
சென்னை பெரம்பூருடன் கிழக்கு திருச்சி சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிடும் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய், இன்று அங்கு தன் வேட்பு மனுவைத் தாக்கல்செய்தார்.
மனுத்தாக்கலுக்குப் பின்னர் மரக்கடை பகுதியில் எம்ஜிஆர் சிலைக்கு விஜய் மலர் மரியாதை செய்தார்.
அதைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்தபடி விஜய் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, அமைச்சர் நேருவின் பெயரைக் குறிப்பிடாமல், திருச்சி மாவட்ட அமைச்சர் நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு வழங்குவதாக ஊழல் மோசடி செய்திருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். மொத்தம் ஆயிரம் கோடி இந்தத் துறையில் மட்டுமே ஊழல் நடந்திருக்கிறது என்றால் மொத்தமுள்ள துறைகளிலும் எவ்வளவு எனக் கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள் என்றும் விஜய் கூறினார்.
ஜனநாயகன் படத்தைத் திரையிடவிடாமல் சூழ்ச்சி செய்ததாகவும் கூறிய அவர், தனக்கும் நீதி கேட்கவே மக்களிடம் வந்ததாகவும் சொன்னார்.
தனிப்பட்ட வலிகளையும் தாங்கிக்கொண்டுதான் தான் வந்திருப்பதாகவும் விஜய் பேசினார்.
முன்னதாக, சமையல் எரிவாயு கிடைக்கிறதா என மக்களிடம் அவர் கேட்டார்.
மைய அரசுதான் காரணம் என்றாலும் நமக்கும் அதற்கும் தொடர்பில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவார் என்றும் இதற்காக அவர் டெல்லிக்குப் போய் வலியுறுத்தியிருக்கலாமே என்றும் விஜய் கூறினார்.
தன்னுடைய பேச்சின் இடையே பல முறை மைக்கைக் கீழே வைத்துவிட்டு இரு கைகளையும் குவித்து கும்பிட்டு தன்னுடைய வேண்டுகோளை முன்வைத்தார், விஜய்.
முன்னைய கூட்டங்களில் இல்லாத ஒரு பழக்கமாக அவர் இப்படிச் செய்தது, வந்திருந்தவர்களைப் புருவம் உயர்த்தச் செய்தது.