(வலமிருந்து) சு.வெங்கடேசன், மரு. சரவணன், இராம. ஸ்ரீநிவாசன்
(வலமிருந்து) சு.வெங்கடேசன், மரு. சரவணன், இராம. ஸ்ரீநிவாசன்

மதுரை: கூட்டணி பலத்தில் முன்னேறும் சு.வெ.!

"மதுரை, இது பெயரில்ல.. உணர்வு.." என மதுரை மக்கள் உணர்ச்சிபூர்வமாகச் சொல்வது வழக்கம். மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்து உருவான தெருக்கள், தொழில்களின் பெயரால், தமிழ் மாதங்களின் பெயரால் அமைந்த வீதிகள், ஜிகர்தண்டா, கறி தோசை என விடியவிடிய விருப்பமான உணவுகள், மதுரை எப்போதுமே கலகலவென இருக்கும். அதிலும் சித்திரரை வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், அழகர் ஆற்றிலிறங்குவது என பரபரத்துப் போகும். இப்போது தேர்தல் பரபரப்பும் மதுரையை அதிரிபுதிரியாக்கி இருக்கிறது.

தமிழகத்தின் கலாச்சார தலைநகரமாகக் கருதப்படும் மதுரையில் நெசவுத் தொழில், சில்வர் பட்டறைகள், உதிரி பாகங்கள் தயாரிப்பு, உணவுப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ளன. பெரியாறு, வைகையை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மதுரை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. மதுரையில் இருந்துகொண்டுதான் எம்.ஜி.ஆர். தனது அ.தி.மு.க. அரசியலை மையப்படுத்தினார். விஜயகாந்த் மதுரையில்தான் கட்சியைத் துவங்கினார். பல அரசியல் கட்சிகளும், மாநாடு, கூட்டம் என தங்கள் வலிமையைப் பறைசாற்றும் இடமாக மதுரை தொடர்ந்து விளங்கி வருகிறது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே ஆதரவு தரும் தொகுதியாக இல்லாமல், அந்தந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப, தமிழகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தொகுதியாகவே மதுரை விளங்கி வருகிறது. இடதுசாரி இயக்கத்தின் மிக மூத்த தலைவர்களான கே.டி. தங்கமணி, ராமமூர்த்தி, சங்கரைய்யா எனப் பல ஜாம்பவான்கள் களம்கண்ட தொகுதி இது. காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரான கக்கன் போட்டியிட்ட தொகுதி. ஜனதா கட்சியின் சுப்பிரமணியின் சுவாமியும், போட்டியிட்டு வென்ற தொகுதி.கருணாநிதியின் மகன் அழகிரி 2009ஆம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட்டு திமுக சார்பில் எம்.பி.யானார். காங்கிரஸ் கட்சியே இந்த தொகுதியில் அதிகம் வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இடதுசாரி கட்சிகள் வென்றுள்ளன.

மதுரை மக்களவைத் தொகுதியில் மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. மதுரை மக்களவைத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,76,745. ஆண் வாக்காளர்கள்: 7,74,381, பெண் வாக்காளர்கள்: 8,02,176, மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 188.

மதுரை மக்களவைத் தொகுதி
மதுரை மக்களவைத் தொகுதி

இந்த முறை இந்தத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் எனப் பார்த்தால் தி.மு.க. அணி சார்பில் மா.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் முனைவர் இராம ஸ்ரீநிவாசன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் சார்பில் மோ. சத்யாதேவி போட்டியிடுகிறார்.

கடந்த தேர்தலில் சு. வெங்கடேசன் 4.47 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யன் 3.07 லட்சம் வாக்குகளைப் பெற்றார். இந்தத் தேர்தலிலும் வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

ஏற்கெனவே வெற்றிபெற்று எம்.பி.யாக இருப்பவர் என்பதால் இவர் குறித்து அதிக விமர்சனங்கள் எழுகின்றன. "நாடாளுமன்ற விவாதத்தில் பேசுகிறார். ஆனால் தொகுதி வளர்ச்சி தொடர்பான வாக்குறுதிகள் பெரும்பான்மை நிறைவேற்றப்படவில்லை" என்ற ஆதங்கம் மதுரை மக்களிடம் உள்ளது. கடந்த தேர்தலின்போது மதுரை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், பாரம்பரியப் பெருமைக்குரிய மதுரையை உலக அளவில் கொண்டு செல்வது, கீழடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆதாரங்களை வெளிப்படுத்தல், மதுரையை உலக சுற்றுலா நகரமாக மாற்றுதல், மகாத்மா காந்தி அரையாடை அணிந்ததற்கான நினைவுச் சின்னத்தை மதுரையில் உருவாக்குதல், மெட்ரோ ரயில், மதுரை - தூத்துக்குடி தொழில் வழிச்சாலை உருவாக்குதல், விமான நிலைய விரிவாக்கம், வைகையைப் பாதுகாத்தல் என 44 உறுதிமொழிகளை அளித்திருந்தார்.

நாம் தமிழர் வேட்பாளர் மோ. சத்யாதேவி
நாம் தமிழர் வேட்பாளர் மோ. சத்யாதேவி

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக மதுரை இருந்தாலும் தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பதாகச் சொல்லமுடியாது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் மதுரை பெரிதாக சாதனை படைத்ததாகச் சொல்லமுடியாது. அதற்கு ஒரு உதாரணம் வைகை ஆறு. தற்போது பயன்பாட்டில் உள்ள கண்மாய்களும்கூட சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சுருக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ன செய்தார் என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பரபரப்பான அறிக்கைகள் மூலம் மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் என்ற விமர்சனமும் அவர் மேல் உள்ளது.

இதையெல்லாம் அவரும் அறிந்து வைத்திருக்கிறார். பல நூறு கோடி கல்விக் கடன் பெற்றுத் தந்துள்ளேன். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக படிப்பு பூங்கா ஏற்படுத்தியுள்ளேன், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நாடாளுமன்றத்தில் 17 முறை பேசியுள்ளேன், மாற்றுத்திறனாளிகள் உதவி முகாம் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். தனது முயற்சியால் தான் மதுரையில் டைடல் பார்க்கை அரசு அறிவித்துள்ளதாகவும் சொல்கிறார் வெங்கடேசன்.

அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனைப் பொறுத்தவரை அவர் பல்வேறு கட்சிகளுக்கு பயணித்துவிட்டு அ.தி.மு.க.வில் அடைக்கலாகியிருக்கிறார் என்பது அவருக்கு மைனஸ். இராம ஸ்ரீநிவாசன் சிறந்த பேச்சாளர், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் எனக் குழுகுழுவாக மக்களை தொடர்ந்து அணுகிவருகிறார். என்றாலும் வெங்கடேசனுக்குக் கூட்டணி பலம் முன்னிற்கிறது. அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மற்றும் தி.மு.க.வினர் அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர். அதேநேரத்தில் சரவணனையும் ஒரேயடியாக ஓரங்கட்டிவிடமுடியாது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com