(வலமிருந்து) வை. செல்வராஜ், சுர்ஜித்சங்கர், ரமேஷ், கார்த்திகா
(வலமிருந்து) வை. செல்வராஜ், சுர்ஜித்சங்கர், ரமேஷ், கார்த்திகா

நாகப்பட்டினம்: வெற்றி வேட்பாளர் யார்?

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சுர்ஜித்சங்கர், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை.செல்வராஜ், பாஜக சார்பில் ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிமுக வேட்பாளர் சுர்ஜித்சங்கர்தான் என்பது ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அக்கட்சியினருக்கு தெரிந்த விஷயமாகவே இருந்தது. ஓ.எஸ்.மணியனின் சொந்த ஊரான தலைஞாயிறுதான் சுர்ஜித்சங்கருக்கும் சொந்த ஊர். பணபலத்துடன் வலம் வந்த காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த இவரை அதிமுகவிற்கு வரவழைத்து வேட்பாளராக்கியது ஓ.எஸ்.மணியன்தான். இதற்காக ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ் இருவரையும் சுர்ஜித்சங்கர் கணிசமாக கவனித்ததாகவும் ஒரு பேச்சு உள்ளது. கட்சியினருக்கும், மக்களுக்கும் அறிமுகமில்லாத இவரை வேட்பாளராக்கி அவரது பண பலத்தை மட்டுமே நம்பி பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் செலவிற்கு பணத்தை செலவு செய்பவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதைக்கூட சற்று குறைத்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. காரணம் எதிரே கூட்டணி பலம் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை. செல்வராஜ் இருப்பதால் வெற்றி என்பது அவ்வளவு எளிதல்ல என்று அதிமுக வேட்பாளருக்கு தெரிந்திருக்கிறது.

வை.செல்வராஜுக்கு அவரது பெயர்தான் மைனஸ்.  ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியாக இருந்த எம்.செல்வராஜ் வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்க்காததுடன் குறிப்பிட்ட நலத்திட்டங்கள் எதுவும் செய்யாததுதான் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இருப்பினும் கம்யூனிஸ்ட்கள் நிறைந்திருக்கும் தொகுதி என்பதோடு, திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மைனாரிட்டி  சமூகத்தினர் [முஸ்லீம், கிறிஸ்துவர்கள்] ஆகியோரது வாக்குகள் தனக்கு லம்பாக கிடைக்கும் என்ற தெம்போடு வை.செல்வராஜ் வலம் வருகிறார்.

பாஜக வேட்பாளரான ரமேஷுக்கு லோக்கல் பிரமுகர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களில் சிலர் பிரச்சாரத்திற்கு வந்தாலும் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுகிறார். தேர்தல் செலவிற்கு பற்றாக்குறையாக இருப்பதால் ஓட்டு துட்டு என்பதெல்லாம் நினைத்து பார்க்க முடியாததாக உள்ளதாக புலம்பி வருகிறார். பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் பலமும் இந்த தொகுதியில் பூஜ்யமாக உள்ளது. ஆனாலும் நம்பிக்கையுடன் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக பேசி வருகிறார். அடுத்து தொகுதிக்கு சற்றும் அறிமுகமில்லாத நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மக்களை கவரும்படி பேசி பிரச்சாரம் செய்தாலும் இவருக்கான போட்டி என்பது பாஜக வேட்பாளருடன்தான். அதிக ஓட்டுக்கள் வாங்கினால் மூன்றாம் இடம். இல்லையெனில் நான்காம் இடம்தான்.

எது எப்படியாயினும் கம்யூனிஸ்ட்களின் கோட்டை என்று சொல்லப்படும் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் கூட்டணிக்கட்சிகள் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ்தான் வெற்றியை எட்டிப்பிடிப்பார் என தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com