
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியானதும் பெரும்பாலானவர்கள் சொன்னது: ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என நினைத்தோம். ஆனால் இவ்வளவு பெரிய பெற்றியைப் பெறும் என நினைக்கவில்லை.’
உண்மைதான். 243 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் 202 இடங்களை வெல்வது என்பது சாதாரணம் இல்லை. அதுவும் 20 ஆண்டுகளாக முதல்வர் நாற்காலியில் தொடர்ந்து அமர்ந்திருக்கும் நிதிஷ்குமார் கூட்டணி, ஆட்சிக்கு எதிரான மனநிலையைச் சமாளித்திருப்பது பெரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பாஜக 2020இல் 74 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. இம்முறை 89 இடங்கள். நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அப்போது 43; இப்போது 85. அன்று லோக் ஜன் சக்தி கட்சியால் ஒரு இடம் தான் வெல்ல முடிந்தது; இன்று 19 இடங்கள்.
எதிரணியில் ஆர்ஜேடி 75-இலிருந்து 25 ஆக வீழ்ச்சி அடைந்தது. காங்கிரசோ 19 இடங்களில் இருந்து 6 இடங்களையே பிடிக்க முடிந்தது. இடதுசாரி (எம்.எல்.) கட்சி 12 இலிருந்து 2 ஆகக் குறைந்தது.
ஆர்ஜேடிக்கு பலமான ஆதரவுத் தளமாக முஸ்லிம்கள் கருதப்பட்டாலும் தனித்துப்போட்டியிட்ட உவைசியின் கட்சி (ஏஐஎம்ஐஎம்) இந்த ரணகளத்திலும் 5 இடங்களை வென்றிருப்பது கவனத்துடன் பார்க்கப்படுகிறது.
எப்படி மீண்டும் தேஜகூ வென்றது என்றால் நிதிஷ்குமாருக்கு பெருகிய மகளிர் வாக்குகள் ஒரு காரணமாக முன் வைக்கப்பட்டன. ஒன்றரை கோடி மகளிருக்கு தொழில் தொடங்க தலா பத்தாயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் தேர்தலுக்கு மூன்னதாகச் சேர்க்கப்பட்டது. மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாகத் தொடர்வது, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையை 400-லிருந்து 1100 ஆக உயர்த்தியது போன்றவை அவருக்கும் ஆட்சிக்கும் நல்லெண்ணம் பெற்றுத் தந்ததைச் சுட்டிக்காட்டுகிறார்கள். மகளிருக்கு பத்தாயிரம் வங்கிக் கணக்கில் சேர்த்ததை நடைமுறையில் உள்ள திட்டம் என தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு அனுமதித்ததையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால் வெறும் நலத்திட்டங்கள் மட்டுமே வெற்றியைக் கொண்டுவராது. பொதுப்படையான நல்லெண்ணம் வேண்டும். ஆளுங்கட்சியால் அதை உருவாக்கமுடிந்தது. எதிர்க்கட்சியினரால் அதை தம் மேல் கட்டமைக்க முடியவில்லை என்ற கூற்றும் உள்ளது.
ரைட்டு… நடந்திருப்பதைக் கவனிப்போம். இம்முறை நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவியைத் தருவதற்கு ஐமுகூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக தயாராக இல்லை. அதனால்தான் தேர்தலுக்கு முன்பாக நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கத் தயங்கினார்கள். ஆனால் எதிர்க்கட்சி கூட்டணியினர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தனர் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிக எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களை வென்ற நிலையில் நிதிஷ்குமார் முதல்வர் பதவியில் மீண்டும் அழுத்தமாக அமர்ந்தார். ஆனால் ஆட்சியில் அவரால் பழையபடி ஆதிக்கம் செலுத்தமுடியுமா என்றால் இல்லை. முக்கிய பொறுப்புகளான உள்துறை, வருவாய், சுகாதாரம், சட்டம், சாலைகள், சுரங்கம், நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்மை ஆகிய துறைகள் பாஜகவிடமே உள்ளன. தன்னுடைய 20 ஆண்டு முதல்வர் பதவி வரலாற்றில் முதன்முறையாக உள்துறை தன் வசம் இல்லாதவராக நிதிஷ்குமார் இருக்கிறார்.
இரண்டு பாஜக துணை முதலமைச்சர்கள் உள்ளனர். அதில் ஒருவரான சம்ரத் சௌத்ரி உள்துறையைக் கைவசம் கொண்டுள்ளார். இன்னொரு துணை முதலமைச்சரான விஜய் குமார் சின்ஹாவிடம் வருவாய்த் துறையும் நில சீரமைப்பு, சுரங்கங்கள் ஆகியவை உள்ளன. மொத்தமுள்ள 26 அமைச்சரவை பதவிகளில் 14 பாஜகவுக்கு.
கடந்தமுறை குறைவான இடங்களே வென்றிருந்தாலும் ஆர்ஜேடி அதிக இடங்களை வென்றிருந்ததால் பாஜகவை ஓரங்கட்டி அதனுடன் கூட்டணிக்குப் போகும் வாய்ப்பு நிதிஷ்குமாருக்கு இருந்தது. திறமையாக அதைக் கையாண்ட நிதிஷ், முக்கியமான இலாகாக்களை தன் வசம் வைக்க முடிந்தது. இம்முறை அதற்கு வாய்ப்பே இல்லை. முதலமைச்சர் பதவி மட்டும் போதும், என்ற ‘பேக்கரி டீலிங்க்கு’க்கு ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைமை.
ஆமா… பிரசாந்த் கிஷோ என்ற ஒரு மானஸ்தன் இருந்தாரே... அவர் நிலைதான் கவலைக்கிடம். அவரது ஜன் சுராஜ் கட்சி, ஓர் இடம் கூட வெல்லவில்லை. நிதிஷ்குமார் பதவி ஏற்ற தினம் அவர் பாட்னாவில் இருந்து 250 கிமீ தூரத்தில் உள்ள பித்திஹர்வா என்ற இடத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். இத்தேர்தலில் அவர் கட்சி 3.34% வாக்குகளையே பெற்றது. “போர்க்களத்தை விட்டு விலகி ஓடும்வரை தோல்வி என்பது கிடையாது. நான் ஓடமாட்டேன்” என்று தோல்விக்குப் பின்னால் சொன்னார். 150 இடங்களுக்கு மேல் வெல்வோம் இல்லையெனில் பத்துக்குக் கீழ் இடங்கள் பெறுவோம்- என்றெல்லாம் சொல்லிவந்த தேர்தல் கணிப்பாளர், தன் கட்சியின் இடங்களைக் கணிக்கமுடியவில்லை. அவரை நம்பி கட்சித் தேர்தல்கணிப்புகளை ஒப்படைக்கும் கட்சிகள் இனி யோசிக்குமோ?
பீகாரில் நல்லாட்சி தந்தோம் என தேஜகூட்டணி மார்தட்டிக்கொள்ளலாம் ஆனாலும் எல்லாவிதங்களிலும் அம்மாநிலம் பின் தங்கியே இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. நீண்ட தூரப் பயணம் அதற்கு பாக்கி இருக்கிறது!