதம் நடைபெறும் என்றும், 10ஆம் தேதி பிரதமர் மோடி பதில் அளிப்பார் என்றும் தெரிவித்தார்.
அதன்படி, நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்றத்தில் பேசாமல் இருப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெளன விரதம் மேற்கொண்டுள்ளார். அவரது மெளனத்தைக் கலைக்கவே இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தோம்.” என்றார்.
மேலும், “மணிப்பூரில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதை பிரதமர் ஒத்துக்கொள்ள வேண்டும். இதுவரை 150 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 5ஆயிரம் வீடுகள் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளன. 60 ஆயிரம் மக்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6500 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய முதலமைச்சரோ, கடந்த இரண்டு மூன்று நாள்களாக மணிப்பூர் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.” என்றும் கோகாய் விவரித்தார்.
அத்துடன், பிரதமரிடம் கேட்பதற்கு தங்களிடம் மூன்று கேள்விகள் உள்ளன என்றவர், “பிரதமர் மோடி ஏன் இன்று வரை மணிப்பூருக்குச் செல்லவில்லை?, பிரதமர் மணிப்பூரைப் பற்றிப் பேசுவதற்கு ஏன் 80 நாள்கள் ஆகின? வெறும் 30 வினாடிகள் மட்டும் ஏன் பேசினார்?, மணிப்பூர் முதல்வரை ஏன் இதுவரை பதவி நீக்கம் செய்யவில்லை?” என்று கேள்விகளை முன்வைத்தார்.