(வலமிருந்து) ஜெகத்ரட்சகன், விஜயன், பாலு
(வலமிருந்து) ஜெகத்ரட்சகன், விஜயன், பாலு

அரக்கோணம்: வெல்லப்போவது யார்?

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் களமிறங்கி இருக்கிறார். அதிமுக கூட்டணி சார்பாக ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகின்றனர். இதில் ஏற்கனவே ஜெகத்ரட்சகன் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் வன்னிய சமூகத்தை சார்ந்தவர். அவரை எதிர்த்துப் போட்டியிடும் பாமகவைச் சேர்ந்த பாலு, அரசியல் அரங்கில் அனைவரும் அறிந்த முகமாக இருந்தாலும் தொகுதிக்கு புதிய முகம். அவரும் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் என்பது அவருக்குப் பலமாக அமையும்.

திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரக்கோணம் பேருந்து நிலையம், அரக்கோணம் அரசு மருத்துவமனை, அரக்கோணம் ரயில் நிலையம் ஆகியவற்றை தரம் உயர்த்தப்படும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு நடை பெற்ற மக்களவை தேர்தலின்போது கூறி இருந்தார்.

சென்னை சென்ட்ரலுக்கு அடுத்து பெரிய ரயில் நிலையமாக கருதப்படுவது அரக்கோணம் தான். இந்த அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஐந்தாவது நடை மேடையில் மட்டுமே கழிவறை உள்ளது. அதுவும் கட்டண கழிப்பிடமாக இருக்கிறது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் எந்த வித அடிப்படை தேவைகளையும் ஏற்படுத்தி தராத ஜெகத்ரட்சகன் என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் வைக்கின்றன.

ஜெகத்ரட்சகனின் தேர்தல் பிரச்சாரத்திற்காக பெண்களை திரட்டும் பணியில் உள்ளூர் உடன்பிறப்புகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில்கூட சரியாக பட்டுவாடா இல்லை என்கிற புலம்பலைக் கேட்கமுடிகிறது.

அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன், சோளிங்கர் பகுதி ஒன்றியச் செயலாளர். சோளிங்கர் நகர பஞ்சாயத்து தலைவராக ஏற்கெனவே இருந்தவர். 45 வயதாகும் இவர், சுறுசுறுப்பாக வாக்குச் சேகரிக்கிறார். அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையும் தனக்கு உதவியாக இருக்கும் என கருதுகிறார்.

பேராசிரியர் அப்சியா நஸ்ரின்
பேராசிரியர் அப்சியா நஸ்ரின்

நாம் தமிழர் வேட்பாளர் பேராசிரியர் அப்சியா நஸ்ரின் திமுகவுக்கு எதிரான பிரச்சாரங்களை முன் வைக்கிறார் அது தவிர பாஜக அரசு மக்களுக்கு செய்த துரோகங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரிக்கிறார். அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம்களிடம் தனது சமூகத்தை சேர்ந்த எனக்கு வாக்களிக்கும் படி மனம் உருகி வாக்கு கேட்கிறார் பேராசியர் அப்சியா நஸ்ரின்.

அரக்கோணம் தொகுதியில் ஆற்காடு, திருத்தணி, சோளிங்கர், அரக்கோணம், காட்பாடி, ராணிப்பேட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

அரக்கோணம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 155 3989, ஆண் வாக்காளர்கள் -756194, பெண் வாக்காளர்கள்- 797632

மூன்றாம் பாலினம் வாக்காளர்கள்-163.

கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஜெகத்ரட்சகன் 67 21 90 வாக்குகளும் ஏகே மூர்த்தி பாட்டாளி மக்கள் கட்சி 343234 வாக்குகளும் நாம் தமிழர் வேட்பாளர் பாவேந்தன் 29347 வாக்குகளும். பெற்றனர். நோட்டாவில் மட்டும் 2377 1. வாக்குகள் பதிவானது.

தற்போது அரக்கோணம் தொகுதியின் களப்பணி நிலவரத்தைப் பார்த்தால் குறைகளையும் விமர்சனங்களையும் மீறி, உதயசூரியன் வெற்றி மிக வெளிச்சமாகவே இருக்கிறது என்று அரசியல்நோக்கர்கள் கருதுகிறார்கள். காரணம் திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக் கட்சிகள் இந்த தொகுதியில் பலமாக இருக்கிற காரணத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஜெகத்துக்கு ஜெயமே!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com