உயர்ந்துவிடுகிறது

உயர்ந்துவிடுகிறது

சில சமயங்களில் எழுத்தாளன் கதையை எழுதவில்லை; கதைதான் எழுத்தாளனை எழுத வைக்கிறது என்பதே உண்மை நிலை. தேவிபாரதியின் ‘முற்றுப் பெறாத நாவலில் இறுதி அத்தியாயம்' கட்டுரையைப் படித்தபோது எனக்குத் தோன்றியதே மேற்கூறிய கருத்து. ஒரு  எழுத்தாளன் இப்படித்தான் என்று திட்டமிட்டு எழுதத் தொடங்கிய கதை, எப்படி எப்படியோ மாறித் திருப்பங்களுடன் பிரதான பாத்திரங்களைப் பின்னுக்குத் தள்ளி துணைப்பாத்திரங்கள் நெஞ்சில் நின்று நிலைத்து விடுகிற அளவிற்கு உயர்ந்து விடுகின்றன.

தி.வெற்றிச்செல்வன், மேலைச்சிவபுரி

கவனத்தை ஈர்த்தது

எழுத்தாளர் இமையத்தின் கட்டுரை அமெரிக்கா அதன் இயல்பில் இருக்கிறது. அவரது எழுத்துகளைப் போலவே மனதின் மனித உணர்வின், வாழ்வின் முகமூடியற்ற வெளிப்பாடாக அமைந்திருந்தது பாராட்டிற்குரியதாக கவனத்தை ஈர்த்தது.

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்

வேலை

பொதுவாகவே இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் படித்துவிட்டு அரசாங்க வேலையில் ஒட்டிக் கொள்வதைப் பெரிதும் விரும்புகின்றனர்.  தனியார் துறையில் திறமை இல்லையெனில் சீட்டுக் கிழிந்துவிடும். திறமையுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றினால் ஊதியஉயர்வும் தானாக வந்துசேரும். இளநகை என்ற தொழிலதிபர் கூறியபடி, ஒரு நிறுவனத்தில், குறைந்தது 5 வருடங்களாவது பணியாற்றினால்தான், நமது திறமைகளை வளர்த்து கொள்ளவும் முடியும்.

டி.கே. கங்காராம், மதுரை

நெத்தியடி

திசையாற்றுப்படை கட்டுரையில் வான்காவின் ஓவியர்கள் பற்றிய தகவல்கள் மிகச்சிறப்பு. வான்காவின் ஓவியங்கள் என் வீட்டுச் சுவர்களில் உள்ளன.

டி.கே. சுப்ரமணியன், விழுப்புரம்

நமக்கும் ஏற்பட்டது

நிழல் அல்ல நிஜம்...!

சிறப்புப் பக்கங்கள் மிக அருமை. டூப் ஆக்டர்கள் பற்றி சிறுசிறு செய்திகளே வந்த நிலையில், சிறப்புப் பக்கங்களே தந்த பெருமை அந்திமழைக்கே சேரும். இமையத்தின் அமெரிக்கப் பயணம் சுவாரசியமான அனுபவத்தை நமக்கும் ஏற்படுத்தியது.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன்,

சென்னை – 89

 

பொறுப்பில்லை

ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் 76ஆம் ஆண்டு. சுதந்திரம் பெற்றோம் என்று சொல்வதற்கு கூச்சப்படும் அளவுக்கு மணிப்பூர் கலவரம். இரு சமுதாய மக்களுக்கு நீண்ட காலமாக நடக்கும் பிரச்னை. யாரோ தீயை ஏவிவிட்டதன் விளைவு. இரு பெண்மணிகளை நிர்வாணமாக அழைத்து வந்த கொடுமை. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி அதற்குத்  தீர்வுகாண இவ்வளவு காலம். மக்கள் வரிப்பணம் வீணாகிறதே என்ற எண்ணம் எந்த அரசியல்வாதிகளுக்கும் இல்லை. எவ்வளவு விவாதம் நடத்தினாலும் மனிதர்கள் அதை மறந்து மனித நேயத்தோடு வாழ வழி வகுக்க வேண்டும்.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

 

ஜொலிக்கிறதே

அமெரிக்கா அதன் இயல்பில் இருக்கிறது - கட்டுரை சூப்பர். இமையத்தின் கட்டுரை அவரது கதைகளைப் போலவே வித்தியாசமாக உள்ளது. ஆகஸ்ட் மாத அந்திமழை இதழ் பயணக்கட்டுரை சிறப்பிதழா? இமையத்தின் அமெரிக்கக் கட்டுரை, பிரபாகரின் சிங்கப்பூர் கட்டுரை என்று இதழ் ஜொலிக்கிறதே!

ரஜினி, எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே அட்டையில் பெரிதாக போட்டுள்ளீரே இது நியாயமா?

அ.முரளிதரன், மதுரை

தத்ரூபம்

திரையில் பார்ப்பவர்களைத் திடுக்கிட வைக்கும் டூப் கலைஞர்களின் இன்னொரு பக்க ஆபத்தான, அசலான வாழ்க்கையை அறிமுகப்படுத்தி, வைத்திருக்கிறது அந்திமழை. முத்து பாபு ஷெட்டி, பீட்டர் ஹெயின் போன்ற ஸ்டண்ட் மாஸ்டர்கள் பட்ட துயரமான வாழ்க்கையைப் படித்தவுடன் கண்கள் பனிக்கின்றன.

சிறப்புப் பக்கங்களில் விரிந்திருக்கும் சன்னிலியோனுக்கு டூப் போடுகிறவர் கட்டுரை ஹாலிவுட்டில் சண்டைக் கலைவரை அத்தனையும் நேரில் கண்டு வியந்தது போல, விழிகள் விரிவதைப் போல தத்ரூபமாக காட்சிப்படுத்தி எழுதப் பெற்றிருப்பது சிறப்பு.  அந்திமழை ஆசிரியர் குழுவிற்கு நன்றி.

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

 

மாறாது

இமையம் அவர்களின்  அமெரிக்கப் பயணம் ரசிக்கும்படி இருந்தது. அவரவர் நாடு மனதுக்கு உகந்தது. விலை உயர்ந்த கார், விலை உயர்ந்த வேட்டி - சட்டை, விலை உயர்ந்த செல்போன், இடது பக்க சர்ட் பாக்கெட்டில், கட்சித் தலைவரின் படம் எல்லாமே மாறும், எழுத்தாளன் என்ற உயர்ந்த பதவி மட்டும் மாறாது...

தமிழ்ச்சங்கத் தலைவர் பதவி என்பது இங்குள்ள எம்.எல்.ஏ., எம்.பி. பதவியைப் போல என்று படித்தபோது கிடைத்தது பெருமகிழ்ச்சி.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

 

சுவாரசியம்

உயிரைக் கொடுத்து நடிப்பது என்பதும், நடிக்கும் போதே உயிர் போக வேண்டும் என்ற கலைஞனின் கனவு பலிப்பதும் சண்டைக் காட்சிகளில்தான்.

சினிமாவில் தோன்றிய தவக்களை, குள்ளமணிக்கும் ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் திரையில் தோன்றும் நகல் நாயகன்கள் மக்களுக்கே தெரியாததால் அவர்களின் திறமை ரசிகர்களின் பாராட்டைப் பெறாமல், கதாநாயகன்களுக்கே போய்ச் சேர்கிறது.

எம்ஜிஆர் படம் முதல் ஜாக்கி சான் படம் வரை, விஜயகாந்த் படம் முதல் விஜய் படம் வரை, டூப் காட்சிகளை அம்பலப்படுத்தியது, சுவாரசியமாக இருந்தது.

பாலிவுட் மாஸ்டர் எம்.பி ஷெட்டி ‘ஊருக்கு உழைப்பவன்‘ படத்தின் கிளைமாக்சில் எம்ஜிஆருடன் மோதி இருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டிருந்தால் ரசிகனுக்கு தெரிந்திருக்கும். அதுபோல ‘இதயக்கனி‘ ஹீரோயின் ஜீவிதா அல்ல;  ராதா சலுஜா.

மல்லிகா அன்பழகன்,  சென்னை 78

 

ஓடும் ரதம்

வித்தியாசமான அத்தியாயங்களைக் கூட அனாயசமாகக் கையாண்டு அசத்தும் அந்திமழை சிறப்புப் பக்கங்களில் ‘நிழல் அல்ல நிஜம்' என்று டூப் கலைஞர்களின் அசல் கதைகள் பக்கம் நூல் கோத்துள்ள விதம் மனசெல்லாம் ஓட வைக்கும் ரதம் என்றாகி விட்டது.

 ஆர்.ஜி.பாலன், திசையன்விளை

முத்தப்பா

அப்பப்பா... ‘தத்துப்பா‘

சிறுகதையை முடித்ததும் விலை மதிப்பற்ற முத்தப்பா என்று உதடுகள் முணுமுணுப்பதை உணர்ந்தேன்!

ஆர்.விநாயகராமன், செல்வமருதூர்

வாழ்த்து

ஹீரோயின்களுக்கு டூப் போடும் இளைஞர் சஞ்சய் அவர்களின் பேட்டி டூப் போட்டு நடிப்பதில் இருக்கும் ரிஸ்கையும், கஷ்டங்களையும் புரியவைத்தது. அவருக்கு வாழ்த்துக்கள்.

மீ. யூசுப் ஜாகிர்,வந்தவாசி.

வியப்பு

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்த அந்திமழை இதழில்  நடிகர்  கமல்ஹாசனும் சில டூப் ரகசியங்களும் கட்டுரையில் வெற்றிப்படமான அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள கமலுக்கு டூப் போட்ட குள்ள டூப் நடிகர் சிக்கந்தரைப்பற்றி அறிந்தபோது வியந்துபோனேன்.

ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு

 

பாராட்டு

பொறுப்பும் பொறுமையும் முன்னெச்சரிக்கையும் நேரக் கணக்கும் துல்லியமும் தேவைப்படும் தொழில். நேரடி அனுபவம் வாய்ந்த ஸ்டண்ட் தொழிற்கலைஞர்களிடமும் திரைத்

துறை சார்ந்த பிற கலைஞர்களிடமும் பெற்ற அந்தத் தொழில் பற்றிய விரிவான விளக்கமான செய்திகளைத் தொகுப்பாக்கி இருந்த சிறப்புப் பக்கங்கள் நினைவில் நிற்பதாகவும் பாராட்டிற்குரியதாகவும் அமைந்திருந்தது.

மு.இராமு, திருச்சி

 

 அவருக்கு கொடுங்க!

இந்த இதழில்,மணிப்பூர் இனக் கலவர பிரச்னை தெளிவாக அலசப்பட்டிருந்தது. அப்புறம், முத்துக்காளை ஆசைப்படி ஒரு படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அவருக்கு பொறுப்பு கொடுங்கள் இயக்குநர்களே!!

ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com