சட்டப்பேரவையில் போட்டியிடும் குமரி மாவட்டதி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்தார்.
அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசு புதிதாகக் கொண்டுவரும் எப்.சி.ஆர்.ஏ. சட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா இல்லையா எனக் கேள்வி எழுப்பினார்.
“சிறுபான்மை மக்களை குறிப்பாக கிறித்துவ தொண்டு நிறுவனங்களைக் குறிவைத்து இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்னரே இதைக் கண்டித்து அறிக்கை விட்டேன். பிரதமருக்கும் கடிதம் எழுதினேன். கிறித்துவர்கள் அதிகமாக வசிக்கும் அசாம், கேரள தேர்தல் நடக்கவுள்ளதால், பயந்து பின்வாங்கியிருக்கிறது, பாஜக அரசு. அது முடிந்தபின்னர் இதைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். ஓரிடத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தான் சிறுபான்மை மக்களின் காவலன்னு சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே, சிஏஏ, வக்ஃப் சட்டத்திருத்ததில் இசுலாமியர்களுக்கு துரோகம் செய்ததைப் போலவே கிறித்துவ மக்களுக்கும் துரோகம் பண்ணத் தயாராகிவிட்டீர்களா? பா.ஜ.க.வின் கொத்தடிமைக் கூட்டமாக அ.தி.மு.க.வைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்.” என்று ஸ்டாலின் காட்டமாகப் பேசினார்.