எச்.வி.ஹண்டே
எச்.வி.ஹண்டே

அதிமுக 50: தலைவர்களின் கருத்து தொகுப்பு!

எச்.வி.ஹண்டே

முன்னாள் அமைச்சர், அதிமுக

சத்துணவுத் திட்டம்:

காமராஜருக்கு பிறகு மதிய உணவுத் திட்டம் உப்பு சப்பில்லாமல் போய்விட்டது. காமராஜர் கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே பக்தவச்சலமும், கருணாநிதியும் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டனர். இப்படியான நிலையில் தான், மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றினார் எம்.ஜி.ஆர். அந்த திட்டத்தை மேற்பார்வையிடுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சரை நியமித்தார். அதற்கு தலைவராக ஜெயலலிதாவை நியமித்தார். அப்போது தருமபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லை என்பதால், என்னை அம்மாவட்டத்திற்கான பொறுப்பாளராக நியமித்தார்.

மருத்துவம்:

பி.வி.நரசிம்ம ராவ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதிலும், மகப்பேறு மரணங்களை தடுப்பதிலும் தமிழகம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முதலிடத்தில் இருந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டிலும் முதலிடம் வகித்தது. இதற்காக நரசிம்ம ராவ், ரூ.5 கோடியை தமிழகத்திற்கு ஸ்பெஷலாக கொடுத்தார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் ஏற்கெனவே இருந்த ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நான் ஒரு திட்டத்தை கொண்டு வந்தேன். பதினைந்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒரு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் என்று. மாவட்ட தலைமை மருத்துவமனையில் இருக்கும் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களில் இருக்கும்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழுநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, ஒரு வருடத்தில் ஆயிரம் குழந்தைகள் பிறக்கிறது என்றால், அதில் 124  குழந்தைகள் இறந்துவிடும். அவர் ஆட்சிப்பொறுப்பிலிருந்து இறங்கும் போது குழந்தைகளின் இறப்பு விகிதம் ஒரு வருடத்திற்கு 30 ஆகக் குறைந்திருந்தது.

டி.ஜெயக்குமார்
டி.ஜெயக்குமார்

டி.ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர், அதிமுக

அதிமுக ஆரம்பிக்கப்பட்ட மிகக் குறுகிய (5 ஆண்டுகள்) காலத்திலேயே அரியணை ஏறியது. முதலமைச்சராக இருந்தபோது ஏழை எளிய மக்கள் வளம்பெற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

சிறிய வயதில் தான் கஷ்டப்பட்டதுபோல், எந்த குழந்தைகளும் ஒருவேளை உணவிற்காக கஷ்டப்படக் கூடாது என்பதற்காக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர். ஐநா சபையால் பாராட்டப்பட்ட திட்டம் அது.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இருக்காது என்றார்கள், ஆனால் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசான ஜெயலலிதா ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தி மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தார்.

காவிரி நதி நீர் உரிமையை உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் மூலம், தமிழகத்திற்கு சு05 டிஎம்சி தண்ணீர் கிடைப்பதற்கு வழிவகை செய்தவர் ஜெயலலிதா. அதேபோல், முல்லைப் பெரியாறு அணை  விவகாரத்திலும் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி அணையின் உயரத்தை பு4சு அடியாக உயர்த்தினார். அதிமுக-வைப் பொருத்தவரை மாநிலத்தின் நலன், மக்களின் உரிமை என்ற அடிப்படையில் தான் அதனுடைய ஆட்சி இருக்கும்.

உலக தமிழர்கள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்கின்ற இயக்கம் அதிமுக. 

விந்தியா
விந்தியா

விந்தியா,

கொள்கைப்பரப்பு துணைச் செயலாளர்

40 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட அலுவலகத்திற்கு மக்கள் வர வேண்டுமென்றால் பல மணி நேரம் பயணம் செய்த பிறகே அடைய முடியும்.  பொன்மனச்செம்மல் ஆட்சிக்கு வந்த பிறகு, மாவட்ட நிர்வாகத்தை மக்கள் எளிதாக அணுகும் வகையில், மாவட்டங்களைப் பிரிக்கும் பணி வேகமாக ஆரம்பித்தது.

தமிழ் மொழிக்கென்றே தனி பல்கலைக்கழகம் கண்டது அதிமுக ஆட்சியில். பொருளாதார வளமோ, மிகப்பெரிய வருமானமோ இல்லாத அந்தக் காலத்திலேயே லட்சோப லட்சம் குழந்தைகளுக்கு ரூ.பு00 கோடி செலவில் சத்துணவுத் திட்டத்தை நிறைவேற்ற புரட்சித்தலைவர் பட்ட கஷ்டங்களை மக்கள் அறிவார்கள்.

பொன்மனச்செம்மல் மறைந்தாலும் அவரை பின்பற்றி, எங்கள் அம்மா மக்கள் பணி என்ற மகத்தான சாதனை பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருந்தார்கள். பெண்கள் பாதுகாப்பு என்பது அதிமுக ஆட்சியின் சிறந்த சாதனை.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம், காவிரி பிரச்சினையில் விவசாயிகளுக்காக நடத்திய சட்ட போராட்டமும் அதன் வெற்றியும் எங்கள் காவிரித்தாய் புரட்சித்தலைவி அம்மாவையே சேரும்.

அதன் பிறகு ஆட்சி செய்த எங்கள் அண்ணன் திரு எடப்பாடியாரும் அவர்கள் பங்கிற்குக் குறுகிய காலத்தில் பல இயற்கை பேரழிவுகளை திறம்பட நிர்வகித்து, மக்கள் இடர் நீக்கி, 4 ஆண்டு சாதனை ஆட்சியை செய்து காட்டினார்.

எம்.சி.சம்பத்
எம்.சி.சம்பத்

எம்.சி.சம்பத்

முன்னாள் அமைச்சர், அதிமுக

ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. எம்.ஜி.ஆர் பு978-ஆம் ஆண்டு கொண்டு வந்த குடிசைக்கு 'ஒரு விளக்கு திட்டம்' மிகவும் சிறப்பு வாய்ந்த திட்டமாகும்.

உலகமயமாக்கலுக்குப்  பிறகு தொழில் கொள்கை கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை மறைமலைநகரில் 1995ஆம் ஆண்டு ஃபோர்டு இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, 2003ஆம் ஆண்டு வாகன உற்பத்தி கொள்கை கொண்டுவரப்பட்டது. கார் உற்பத்தியில் தமிழ்நாடு உலக அளவில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கொள்கை வகுக்கப்பட்டது. அதே ஆண்டு, ஐடி துறையை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கான கொள்கையும் வகுக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு புதிய தொழில் கொள்கை ஒன்றை வெளியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் கொள்கை, உயிரி தொழில்நுட்பக் கொள்கை ஆகியவற்றையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து  2015ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டையும் நடத்தி, அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான வலுவான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தார்.

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக Business Facilitaion Act 2018, Business Facilitaion Rule -2017 அதிமுக அரசு கொண்டுவந்தது. அதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையும் நடத்தினோம்.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப கொள்கை- 2018, தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை -2019, தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை- சு0பு9 என பல்வேறு கொள்கைகளை வகுத்து மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது அதிமுக அரசு.

டயர் தயாரிப்பில் தமிழகம் டாப்-டென்னில் இருப்பதற்குக் காரணம் அதிமுக அரசு தான். தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றியது அதிமுக. அதன் காரணமாகத்தான் நிறைய தொழிற்சாலைகள் இன்று தமிழகத்தில் உருவாகி உள்ளன. இதைத்தான் அதிமுக-வின் ஐம்பது ஆண்டுகால சாதனையாகப் பார்க்கிறேன்.

டாக்டர் கோ.சமரசம்
டாக்டர் கோ.சமரசம்

டாக்டர் கோ சமரசம்

முன்னாள் சமஉ

தனி அறையில் கண்ணாடியையும், தொப்பியையும் கழட்டி வைத்துவிட்டு எம்.ஜி.ஆர் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நான் அவருக்குக் கீழே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். இது நடந்தது 1981ஆம் ஆண்டு. அப்போது நடந்த சம்பவம்  தான் இது.

“அண்ணா.. 1977-இல் ஆயிரம் இலவச வேட்டி சேலைகள் கொடுத்தோம். 1978-இல் இரண்டாயிரம் வேட்டி சேலைகள் கொடுத்தோம். 1979-இல் மூவாயிரம் இலவச வேட்டி சேலைகள் கொடுத்தோம். 1980-இல் நாலாயிரம் இலவச வேட்டி சேலைகள் கொடுத்தோம். இப்படியே கொடுத்துக் கொண்டே இருந்தால் ஆட்சி மேலே போய்க்கொண்டிருக்கிறதா? கீழே போய்க்கொண்டிருக்கிறதா? நீங்களே சொல்லுங்கள்” என்றேன்.

பட்டென்று எழுந்தவர், “என்ன சொல்றீங்க”  என்று கேட்டார்.

“அண்ணா.. நான் சொல்றதை முழுமையா கேட்டுக்குங்க. சரியாபட்டா ஏத்துக்குங்க. இல்லன்னா தண்டனை கொடுங்க” என்றேன்.

“ நாட்டில் இருக்கும் மோசமான ஏற்றத்தாழ்வுகள் நீங்க வேண்டும் என்றால், நம்முடைய திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கானதாக இருக்க வேண்டும்.  ஒவ்வொரு தனிமனிதனுக்கும் என்ன வேண்டுமோ அதை செய்ய வேண்டும்.

உதாரணமா, ஒரு  முடி வெட்டும் தொழிலாளிக்கு கடை வைப்பதற்காக என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் கொடுத்து, அவனுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம். இதனால் அவன் மட்டும் அல்லாது, அவனுடைய குடும்பத்தை சார்ந்தவர்களும் பயனடைவார்கள். அதுபோல, சலவைத் தொழிலாளர்களுக்கு, தச்சர்களுக்குத் தேவையானதைக் கொடுத்தாலே போதும்.  நாம் எங்கும் சென்று ஓட்டுப்போடுங்கள் என்று பிரச்சாரம் செய்ய வேண்டியதில்லை.”  என்றேன்.

நான் சொன்ன ஆலோசனை எம்ஜிஆருக்குப் பிடித்துவிட்டதால், தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு, உடனே  சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து திட்டம் தொடர்பான ஆவணத்தைத் தயாரிக்க  உத்தரவிட்டார். இந்த திட்டத்தின் தொடர்ச்சிதான் பிற்காலத்தில் ஆடு, மாடுகள் வழங்குவது போன்ற ஏழை, எளிய மக்கள் நேரடியாகப் பயன்பெறும் திட்டங்கள். எம்.ஜி.ஆரின் நோக்கத்தை  ஜெயலலிதாவும், பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து நிறைவேற்றினார்கள்.

கே.சி பழனிசாமி
கே.சி பழனிசாமி

கே.சி.பழனிசாமி,

முன்னாள் எம்பி

இந்தியாவிலேயே முதன் முறையாக வறட்சிக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது அ.தி.மு.க.வின் ஆட்சி காலத்தில் தான். கடந்த 2011ஆம் ஆண்டு மே - செப்டம்பர் காலத்தில் அம்மாவின் ஆட்சியின் போது ரூ.62,522 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இது அதற்கு முந்தைய காலமான 2001-2011 காலத்தில் ஈர்க்கப்பட்ட தொகையை விட சு மடங்கு அதிகம். 2011ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தின் போது புதிதாக 14 தொழிற்பேட்டைகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

பெண்களுக்கு பயனளிக்கும் வகையில் விதவை ஓய்வூதியம் திட்டம், 6 மாதமாக உயர்த்தப்பட்ட மகப்பேறு விடுப்பு காலம், அம்மா குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம், தாலிக்குத் தங்கம் மற்றும் தொகை வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், மகப்பேறு நிதியாக ரூ.புசு ஆயிரம்,வேலைக்கு செல்லும் பெண்களுக்காக மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் என பெண்களின் நலனுக்காகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அனைத்து பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறை. பல தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில், திட்டங்கள் வகுத்து வெற்றியும் கண்டது அ.தி.மு.க.!

பா வளர்மதி
பா வளர்மதி

பா.வளர்மதி

முன்னாள் அமைச்சர் அதிமுக

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பிறகு யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்த  பல பேர் இன்று உயர் பதவிகளில் இருக்கின்றனர். மக்கள் விரும்பிய தலைவராக எம்.ஜி.ஆர் இருந்தார்.

அதேபோல், ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஓர் அரசியல் கட்சியில் பெண்களுக்கு அதிகம் பதவி கொடுத்தவர் என்றால் அது ஜெயலலிதா தான். ஒரு சிறிய கிராமத்தில் அதிமுக-வின் கிளை இருந்தால் கூட, அதில் செயலாளருக்கு அடுத்த நிலையில், இணை துணை செயலாளராக ஒரு பெண் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். கிராம ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து நிலைகளிலும் பெண்களை பதவிகளுக்கு கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

1991ஆம் ஆண்டு இருபத்து ஐந்து பெண்களுக்கு சட்டசபையில் இடம் கொடுத்தார். அதேபோல், பெண் கமாண்டோ படையை உருவாக்கினார். பெண்களுக்கென்று தனியாக காவல் நிலையம் உருவாக்கினார். அதில் முழுக்க முழுக்க பெண் காவலர்களையே நியமித்தார். அதன் பிறகு தான்  பெனசீர் பூட்டோ பாகிஸ்தானில் பெண்களுக்கென்று தனியாக காவல் நிலையம் திறந்தார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு ‘ரோல் மாடல்’ யார் என்று கேட்டால் அது ஜெயலலிதா தான்.

ஆதிராஜாராம்
ஆதிராஜாராம்

ஆதி ராஜாராம்

அதிமுக

திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சு கொள்கை இட ஒதுக்கீடு. 1928இல் நடைமுறைக்கு வந்த பிராமணரல்லாதோருக்கான இட ஒதுக்கீடு 1993 வரை, பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வந்திருக்கிறது. 31 விழுக்காடாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, எம்.ஜி.ஆரின் ஆட்சியில் 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. அரசாங்க உத்தரவாக மட்டுமே இருந்து வந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு, 1993 - 1994இல் சட்டப் பாதுகாப்பு பெற்றுத் தந்தார் ஜெயலலிதா. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கும் அளவிற்கு அவர்களின் பணி இருந்தது. 1928ஆம் ஆண்டிலிருந்து 1991ஆம் ஆண்டிற்கு முன்பு வரை தமிழகத்தை பலர் ஆட்சி செய்திருக்கின்றனர். அதில் மூதறிஞர் ராஜாஜியை தவிர மற்ற அனைவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா தான் இட ஒதுக்கீட்டிற்குச் சட்ட பாதுகாப்பு வழங்கினார். திராவிட இயக்கத்தின் கொள்கையான இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்ததை அதிமுக-வின் பெரிய சாதனையாகப் பார்க்கிறேன்.

மருது அழகுராஜ்
மருது அழகுராஜ்

மருது அழகுராஜ்

ஆசிரியர், நமது அம்மா

கட்சி தொடங்கப்பட்ட ஐம்பது ஆண்டுகளில், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சிக்கட்டிலில் இருந்திருக்கிறது. அதற்குக் காரணம், அதிமுக மக்களின் அபிமானத்தை பெற்றிருப்பதே.

ஒரு காலத்தில், ஒரு மாவட்டத்திற்கு ஒரு எஞ்சினியர் தான் இருப்பார். ஆனால், இன்றைக்கு ஒரு வீட்டில் மூன்று எஞ்சினியர்கள் இருக்கின்றனர். அதற்கு காரணம் எம்.ஜி.ஆர் கொண்டுவந்த சுயநிதி கல்லூரிகள் தான். ஆந்திராவிலிருந்தும், கேரளாவிலிருந்தும்,  பீகாரிலிருந்தும், குஜராத்திலிருந்தும் பொறியியல் படிப்பதற்காக மாணவர்கள் தமிழகம் வருகிறார்கள் என்றால் அதற்கான விதையை ஊன்றியவர் எம்.ஜி.ஆர்.

அதேபோல், ஜாதியை ஒழிப்பதற்கான ஒரே ஆயுதம் கல்வி தான் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார் ஜெயலலிதா. மரத்தடி வகுப்புகளை மடிக்கணினி வகுப்புகளாக மாற்றினார்.  கல்வியில் இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்கினார்.

காலுக்கு செருப்பிலிருந்து, கட்டிக் கொள்ளும் உடையிலிருந்து, தூரம் கடக்கும் சைக்கிளிலிருந்து, வண்ண பென்சில்கள் என எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்து படிக்கச் சொன்னார் ஜெயலலிதா. இன்றைக்கு தமிழகம் கல்வியில் மிக உயர்ந்த இடத்தை பெற்றிருப்பதற்கு மிக முக்கிய காரணம் அதிமுக தான்.

கருணாநிதியால் நிறைவேற்ற முடியாமல் கைவிடப்பட்ட திட்டம் தான் பழைய வீராணம் திட்டம். ஆனால் அந்த திட்டத்தை வெற்றிகரமான திட்டமாக மாற்றி, சென்னையின் தண்ணீர் பிரச்சனையை தீர்த்தவர் ஜெயலலிதா.

பொன்னையன்
பொன்னையன்

பொன்னையன்

முன்னாள் அமைச்சர், திட்டக்குழு துணைத்தலைவர்

ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வை ஒழிக்கவும், ஏழைகள் ஏற்றம் காணும் வகையிலும் திட்டத்தை வகுத்தளித்தவர் அண்ணா. அதுதான் திராவிட மாடல்.

அதை தானே முதலமைச்சராகி நடைமுறைப் படுத்தியவர் அண்ணா. அதை எம்.ஜி.ஆர் அப்படியே பின்பற்றினார். ஜெயலலிதாவும் அப்படியே. அவர்கள் இருவரின் வழி வந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இன்று திராவிட மாடலை அப்படியே நடைமுறைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஜிஎஸ்டி மூலம் வருகின்ற சொற்பமான நிதி, மைய அரசின் நிதி, வெளிநாடுகளிடமிருந்து கடன் பெற்ற நிதி ஆகியவற்றை வைத்து, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், ஏழைகள் மறுவாழ்வு திட்டங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உதவி, படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க நிதியுதவி, குடிசைத் தொழில் தொடங்க நிதியுதவி, வேலைவாய்ப்பு என பல்வேறு திட்டங்களை ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் கொள்கைகளாகச் சொல்லி, நான் திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருந்தபோது நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டோம்.

ஏழை எளிய மக்கள் சுயதொழில் செய்ய வேண்டும் என்பதற்காக குடிசை தொழில்கள், சிறு தொழில்கள், விவசாயத்தை ஒட்டிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு நிதிகள் ஒதுக்கிய அரசு அதிமுக. ஏழ்மை போக்கும் பொருளாதார கொள்கை கொண்டதே அதிமுக. நாங்கள் கொண்டு வந்த திட்டங்களையே, இப்போது திமுக-வினர் நகல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

கோகுல இந்திரா
கோகுல இந்திரா

கோகுல இந்திரா

அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர்

ஊரணி, கம்மாய் என தண்ணீருக்காக அலைந்து திரிந்த பெண்களுக்கு ‘அடி குழாய்’ மூலமாக குடிநீர் வரச் செய்தவர் எம்.ஜி.ஆர். திருமணம் ஆகும் பெண்களுக்கு ‘தாலிக்குத் தங்கம்’, பொது இடங்களில் தாய்மார்கள் பாலூட்ட ‘பாலூட்டும் அறை’, வேலை செய்யும் தாய்மார்களுக்கு உதவும் வகையில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ‘அங்கன்வாடி மையம்’ போன்ற பல்வேறு நலத் திட்டங்களை தாய் ஸ்தானத்திலிருந்து நிறைவேற்றியவர் ஜெயலலிதா.

கல்வி என்பது அடிப்படை உரிமை; அது எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் சத்துணவுத் திட்டத்தின் மூலம் குழந்தைகளை பள்ளிக் கூடம் நோக்கி வரவைத்தவர் எம்.ஜி.ஆர். இன்றளவும் பேசக்கூடிய முன்மாதிரியான திட்டம் இது.

ஜெயலலிதா கொடுத்த கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், அம்மா வீடு போன்ற திட்டங்களால் ஏழை எளியோர் பெரிதும் பயனடைந்தனர் என்பதை எல்லோரும் அறிவார்கள். அம்மா மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களாலும் மருத்துவமனைகளில்  உயர்தர சிகிச்சை பெறமுடிந்தது.

அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள் என  அரசு கல்லூரிகள் அதிகமாக கொண்டு வரப்பட்டது ஜெயலலிதாவின் ஆட்சியில்தான். அதேபோல், நிறைய மருத்துவக் கல்லூரிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

வைகைச்செல்வன்

அதிமுக செய்தித் தொடர்பு செயலாளர்

தமிழ் வளர்ச்சிக்கும், மொழி சீர்திருத்தத்திற்கும் உலகத் தமிழ் மாநாடு நடத்தி, உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்களை ஒருங்கிணைத்த இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு விருதுகளை உருவாக்கியது, பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியது, அண்ணாவின் நூல்களை நாட்டுடைமையாக்கியது, அவரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்தது, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை எம்.ஜி.ஆர் நடத்தியது, எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை ஜெயலலிதா நடத்தியதெல்லாம் வளமார்ந்த தமிழ் மொழிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செய்திருக்கும் மகத்தான தொண்டாகும்.

அதேபோல், சத்துணவுத் திட்டம், அம்மா உணவகம், தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் மேம்பாடு, கோவில்களில் அன்னதானம் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழகத்தின் வளர்ச்சிக்காக  கழகம் அர்ப்பணித்திருக்கிறது.

செம்மலை
செம்மலை

செம்மலை

அதிமுக

அதிமுக-வின் அரசியல் பயணம் என்பது ஏழை, எளிய மக்களின் நலன் சார்ந்ததே. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். அவரை தொடர்ந்து ஜெயலலிதாவும் சமூக நீதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டுக்கு சட்ட பாதுகாப்பு பெற்றுத்தந்தார். ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ஆசிரியர் வீரமணி அவர்களால் பாராட்டப்பெற்றார். தொடர்ச்சியாக சமூகநீதிக்காக பாடுபடும் இயக்கம் அதிமுக.

குறிப்பு: கழகத்தின் ஐம்பதாண்டு ஆட்சி நிர்வாகம், பங்களிப்பு பற்றிக் கேட்டதும் ஆர்வமுடன் முன்வந்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அதிமுக பிரமுகர்களுக்கு நன்றி. அதிமுக தலைவர்கள் கருத்து தொகுப்பு : தா.பிரகாஷ்

பிப்ரவரி, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com