(வலமிருந்து) சுதா, பாபு, ம.கா. ஸ்டாலின், காளியம்மாள்
(வலமிருந்து) சுதா, பாபு, ம.கா. ஸ்டாலின், காளியம்மாள்

மயிலாடுதுறை: வெற்றிக்கு அருகில் யார்?

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜின் வாரிசு பாபு, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில மகிளா காங்கிரஸ் தலைவியும், வழக்கறிஞருமான சுதா, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் ம.க.ஸ்டாலின், மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காளியம்மாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நால்வருமே பிரச்சாரத்தில் சூடு கிளப்பிவருகின்றனர். இதில் அதிமுக வேட்பாளர் பாபு கட்சியினருக்கே அறிமுகமில்லாத நபராக இருக்கிறார். பவுன்ராஜின் வாரிசு என்றவுடன் கட்சியினரே அதிர்ந்து போகின்றனர். காரணம் பவுன்ராஜின் அடாவடி அரசியலால் பொறுப்பாளர்கள் பலரும் தனித்தனி கோஷ்டியாகி பிரிந்து கிடக்கின்றனர். தேர்தல் என்று வந்துவிட்டால் அவர்களை அழைத்து கனிவாக பேசி பணி செய்யச்சொல்லவேண்டும். ஆனால் ’என்னிடம் பணம் இருக்கிறது. நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று பிடிவாதமாக இருப்பது பாபுவின் சரிவுக்கு ஒரு காரணமாகவும் பேசப்படுகிறது. ஆனால் தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுக்காமல் கட்சி பொறுப்பாளர்களிடம் ‘நீ 2 கோடி கொடு. நீ…1 கோடி கொடு….வெற்றி பெற்றவுடன் திருப்பி கொடுத்துவிடுகிறேன்’ என்றபடி கையேந்தி வருவதால் அவரைக்கண்டாலே அலறி ஓடும் நிலையும் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் வாங்கிய கடனே இன்னும் திருப்பித்தரப்படவில்லையாம். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கும் தொகுதியில் பெரிய அளவில் வாக்குகள் இல்லை. எனவே வெற்றி என்பது அதிமுக வேட்பாளருக்கு எட்டாக்கனியாக போய்விடும் சூழல் இருந்து வருகிறது.

பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பாமக என்பதையும் தாண்டி கும்பகோணம் பகுதி மக்களிடம் அதிக அறிமுகமான நபராக இருப்பது  இவருக்கு பெரிய ப்ளஸாக இருக்கிறது. கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை உள்பட பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியுள்ளார். எனவே திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் இவர் பிரச்சாரம் செய்யாமலே அதிக வாக்குகளை குவிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் மக்களுக்கு புதியவராகவே காட்சியளிக்கிறார். நான் வெற்றி பெற்றால் சீர்காழியில் சட்டக்கல்லூரி, பூம்புகாரில் மீன்வளக்கல்லூரி, மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி, திருவிடமருதூரில் வேளாண்கல்லூரி கொண்டு வருவேன் என்ற கடுமையான பிரச்சாரம் மக்களிடம் போய் சேர்ந்தாலும் பாஜக கூட்டணியில் இடம் பிடித்திருப்பது பாமகவைச்சேர்ந்த பலருக்கும் பிடிக்காத ஒன்றாக உள்ளது. இந்தப்பகுதியில் உள்ள பெரும்பான்மையான பாஜகவினர் பாமகவிலிருந்து வந்த அகோரத்தின் ஆதரவாளர்கள்தான். அதனால் பாமக வேட்பாளருடன் இணைந்து பணியாற்ற வெட்கப்படுகின்றனர். தேர்தல் சமயத்தில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஆதீன ஆபாச வீடியோ மிரட்டல் வழக்கில் சிறையிலிருப்பதும் பாமக வேட்பாளருக்கு மைனஸாக உள்ளது. எவ்வளவு கடுமையாக பிரச்சாரம் செய்தாலும் இவருக்கு மூன்றாம் இடம்தான் என்கிறார்கள்.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வலம் வரும் வழக்கறிஞர் சுதா சென்னை கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே மைனஸ். ஆனாலும் தான் ஒரு பெண் என்பதை பிளஸ்ஸாக்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். அவருக்கு லோக்கல் காங்கிரஸ் எம்.எல்.ஏவான ராஜ்குமார் பெரிய அளவில் சப்போர்ட் செய்யவில்லை என்றாலும் திமுக அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பெரும் ஆதரவாக இருந்துவருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். கூட்டணி பலம்+மைனாரிட்டிகளின் வாக்குகள் நிச்சயம் இவரை கைவிடாது வெற்றியை தேடித்தரும் சூழல்தான் உள்ளது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் பலரும் அறிந்த பிரபலமாக இருந்தாலும் அவரது கட்சியினரைத்தவிர பொதுமக்களின் வாக்குகளை பெறும் அளவிற்கு இன்னும் நெருங்கிவரவில்லை. கடும் வெயிலைப்பொருப்படுத்தாது திறந்த வேனில் பிரச்சாரம் செய்தாலும் அவ்வப்போது தனது சொகுசு ஏசி காரில் ஓய்வெடுத்துக்கொள்கிறார். மற்ற மூன்று வேட்பாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுவதால் இவருக்கு நான்காம் இடம்தான் என்பது நிதர்சமான உண்மை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com