(வலமிருந்து) கோபிநாத், ஜெயப்பிரகாஷ், நரசிம்மன்
(வலமிருந்து) கோபிநாத், ஜெயப்பிரகாஷ், நரசிம்மன்

கிருஷ்ணகிரி: யாருக்கு சாதகம்?

15 லட்சத்து 26 ஆயிரத்து 348 வாக்காளர்கள் கொண்ட தொகுதி. பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஒசூர், தளி ஊத்தங்கரை (தனி) -­­­­­­ இப்படி ஆறு சட்டசபைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 12 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 15 வேட்பாளர்கள் சுயேட்சைகளாகவும் போட்டிக் களத்தில் உள்ளனர்.

இவர்களில் காங்கிரஸ் கோபிநாத், அதிமுகவில் ஜெயப்பிரகாஷ், பாஜகவில் நரசிம்மன் ஆகியோருக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இவர்களுக்கிடையே நாம் தமிழர் வேட்பாளராக வித்யாராணி இடம் பெற்றிருப்பது கூடுதல் பேசுபொருளாக மாறியிருக்கிறது. காரணம் வித்யா வேறு யாருமல்ல, காட்டு ராஜா வீரப்பனின் மகள். மூன்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமூகத்தவராக இல்லாத நிலையில் நான்காவது வேட்பாளர் வீரப்பன் மகள் வித்யாராணி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் இவர் பிரிக்கும் வாக்குகள் எத்தனையோ, அது எந்த வேட்பாளருக்கு பாதகத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் மூன்று முக்கிய வேட்பாளர்களும் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வித்யாராணி
வித்யாராணி

இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை 9 முறை காங்கிரஸ், 5 முறை திமுக, 3 முறை அதிமுக, 1 முறை தமாகா என வென்று எம்.பி ஆகியிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி. அவர் மட்டும் இங்கே 4 முறை எம்.பியாக தேர்வு பெற்று டெல்லி சென்றுள்ளார்.

கடைசியாக நடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் டாக்டர் செல்லக்குமார் 6 லட்சத்து 11 ஆயிரத்து 298 வாக்குகள் பெற்று தன்னை அடுத்து வந்த அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை 1 லட்சத்து 56 ஆயிரத்து 765 ஓட்டுகள் வித்தியாசத்துடன் தோற்கடித்தார். அப்போது முனுசாமி பெற்ற வாக்குகள் 4 லட்சத்து 54 ஆயிரத்து 533. நாம் தமிழர் மதுசூதன் 28 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். இந்த முறை கண்டிப்பாக வித்யா வீரப்பன் ஒரு லட்சம் வாக்குகள் வாங்குவார் என பேசுகிறார்கள்.

கிருஷ்ணகிரி தொகுதியின் எல்லைகள், கர்நாடகா, ஆந்திராவைத் தொட்டு நிற்பதால் இங்கே தமிழர்களுக்கு இணையாக தெலுங்கு, கன்னடம் பேசுபவர்கள் நிறைய உள்ளார்கள். ஒசூர் தொழில் நகரமாக மாற்றப்பட்டு 40- ஆண்டுகளாகி விட்டது. இப்பவும் புதிய தொழில்கள், ராட்சச ஆலைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதனால் இங்கே பெங்களூருவைப் போல் தண்ணீர் பஞ்சம் தலையெடுக்க வெகுதூரமில்லை. அதற்கான தொலைநோக்குத் திட்டங்கள் ஏதும் இல்லை.

பெங்களூர் கழிவுகள் எல்லாம் தென்பெண்ணை ஆற்றில் கலந்து காவிரிக்குள் கொண்டு விடப்படுகின்றன. அதனால் சூழல் சீர்கேடுகள் பற்றி எளிய மக்களும் பேசுகிறார்கள். தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் வாழவே முடியாத நகரமாகி விடும் என்று சாதாரணர்கள் கூட பேசுகிறார்கள். சிட்டிங் எம்.பி. செல்லக்குமார் இதில் எல்லாம் கவனம் செலுத்தவில்லை என்கிறார்கள். இப்போது காங்கிரஸில் போட்டியிடும் கோபிநாத், தான் வேட்புமனு தாக்கலுக்குக்கூட உள்ளூர் கட்சிக்காரர்களை, கூட்டணிக் கட்சிக்காரர்களை அழைக்காமல் தன் குடும்பத்தோடு சென்று மனுதாக்கல் செய்து வந்து விட்டார். கேட்டால் நான் எப்பவுமே இப்படித்தான் மனு தாக்கல் செய்வேன் என்று கூலாக பதில் சொல்லி உள்ளார்.

இவர் 2001, 2006, 2011 ஆகிய வருடங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒசூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். தொகுதி பெரும்பான்மை வன்னியர்கள் என்றாலும், அடுத்த நிலையில் ஒக்கலிகர், ரெட்டிகள், தெலுங்கு ரெட்டிகள், நாயுடு சமூகத்தவர்கள் அவர்களுக்கு இணையாக .உள்ளார்கள். அதோடு திமுகவிற்கு கூட்டணி பலம் உள்ளது. எனவே கோபிநாத்துக்கு வெற்றி உறுதி என்றே சொல்கிறார்கள்.

பாஜக வேட்பாளர் நரசிம்மன் 1996-98 இல் கிருஷ்ணகிரி தொகுதியில் எம்.பியாக இருந்துள்ளார். அப்போது இவர் தமாகா. இப்போது தனக்காக பிரச்சாரம் செய்து, அதிக ஓட்டுகள் யார் வாங்கித்தருகிறார்களோ, அப்படிப் பட்ட பூத் கமிட்டி ஏஜண்ட்டுகளுக்கு ஸ்கூட்டர், பைக், வாசிங் மெஷின், பிரிட்ஜ் எல்லாம் பரிசாகத்தருவதாக அறிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ். எம்.ஏ படித்தவர். ஒசூரைச் சேர்ந்தவர். 2011ஆம் ஆண்டிலிருந்து பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். கே.பி.முனுசாமியின் அன்பைப் பெற்றார். மூன்று வேட்பாளர்களுக்கும் பணத்துக்குப் பஞ்சமில்லை. பதவிக்குத்தான் அலைமோதுகிறார்கள். வெற்றி என்னவோ கோபிநாத்துக்கு சாதகமாகத்தான் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com