தகுதியான கதை

தகுதியான கதை

மொசக்கறி கதையில் சிவசெல்வி செல்லமுத்து நம்மையும் முயல் பிடிக்க அழைத்துச் செல்கிறார். எவ்வளவு மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த அனுபவம்.

வயதான தாய் தந்தைக்கு மொசக்கறி கொடுக்க வேண்டும் என்ற ராசுக்குட்டியின் ஆர்வம் ஆச்சரியப்படுத்தவில்லை. கதை ஓட்டத்துடன் கலந்து விடுகிறோம். அதுதான் எழுத்தாளனின் வெற்றி. நாய்க்கு வேங்கைகள் என்பது முற்றிலும் பொருத்தம். கிராமத்தில் டைகர் என்ற வார்த்தை பிரபலம். துப்பாக்கி பிடித்த புலிகளுக்கு ஓவியப் பயிற்சி கொடுத்தவர்… மொசக்கறிக்கு உயிரோட்டத்துடன் ஓவியம் வரைந்திருக்கிறார் ஓவியர் மருது. அருமையான கதை அழகான ஓவியம்… மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான்… நாய் இழுத்துக் கொண்டே செல்கிறது… முயல்கறியின் ருசி கதை முழுவதும் பரவிப் பல இடங்களில் நாக்கில் எச்சில் வர வைக்கிறது. முதல் பரிசுக்கு முற்றிலும் தகுதியான கதை.

எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

நல்ல ருசி

வாசிப்புத் திருவிழா மூலம் வாசகர்களை உற்சாக மூட்டி சிறக்க வைத்திருக்கிறீர்கள்! பதின் பருவ சிறுகதைகள் எப்படி இருப்பின் சிறக்கும் என்பதை, எழுத்து வேந்தர் ஜெயகாந்தனின் – சிறப்பு கதையொன்றைச் சுருக்கித்தந்து அதைப்போல நல்ல சிறுகதைகள் தரும் அனுபவம் தனித்துவமானது என்பதை உணர்த்தி தெரிவு செய்யப்பெற்ற சிறுகதைகள் அனைத்தையும் படிக்க வேண்டுமென்ற விழைவை விவரிக்கும் முன்னோட்டத்தை விவரித்து, மலரும் மணமும் எனும் சிறுகதை மூலம் சிறுகதைகளை வாழ்வாங்கு வாழவைத்த பி.எஸ். ராமையா அவர்களை நினைவுபடுத்தி எத்தனை டிஜிட்டல் யுகம் வரினும் நல்ல சிறுகதைக்கு வரவேற்பு என்றுமுண்டு என்பதை நிறுவி, ஒன்பது கதைகளையும் வாசிக்க வைத்திருக்கிறார் அந்திமழை இளங்கோவன்.

மொசக்கறி முதற் பரிசுக்கதை நல்ல ருசி! நாய்களை வேங்கையாக விளித்து, முயல் வேட்டைக்கு அழைத்துச் செல்லும் வேட்டைக்காரர்கள், கண்ணி கட்டும் செங்காட்டுக்காரரின் கறார் தொழில், ராசுக்குட்டி, உடல் சூடு தனியாமல் வறுத்தால் முயல்கறிக்கு தனிச்சுவை வந்துவிடும். பெண் முயலைவிட ஆண் முயலின் கறிதான் பந்து பந்தாக இருக்கும் போன்ற யதார்த்த நடைச்சித்திரமாக உண்மைக் கதையை கதைக்குள் கொணர்ந்து படைப்பாக்கி அளித்திருக்கிறார் சிவசெல்வி செல்லமுத்து!

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை 

திருவிழா

வாழ்க்கையின் குறுக்குவெட்டு தோற்றங்களே சிறுகதைகள். நல்ல காப்பியின் சுவை நாவில் நெடுநேரம் படித்திருப்பதைப் போலவே நல்ல சிறுகதைகளும் நெடுங்காலம் நெஞ்சோடு பின்னிக்கிடக்கும்.

ஒரே சமயத்தில் பரிசும், பாராட்டும் பெற்ற இனிமையான உணர்வுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் எழுத்தான சிறுகதைகளை வெளியிட்டு அந்திமழை 2024 ஜூன் இதழில் அட்டையில் குறிப்பிட்டிருப்பதுபோல் வாசகர்களுக்கு வாசிப்புத் திருவிழாவாகவே ஆக்கிவிட்டீர்கள். இன்றைக்குப் பல கவிஞர்கள் தங்கள் கவனத்தை சிறுகதையின் பக்கம் திருப்பி சிறுகதையாசிரியர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்

நல்ல தேர்வு

உணர்ச்சித் திவலைகளின் வார்த்தைச் ஜொலிப்பே, சிலிர்ப்பே சிறுகதைகள். வாழ்வை எப்படியெப்படி எல்லாம் வடிவமைத்துக் கொள்ளலாமென்ற கனவுகளை, எண்ணியெண்ணித் தீர்மானிக்கும் பருவம் பதின்பருவம்.

சிறுகதைப் போட்டியைப் பதின்பருவக் கதைகளாகப் பரிணமிக்க வைத்த அந்திமழைக்குப் பாராட்டுகள். முதல் பரிசுக் கதை பிள்ளை – பெற்றோர் என்ற அமைப்பிலும் இரண்டாம் பரிசுக் கதை பெற்றோர் – பிள்ளை என்ற அமைப்பிலும் மூன்றாம் பரிசுக்கதை ஆசிரியை – மாணவி என்ற அமைப்பிலும் ஒளிமிகுந்த முத்துக்களாக விளங்கின பரிசுக் கதைகள். மிகச் சிறப்பான தேர்வுகளாகும்.  

தி. வெற்றிச்செல்வன், மேலைச்சிவபுரி

நற்காரியம்

ஜூன் மாத அந்திமழை யில் வெளியான கதைகள் சிறப்பான அறிவுரைக் கதைகள். போலித்தனமாக வாழும் சாதியமுறையை தகர்க்க பயன்படும். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த பி.எஸ். ராமையாவின் மலரும் மணமும் கதைக்கு ரூ. 10 பரிசளிப்பு கிடைத்ததால். அது சினிமாவுக்கே கதை எழுத உதவியது. இந்த நல்ல காரியத்தை செய்த அந்திமழைக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்.

ஜெயகாந்தனின் அக்கினிபிரவேசம் இன்றும் பேசப்படுகிறது. மொசக்கறி கதையில் வரும் ராசுக்குட்டி வைராக்கியம் ஏகலைவனை நினைவுப்படுத்துகிறது. அவன் ஆசையில் மண்ணடிக்கும் சமூக விரோதிகள். அதற்கு முதல் பரிசு கொடுக்க தகுதியுள்ள கதை. ஆடுமேய்க்க ஆள்தேவை. படிக்கும் மாணவர் சமுதாயத்தை பொருளாதார, சாதியில் பேதம்காட்டி மோசடியில் சுயநலப் பேர்வழிகளை தோலுரித்துக்காட்டுகிறது. தொக்கம் கதை ஆண்டாண்டு காலமாக இன்றும் நடக்கிறது.

கதையில் அத்தனையும் உண்மையை எழுதியுள்ளார்கள். இதற்கு சிறப்பு பரிசு கொடுப்பதற்கு தகுதி. நாற்றாங்கால், அன்புபேசி, நிலைமம், துராசாரம் போன்ற கதைகள் சிறப்பு.

நானும் கதைகள் எழுதுகிறேன். ஏதோவொரு ஒரு மனநிலையில் எழுதாமல் விட்டுவிட்டேன். எழுதியிருக்கலாமே என்று எண்ணி வருந்திபலன் இல்லை. 

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

கதைமழை!

சிறுகதைப் போட்டியில் 'மொசக்கறி' முதல் பரிசுக்காக கதையாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் வாசகர்களின் நோக்கில் இந்த  வரிசை மாறுபடலாம். அந்த வகையில், 'பதின் பருவ உணர்வுகள்' என்ற போட்டியின் மையக்கரு அடிப்படையில் பர்வீன் பானுவின் 'துராசாரம்' மற்றும் கல்பனா சன்யாசியின் 'அன்புபேசி' என்ற இரு கதைகளும் பதின் பருவ உணர்வுகளையும், அவற்றை குடும்ப உறுப்பினர்கள் லாவகமாக எதிர்கொண்ட விதத்தையும் அப்பட்டமாக எழுதிய வகையில் சிறப்பு பெறுகின்றன. இதனைச் சற்று ஒட்டியே 'இலக்கணப்பிழைகள்' இருப்பதாகச் சொல்லலாம். 'மொசக்கறி', 'ஆடுமேய்க்க ஆள் வேணும்', 'தொக்கம்', 'மாலை நேரத்து நடனம்', 'நிலைமம்' மற்றும் 'நாற்றாங்கால்' என்று எல்லாமே பதின் பருவ உணர்வுகளை விடவும் குடும்பப் பெரியவர்களின் பங்களிப்பையே அதிகம் பேசியதை (என்னளவில்) உணர முடிந்தது. இதழில்  சொல்லியிருந்ததுபோல (சில கதைகளை மூன்று முறைகூட) படித்து, திகட்டத் திகட்ட கதை படித்த அனுபவம் ஏற்பட்டது. அந்திமழை கதையாய் பொழிந்திருந்தது மிகவும் பிடித்திருந்தது!

பேரா. கரு. பாலகிருஷ்ணன், பெரிய காரை - 630 311.

இலக்கணப் பிள்ளைகள்

"அன்பு பேசி" "நாற்றாங்கால்" "நிலைமம்" "துராசாரம்" "மாலை நேரத்து நடனம்" "தொக்கம்" என்று சிறுகதைத் தலைப்புகளே கூட நம்மோடு வித்தியாசமான கதைகளைப் பேச வைத்து விடுமளவிற்கு அமைகிறது. "அந்திமழை"யை இலக்கியப் பூங்காவாக்கி இனிய கனிகளை வாசகர்களுக்கு சுவைக்கத் தந்த எழுத்தாளர்கள் அனைவருமே 'இலக்கணப் பிழைகள் " அல்ல "இலக்கணப் பிள்ளைகள்!" தான்!

ஆர்.விநாயகராமன், செல்வமருதூர் 

சிறப்பு

வாசிப்புத் திருவிழா இதழ் சிறப்பு. இரண்டாம் பரிசு பெற்ற வா.மு. கோமுவின் கதை அருமை. இன்றைக்கும் கிராமங்களில் இந்த நிலை காணப்படுகிறது. மற்ற கதைகளும் சிறப்பாக  உள்ளது. தேர்வாளர்கள் சல்லடை போட்டு தேர்ந்தேடுத்துள்ளனர்.

ந. மனோகரன், சிங்கை, கோவை

சிறப்பு

அந்திமழை சிறுகதைப் போட்டி சிறப்பிதழை ஒரே மூச்சில் படித்தேன். வெளிநாடுகளில்  பதின்பருவச் சிக்கல்களைப் பற்றி ஏற்கெனவே கேட்டிருந்தபோதிலும் ‘மாலை நேரத்து நடனம்’ ஒரு புரிதலை தந்தது. பரிசீலனைக்குவந்த 450 சிறுகதைகளில், இந்த இதழில் பிரசுரமான கதைகள் அத்தனையும் சிறப்பானவை என்ற போதிலும் தூராசாரம், அன்பு பேசி, நிலைமம், தொக்கம், நாற்றாங்கால் ஆகியவை இன்றைய கிராம/ நகர இளைஞர்/ இளைஞிகளின் மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தின.

 ஐந்து கதைகளின் ஜெராக்ஸ் நகல்களை எனது மகள்களின் பிள்ளைகளுக்கு ( வயது- 24, 21, 18) படிக்க அனுப்பி வைத்துள்ளேன். விடுமுறை நாள்களில் அவர்களுடன் கலந்துரையாடவும் (எனக்கு வயது – 76)உத்தேசித்துள்ளேன்.

எச். சுப்பிரமணியன், விருதுநகர்

logo
Andhimazhai
www.andhimazhai.com