(வலமிருந்து) சசிகாந்த் செந்தில், நல்லதம்பி, பொன் பாலகணபதி
(வலமிருந்து) சசிகாந்த் செந்தில், நல்லதம்பி, பொன் பாலகணபதி

திருவள்ளூர்: யார் கை ஓங்குகிறது?

சென்னைக்கு மிக அருகில் இருக்கும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வசம் இருக்கும் தொகுதி. தற்போது மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கு காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். அரசியலுக்கும் தொகுதிக்குமே இன்னும் புதுமுகம்தான். ஆனாலும் இவர் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணக்கமாக செயல்பட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ஆகவே தொகுதி எங்கும் இவரது பெயரை அவர்கள் கொண்டுபோய்ச் சேர்த்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு தேவையான பணிகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்து வெற்றி பெற்றவுடன் செய்து தரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

அதிமுக கூட்டணி சார்பில் இந்த தொகுதி தேமுதிகவுக்குக் கொடுக்கப்பட்டு நல்லதம்பி களமிறக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை எழும்பூரில் தேமுதிக சார்பாக எம்.எல்.ஏ ஆனவர். விஜயகாந்த் செல்வாக்குடன் இருந்த காலகட்டத்தில் அதிமுக கூட்டணியில் கும்மிடிப்பூண்டி, திருத்தணி ஆகிய தொகுதிகள் தேமுதிக வசம் இருந்தன. ஆனால் இத்தொகுதி நபர்கள் இப்போது கட்சிகள் மாறிச் சென்றுவிட்டனர். ஆகவே அதிமுக பலத்தையே இவர் நம்பி இருக்கிறார்.

பாஜக கூட்டணியில், பாஜகவைச் சேர்ந்த பொன் பாலகணபதி நிற்கிறார். அவருக்கு பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பலமாக அமையும் என்றாலும், அவர் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை மீறித்தான் அவர் வாக்குகளைப் பெற்றாக வேண்டும்.

ஜகதீஷ் சந்தர்
ஜகதீஷ் சந்தர்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜகதீஷ் சந்தர் தேர்தல் உறுதிமொழியை படிக்கத் தெரியாமல் திணறியதும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. படிக்கத்தெரியாதவரை சீமான் வேட்பாளராக நிற்க வைத்துள்ளார் என்று கிண்டல் செய்து கமன்ட் அடித்து வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் தமிழ்மதிக்கும் மக்கள் மத்தியில் இன்னும் யார் என்று பரவலாகத் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் கே ஜெயக்குமார் பெற்ற மொத்த வாக்குகள்: 76 72 92

அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் பி வேணுகோபால் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை: 410337

மக்கள் நீதி மையம் வேட்பாளர் லோக ரங்கன் பெற்ற வாக்குகள்: 73731

நாம் தமிழர் வேட்பாளர் வெற்றிச்செல்வி பெற்ற வாக்குகள்: 65416

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாகப் போட்டியிட்ட பொன் ராஜா என்பவர் பெற்ற வாக்குகள் 33 944. ஆகும்.

திருவள்ளூரில் தொகுதி மக்களின் தேவைகளை வெற்றிபெறும் வேட்பாளர் செய்து வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் குறிப்பாக நீண்ட காலமாக கிடப்பில் உள்ள செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலம், பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம், வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ஏற்கெனவே எம்.பி.யாக இருந்தவர்களால் இதைத் துரிதப்படுத்த முடியவில்லை. மேலும் மாவட்ட தலைநகரம் திருவள்ளூரில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், லால் பாக் எக்ஸ்பிரஸ், டபுள் டக்கர், ஆலப்புழா கோவை எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக ரயில்வே பயணிகளும் பொதுமக்களும் வைத்த கோரிக்கைகளை இதுவரை யாரும் நிறைவேற்றவில்லை. அது தவிர பழவேற்காடு படகுத்தளம் அமைக்க வேண்டும், மீன்பிடி துறைமுகத் திட்டம் செயல்படுத்த வேண்டும், முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளும் நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது.

ஆவடியில் முப்படைகளும் அமைந்துள்ளன. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகளும் பாதுகாப்புத் துறை ஊழியர்களும் சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லுகின்றனர். எனவே ஆவடியிலும் சில வெளிமாநில ரயில்களையும் நிறுத்த வேண்டும் அது தவிர ஆவடியில் இருந்து சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, மற்றும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் பலமாக இருப்பதால் உதயசூரியன் வெளிச்சத்தில் கை சின்னம் ஓங்கி நிற்கிறது என்பதே தற்போதைய நிலவரம்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com