யார் பக்கம் யார்? தொடங்கும் கூட்டணி சாகசங்கள்!

யார் பக்கம் யார்?
தொடங்கும் கூட்டணி சாகசங்கள்!
Published on

கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால்தான்  தமிழ்நாட்டில் வெற்றிபெற முடியும் என்ற அரசியல் தந்திரத்தை 1967-இலேயே அறிஞர் அண்ணா நிரூபித்துக் காட்டிவிட்டார். ஆனாலும் கூட்டணிக் கட்சிகளை அரவணைப்பதும் சமாளிப்பதும் எளிதான ஒன்று அல்ல. அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட குணங்களை, கட்சிகளின் தேவைகளை ஈடுகட்டிச் செல்லவேண்டும். வெற்றிபெறும் வாய்ப்பை பெரிய கட்சி வழங்கவேண்டும். இல்லையெனில் அற்றகுளத்து அறுநீர்ப் பறவைபோல் இன்னொரு கட்சியின் கூட்டணிக்கு பறந்துபோய்விடுவார்கள்.

இந்தக் கலையில் ஓரளவுக்கு 2004 தேர்தலுக்குப் பின்னால் திமுக தேர்ந்துள்ளதாகச் சொல்லலாம். அந்த தேர்தலில் 1980க்குப் பிறகு முற்றிலும் எதிர்முனையில் இயங்கிவந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது. அதன் பின்னர் இன்றுவரை இடையில் இரு தேர்தல்கள் தவிர்த்து, இந்த இரு கட்சிகளும் கூட்டணியாகவே தேர்தல்களைச் சந்தித்துவருகின்றன.

” காங்கிரஸ் கட்சி திமுகவுடன் இணைந்திருப்பது இவ்விரு கட்சிகளுக்குமே பலமாக இருக்கிறது. எனவே தான் திமுக அணியைத் தோற்கடிக்க விரும்பும் சூட்சுமதாரிகள் இக்கூட்டணியைப் பிரிக்க தொடர்ச்சியாக பல்வேறு சாம பேத தான தண்ட வழிமுறைகளைப் பிரயோகித்துவருகிறார்கள். ஆனால் இதுவரைக்கும் தலைமைக்கு எதார்த்தம் புரிந்திருப்பதால் இக்கூட்டணியை உடைக்க இயலவில்லை. விஜய்யின் தவெகவுடன் இடையில் பேச்சுவார்த்தை நடத்தவிரும்பியதையும் இதனுடன் சேர்த்தே பார்க்கவேண்டும். மை பிரதர் ராகுல் காந்தி என்று முதலமைச்சர் முக ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் சொக்கன் இல்ல திருமணவிழாவில் பேசி பிரச்னையை அணைத்தார். இருப்பினும் திமுகவை வீழ்த்த எந்தவொரு தற்கொலை முயற்சிக்கும் தயாரான எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்,” என்று தெரிவிக்கிறார் ஓர் அரசியல் நோக்கர்.

2016-இல் இருந்த அரசியல் சூழ்நிலையில் மக்கள் நலக்கூட்டணி உருவாகி, இன்று திமுக கூட்டணியில் இருக்கும் விசிகவும் இடதுசாரிகளும் மதிமுகவும், திரிசங்கு நிலையில் இன்றிருக்கும் தேமுதிகவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து அதிமுகவுக்கு வெற்றியை தேடித் தந்தார்கள்.

ஆனால் அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் இக்கட்சிகள் திமுகவுடனே இருக்கின்றன. குறைவான வாக்கு சதவீதமே கொண்டிருந்தாலும் நாடாளுமன்ற சட்டமன்றங்களில் தங்களுக்கென பிரதிநிதிகளை அனுப்பமுடிகிறது. வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே இவர்கள் தொடர்வார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் கூடுதல் இடங்களுக்கான முயற்சியை விடாமல் தொடரத்தான் செய்வார்கள். அதையும் திமுக தலைமையின் அனுபவஸ்தர்கள் சமாளிக்கத்தான் வேண்டும். கூடுதல் இடங்களைக் கேட்டுப்பெறுவோம் எனச் சில மாதங்களுக்குச் சொன்ன மதிமுக தலைமை மறுநாளே கூட்டணியில் தொடர்வோம் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாகப் பார்க்கத்தான் செய்தோம்.

திமுக கூட்டணியில் போட்டியிட்டவரை பாமக மிகுந்த செல்வாக்காக இருந்துவந்தது. அதற்கு எதிர்முனையில் இருக்கும் விசிகவுக்கு இங்கே நிரந்தர இடம் என்றானபின், பாமக தனித்தும் அதிமுக கூட்டணியிலுமாக நின்று பார்த்து பழைய செல்வாக்கை மீட்க முயற்சி செய்துவருகிறது. ஆனாலும் வெற்றி கிடைக்கவில்லை. தற்போது தந்தை- மகன் போராட்டத்தில் கட்சி திணறுவதால்  அக்கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கமுடியவில்லை. அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக இணைய வேண்டும். ஆனாலும் பழையபடி இடங்களுக்கான பேரத்தை வலிமையாக முன்வைக்க முடியுமா?

ஒரு வாக்கு கூட சிதறக்கூடாது. அதற்கேற்ப வலிமையான கூட்டணியை அமையுங்கள் என்று டெல்லியிலிருந்து பாஜகவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பலமுறை ஆலோசனை சொல்லியும் அதிமுக அணியால் புதிதாக பிறகட்சிகளைக் கொண்டுவந்து ‘மாஸ்’ காண்பிக்கமுடியவில்லை. இடங்களுக்காக பேரம் பேசும் உத்திக்காக தேமுதிக, ஆகட்டும் பார்க்கலாம் என இழுக்கிறது. சிறுபான்மையினருக்கான பலம் வாய்ந்த கட்சிகள் எதுவும் பாஜக கூட்டணிக்கு வராது. டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகமும் பாஜக மீது கோபத்தில் இருப்பதால் அதை எப்படி சமாளிப்பது என்ற வியூகத்தை அமித்ஷா தான் வகுக்கவேண்டும். தமாகா தான் இப்போதைக்கு அவர்கள் வசமிருக்கும் இன்னொரு கட்சி.

அதிமுகவிலேயே பிரிந்துபோன அணிகளைக் கொண்டுவர உட்கட்சி பஞ்சாயத்து செய்வதில் பாஜகவின் நேரம் கழிகிறது. இவர்களைக் கொண்டுவருவதற்காக வித்தியாசமான பார்முலாக்களை உருவாக்கி எடப்பாடியாரை சரிக்கட்ட முயற்சி செய்துவருகிறார்கள்.

இந்த பக்கம் புதுக்கட்சி நாயகனான விஜய், யார் வேண்டுமானாலும் என் கூட்டணிக்கு வரலாம் நான் தான் முதலமைச்சர் என்று அறிவித்து கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறார். ஒரு கட்சியும் இன்றுவரை போகவில்லை. போவோம் என பூச்சாண்டி காட்டி தாங்கள் இருக்கிற இடத்தை வலுப்படுத்தவே அதைப் பயன்படுத்துகிறார்கள். தவெக தன் பலத்தை தேர்தலில் நிரூபித்துக்காட்டும் வரை அக்கட்சியுடன் வேறு கட்சிகள் கூட்டணிக்கு முன்வரும் வாய்ப்புகள் குறைவுதான். ‘என்னதான் உட்கட்சி எடுத்த சர்வே, இளைஞர் கூட்டம் என்று தவெக உற்சாகம் காட்டினாலும் ஒரு தேர்தலாவது போனால்தான் பிற மூத்த கட்சிகள் ரிஸ்க் எடுத்து சேர முன்வருவார்கள்!’ என மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர் சுட்டிக்காட்டுகிறார்.

எப்படியாவது காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து தங்கள் பக்கம் வந்துவிடாதா என்று அவர்கள் காத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அறிகுறிகள் ஏதும் இதுவரை இல்லை.

இதற்கிடையில் 8.22 சதவீத வாக்குகள் பெற்ற நா.த.க. தனித்துதான் போட்டி என்ற நிலையில் இருந்துவருகிறது. ‘கம்பியைப் பிடிக்கவே மாட்டேன்’ என சீமான் உறுதியாகச் சொல்லிவருகிறார். கடைசிவரைக்கும் அமர இடம் கிடைக்காமல் போய்விடலாம் என்ற ஆபத்து உள்ளது.

திமுக, அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளிடம் பேரம் பேசி, அதிகப்படியான இடங்களை வாங்கி கூடுதல் பிரதிநிதிகளை சட்டமன்றத்துக்கு அனுப்புவதுதான் சிறிய கட்சிகளுக்கு இருக்கும் வாய்ப்பு. அவை தனித்து நின்று வெற்றிபெறும் வல்லமை இல்லாதவை. இருதரப்புக்கும் பலன் அளிக்கும் இந்த ஆட்டத்தை கவனமாக ஆடவேண்டும். இல்லையெனில் காணாமல் போய்விடுவார்கள். சிறிய கட்சிகளின் கோணத்தில் இருந்து பார்த்தால் ‘சூதானமாக’ எப்போதுமே  இருக்கவேண்டியிருக்கிறது! அப்போதுதான் அறுவடை சிறக்கும். தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணிகள் வென்றுள்ளன. ஆனாலும் கூட்டணி ஆட்சி அமைந்ததே இல்லை. இனியும் அமையுமா? இனிவரும் நாட்களில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் தொடங்கும். இந்த வெற்றிக்கான ஆட்டத்தைக் காண வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com