கள்ளில் கலப்படம் செய்தது பனையேறிகள் அல்ல - பனையேறி பாண்டியன் சிறப்புப் பேட்டி!

கள்
கள்
Published on

சர்ச்சைகளின் மையமாக அவ்வப்போது ஆகும் நா.த.க. தலைவர் சீமான், கடந்த 15ஆம் தேதி பனைமரம் ஏறி சட்டவிரோதமாகக் கள் இறக்கியது ஒரு விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

முதல் ஆளாக இதற்கு எதிராகக் குரல்கொடுத்து அறிக்கைவிட்டார், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.

கள்ளுக்கு ஆதரவாகப் பேசுவதே சட்டவிரோதம்; இதைக் காவல்துறை எப்படி அனுமதித்தது என ஆச்சரியத்தோடு கேட்கிறார், வி.சி.க. பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரவிக்குமார்.

கள் உணவுப்பொருள்தானே எனச் சொல்லி ஆதரிப்பவர்கள், மூன்று நேரமும் அதைப் பருகச் சொல்வார்களா என்கிறார் சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.

ஒரு பக்கம் சீமானைப் போற்றியும் புகழ்ந்தும் இன்னொரு பக்கம் அவரை வறுத்தெடுத்தும் சமூக ஊடகங்களில் வாதிட்டபடி இருக்கிறார்கள்.

இந்தப் பரபரப்புக்கு முன்னதாக, அண்மையில் விழுப்புரத்தை அடுத்த நரசிங்கனூரில் ஒரு நாள் முழுவதும் பனைத் திருவிழாவை நடத்திக்காட்டினார், தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பனையேறி பாண்டியன். அவரிடம் இதுகுறித்துப் பேசினோம்.

“ தமிழ்நாட்டில் தமிழர் வாழ்வில் நெடுங்காலமாக மதுவிலக்கு இல்லை. சங்க இலக்கியத்தில் கள்ளு குடித்தது இருக்கிறது. எல்லாம் 1937இல் பிரிட்டீஷ் பிடியில் அப்போதைய சென்னை மாகாணத்தில் இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை வருவதற்கு முன்னர் இங்கே 50 கோடி (அடேயப்பா!) பனை மரங்கள் இருந்ததாக ஆங்கிலேய அரசின் ஆவணங்கள் சொல்கின்றன. அப்போது இந்திய மக்கள்தொகையே சுமார் 30 கோடிதான். இப்போது சுமார் 5 கோடி பனை மரங்கள் இருக்கலாம் என அரசுத் தரப்பு சொல்கிறது. அதாவது, 90 சதவீத மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அண்மையில் பனை மரங்கள் அழிக்கப்பட்ட காரணத்தால், மின்னல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை தேசிய புள்ளிவிவரம் காட்டுகிறது. கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்குப் பிறகுதான் இந்த மரங்களின் எண்ணிக்கையும் இவ்வளவு குறைந்துள்ளது; பனைப் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்துள்ளது.” என பனை வாழ்வியல் நோக்கில் பேசுகிறார், பாண்டியன்.

பாண்டியன் பனையேறி
பாண்டியன் பனையேறி

கள்... பனையேறிகளின் பிரச்னைதான் என்ன?

தேசிய சத்துணவியல் நிறுவனம் கள்ளை உணவுப்பொருளாக வகைப்படுத்தி அறிவித்துள்ளது. அதன் குறியீட்டு எண்: கே 001. அப்படி என்றால் இதை உணவுப்பொருள் தொடர்பான சட்டத்தின்படிதானே கையாளவேண்டும்? கள்ளுக்கான தடையை நீக்கவேண்டும். சட்டப்படி, பதநீர் மதுப் பொருள் அல்ல; ஆனால் அதை இறக்கவேண்டும் என்றால்கூட மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையின் அனுமதி வாங்கச் சொல்கிறார்கள். மாவட்ட அளவில் காதி, கிராமத் தொழில் வாரியத் துறையின் உதவி இயக்குநரிடம் அனுமதி வாங்கவேண்டும். 2017இல் பதநீர் திருத்தச்சட்டத்தில் புதிய அரசாணையைக் கொண்டுவந்தார்கள். முன்னைய உத்தரவுகளைவிட இது பரவாயில்லை என்றாலும், பதநீர் இறக்கும் பனையேறி பல துறைகளிலிருந்து நெருக்கடிகளைத் தந்துகொண்டே இருப்பதால், பனை மரத்தைவிட்டே விலகிக்கொண்டு போகிறான். அடுத்த தலைமுறையில் பனையேறவே ஆள் வரமாட்டார்கள். இப்போது இருப்பவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். சில ஆண்டுகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் இருக்கும் பனையேறிகளுக்கு பனையோடு இருக்கும் வாழ்க்கை அற்றுப்போய்விடும். கள் தடையை வைத்து அரசாங்கம் பனைகளை அழித்துவருகிறது என்று சொல்லலாம்.

தா. பிரகாஷ்

... அரசாங்கம் பனை விதைகளை நடும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறதே..; பனைத் தொழிலாளர் வாரியத்தின் மூலம் பனைபொருட்கள் உற்பத்திக்கு கவனம் தருகிறதுதானே?

பனை விதைகளை நடுவதை எல்லாம் 15 ஆண்டுகளாக தனியாரும் தன்னார்வலர்களும் செய்துமுடித்துவிட்டார்கள். அரசு இதைச் செய்யவேண்டிய தேவையே இல்லை. சில ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் பனை மரங்கள் வளர்ந்துவிடும். அவற்றை வைத்து எப்படிப் பொருளாதாரமாக்கலாம் என்பதை எண்ணித்தான் அரசு சரியாகச் செய்யவேண்டும். பனைப் பொருட்களைச் செய்ய அரசாங்கம் துணைபுரிவது உண்மைதான். பதநீரை எடுத்து கருப்பட்டி தயாரிக்க வலியுறுத்துகிறது. பனையோலைப் பொருட்கள் போன்ற கைவினைப் பொருட்களையும் ஊக்குவிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் 1983இல் பனைச் சர்க்கரை ஆலை அமைத்தார்கள். ஆனால், 89ஆம் ஆண்டுவரைதான் அது இயங்கியது. ஆனால் நீடித்த பனை பொருளாதாரத்துக்கு இது வழிவகுக்கவில்லை. கள்ளை இறக்கினால் சூட்டோடு சூடாக விற்பனையாகிவிடும். பதநீர் எடுப்பது இரண்டு மடங்கு வேலை. எனவே, மக்கள் இதில் ஈடுபாடு காட்டவில்லை. விளைவு, பனை வாழ்விலிருந்து பனையேறிகள் விலகத் தொடங்கினார்கள். வட தமிழகத்தில் வழக்கு வந்தாலும் பரவாயில்லை என கள்ளை இறக்குகிறார்கள். ஆனால், தென்மாவட்டங்களில் படிப்படியாக பதநீருக்கு மாறிவிட்டார்கள். கள் தடையால் தொழிலைவிட்டு பனை மரங்களை அப்படியே கைவிடுவது அல்லது அழிப்பதாக முடிகிறது. இது பனைசார் பொருளாதாரத்தின் அழிப்பும்கூட!

தா. பிரகாஷ்

பனைப் பொருளாதாரத்துக்கு இவ்வளவு அழுத்தம் தருவது சரி. ஆனால் கள்ளும் ஒரு போதைப்பொருள்தானே? தமிழ்நாட்டில் குடிநோய் பெரும் சுகாதாரக் கேடாக மாறிவிட்ட நிலையில், கள்ளுக்கான தடையை நீக்கினால் இதற்குத் தீர்வு வருமா?

இல்லை, கள் ஒரு உணவுப்பொருள் என்று தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் வரையறுத்துள்ளது. பொதுவாக, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வகை மது பானம் இருக்கிறது. கள் என்பது இந்த வெப்பமண்டல நாட்டுக்கான இயற்கையான பானம். இதை ஆண்டு முழுவதும் யாரும் குடித்துக்கொண்டிருப்பதில்லை. தை மாதம் முதல் வைகாசிவரை(ஜனவரி-ஜூன்) கோடையில் ஒரு பருவத்தில் மட்டும்தான் இது கிடைக்கும். பருவ காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது என்பதால், கோடைக்குப் பிறகு இயல்பாக இதை விட்டுவிடுவார்கள். அதன்பிறகு அவரவர் தங்கள் வேலைகளில் மூழ்கிவிடுவார்கள்.

உண்மையில் சிக்கல் எது என்றால், ஐ.எம்.எப்.எல். எனப்படும் இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் அயல்நாட்டு மதுவகைகள்தான். அவைகூட வெளிநாடுகளில் அந்தந்த நாட்டில் கிடைக்கும் கோதுமை, பார்லி, திராட்சை என உள்நாட்டுப் பொருட்களிலிருந்துதான் மதுபானம் தயாரிக்கிறார்கள். ஆனால், இங்கு மட்டும் ஒயின், பிராந்தி, ரம் என எல்லாவகை சாராய ஆலை மதுபானங்களுக்கும் ஒரே மூலப்பொருள், சர்க்கரைக் கழிவு(மொலாசஸ்)தான்!

வெவ்வேறு வேதிப்பொருட்கள், செயற்கையாக நிறமூட்டிகள் போன்றவற்றைச் சேர்த்து அந்த(டாஸ்மாக்) மதுபானங்களைத் தயாரிக்கிறார்கள். இதுதான் ஆரோக்கிய அழிவு. ஆனால் கள்ளைக் குடித்தால் சில உடல் உபாதைகளுக்கு தீர்வும் உண்டு. தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தில் மத வழிபாட்டுக்கும், மருத்துவப் பயன்பாட்டுக்கும் கள்ளுக்கு அனுமதி உண்டு. எனில் அதை முழுவதுமாக அனுமதியுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

போதைப்பொருளா கள்?
போதைப்பொருளா கள்?

ஒரு பேச்சுக்கு, கள்ளுக்கு அரசு அனுமதி தருகிறது என வைத்துக்கொள்வோம். அது கிடைக்காத காலங்களில் கலப்படம் செய்ய வாய்ப்பு உண்டு. அதனால் கெடுதி இல்லையா?

தமிழ்நாட்டில் கள்ளுக்குத் தடைவிதித்து 87 ஆண்டுகள் ஆகிவிட்டன. இடையில் 1971இல் தி.மு.க. ஆட்சியிலும் 81-87 அ.தி.மு.க. ஆட்சியிலும் அரசு மூலம் கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. பனையேறிகள் கள்ளை இறக்கி ஏலம் எடுத்த கடைக்காரருக்குக் கொடுத்துவிட வேண்டும். அதாவது கள்ளை இறக்க அனுமதி உள்ள பனையேறிக்கு, அதை விற்கவோ, விலைவைக்கவோ உரிமை இல்லை. இதில், 1937இலும், 74ஆம் ஆண்டிலும் கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டபோது கலப்படம் செய்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. 87இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, ஒவ்வொரு பனை மரமும் தனியான உற்பத்தி ஆலை போலத்தான்; எனவே, ஒவ்வொரு மரத்திலும் கலப்படம் நடக்கிறதா என அரசு பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனக் காரணம் கூறப்பட்டது. அதில் முரண்பாடு என்னவென்றால், 1937-க்கு முன்னர்வரை தனி நபர்கள் கள்ளை விற்கலாம். அப்போது கலப்படம் செய்தார்கள் என்றுகூடச் சொல்லமுடியும். ஆனால், 87ஆம் ஆண்டு மீண்டும் தடைவிதிக்கும்வரை கள்ளை விற்றது ஏலம் எடுத்த கடைக்காரர்களே தவிர, தனிப்பட்ட பனையேறிகள் அல்ல! 2005ஆம் ஆண்டில் தகவல் உரிமைச் சட்டப்படி அரசு சொன்ன காரணம், குளோரல் ஹைட்ரேடு போன்ற வேதிப்பொருட்களைக் கலப்படம் செய்வதால் மனித உயிருக்கு ஆபத்து என்பதே! பனையேறிகள் கலப்படம் செய்ததாக எந்தத் தரவும் இல்லை.

கேரளத்துக் கள்
கேரளத்துக் கள்

பொதுவாக அரசோ தனியார் அமைப்போ மொத்தமாகக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது எளிது; கலப்படம் செய்வது தனி நபர்கள் என்கிறபோது அது கடினம்தானே?

கொலையோ, கொள்ளையோ, சட்டம் ஒழுங்குச் சிக்கலோ குற்றங்கள் எல்லாமே இங்கு தனிநபர் சார்ந்துதான் நடக்கிறது. கூட்டாகவோ கூட்டுறவு முறையிலோ நடப்பதில்லை. அவற்றையெல்லாம் அரசு கட்டுப்படுத்த முடியும்போது இதையும் அரசால் செய்யமுடியும். சட்டம்சார்ந்து மக்களைக் காப்பதைக் காட்டிலும், அறம்சார்ந்து மக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் எப்போதும் அறம்சார்ந்து வாழ்ந்த மக்கள். நியாயம்நீதிக்கு பாவபுண்ணியத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்களை அறம்சார்ந்து வாழ சமகால அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சட்டத்தை மட்டும் வைத்து கட்டுப்படுத்துவதன் விளைவுதான் இன்றைக்கு குற்றங்கள் பெருகியதற்குக் காரணம். பள்ளிகளில் நடைமுறையில் நீதிபோதனை வகுப்புகளே இல்லை. அடிப்படையிலேயே அறத்தை நாம் கைவிட்டுவிட்டோம். இதையும் சேர்ந்து கொண்டுவரும்போது மக்கள் அவர்களாகவே தங்களை ஒழுங்குபடுத்திக்கொள்வார்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com