அந்திமழை பிப்24
அந்திமழை பிப்24

தவிர்க்கவியலாத பெருந்துயரம்

சிறப்புப் பக்கங்கள் கட்டுரைகள் நல்ல அலசல். கட்சிகளுக்கென ஐ.டி விங், பொலிட்டிகல் பி.ஆர் ஏஜென்சிகள், அரசியல் விமர்சகர்கள், சமூக ஊடக நிர்வாகிகள் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ஆலோசனைப் பிரிவு என்று பல பிரிவுகளையும் வைத்து தெறிக்க விடுகிறார்கள். டுவிட்டர், பேஸ்புக், எக்ஸ் வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமும் கட்சியின் கொள்கைகளும், பரப்புரைகளும் ஒரு சொடுக்கில்கோடிக்கணக்கானவர்களின் பார்வைக்கான பதிவாகி விடுகிறது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத்திணிப்பு நடக்கிறது. தகவல்களின் வேகமும் ரீச்சும் மிக அதிகம். ஒரு பெருநிறுவன திட்டமிடல் போலவே கட்சிகளின் நிகழ்வுகள் நடத்தப்படுவது தடுக்கப்பட முடியாததாகி விட்டது. சாவித்திரி கண்ணனின் 'இனி லட்சியபூர்வமான கட்சிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் இல்லை' என்ற கூற்றை மறுக்கமுடியாது. 'அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் சந்தைக்குள் சென்று விட்டன' என்ற பேராசிரியர் பழனிதுரையின் கூற்றை மேற்கோள் காட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் அவர்களின் கருத்தும் கவனிக்கத்தக்கது.

அரசியல் எனும் பொதுச் சேவை வணிகமயமாகிப்போனது காலத்தின் கோலம் / கட்டாயம் மட்டுமல்ல, தவிர்க்கவியலாத பெருந்துயரம் என்பதும் உண்மை.

 பேரா. கரு. பாலகிருஷ்ணன், பெரிய காரை  -  630 311

வித்தியாசம்

திடீரென சினிமாவில் புதுசாக சில கலைஞர்களைப் பார்த்து, அவர்களை நமக்கு பிடித்துப் போகிறபோது, ‘யார் இவர்?' என்று மனசு விசாரிக்கும். தெரிந்து கொள்ள வாய்ப்புகள் குறைவாக இருக்கும். அப்படியானவர்களை தேடிப்பிடித்து, அவர்களது திறமையை ஊக்குவிக்கும் அந்திமழையின் பரந்த மனப்பான்மைக்குள் இடம்பெற்ற நடிகர்கள்: விவேக் பிரசன்னா, ஹரிஷ் பேரடி நேர்காணல்கள் வித்தியாசமானவை. சுவாரஸ்யமுமானவை.

யாழினிபர்வதம், சென்னை.78

மகுடம்

‘படிக்கிற பயலுக்கு எதற்கு அரசியல் கூட்டம்?' அந்திமழை ஏழாம் பக்கத் தில் காமராஜருடன் மாவட்ட ஆட்சியர் கனவை விதைத்த சிறகுகளுடன் அந்தச் சிறுவன் எட்டாம் பக்கத் தில் யாரும் எட்ட முடியாத உயரத் தில் கோட், சூட், டை அணிந்த மாவட்ட ஆட்சியராக நகரத்தில் வேலை பார்ப்பதைப் பெருமையாக நினைக்கும் காலத்தில் மலை கிராமத்தில் வேலை பார்த்ததை பெருமைப்பட்டுக் கொள்ளும் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் “நமக்கு அழகான வழிகாட்டி அந்திமழையை போல். பள்ளிக் கூடத்தைத் திறந்து வைக்கும்போது அவர் விழியெல்லாம் கண்ணீர்... படித்த என் கண்ணிலும் கண்ணீர். ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பது தலையாய கடமை. இந்தக் கடிதத்தை அந்திமழையில் எழுதும்போது என்னை நானே பெருமைப்பட் டுக் கொள்கிறேன். காரணம் நானும் காமராஜர் கட்டிய பள்ளிக் கூடத்தில் படித்தவன். சிறகுகளை விரித்துப் பற சிகரத்தை அடைவாய் என்ற மருதுவின் ஓவியம் அந்தச் சிறுவனுக்கு மட்டும் கனவை விதைக்கவில்லை, அந்திமழை படித்தவர்கள் அனைவருக்கும்தான். பெருவழிப்பாதை மலையேறி மகுடம் சூட்டிக் கொண்டது போல உணர்வு. தொடரட்டும்.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

நயம்

நுண்ணுணர்வு மிக்கவளான ராசாத்தி பிள்ளைப் பூச்சியைப் பூரானாகவும், பூரானைப் பிள்ளைப் பூச்சியாகவும் கணித்துப் பிழை செய்துவிடுகிறாள் என்பதை கலாப்ரியா ஒரு தேர்ந்த கவிஞரென்பதால் காவிய நயத்துடன் “பிள்ளைப் பூச்சி' சிறுகதையைப் படைத்துள்ளார்.

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்

அவலம்

வாக்களிக்கவிருக்கும் அனைவரும் படித்தறிய வேண்டிய அரிய விபரங்களை அள்ளி வழங்கியிருக்கிறார் சிறப்புப் பக்கங்கள் வழி அந்திமழை இளங்கோவன். சமூக ஊடகங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அரசியல் ஆரூடங்களை அப்படியே தெரிவிக்கும் லேபிள் இல்லாத பட்டாசுகள், களத்திலும் இருக்கிறோம் தளத்திலும் இருக்கிறோம் போன்ற பகுதிகள் துல்லியம்! மேலும், நீண்டகால நோக்கில் இந்தப் போக்கு ஆபத்தானது தலைப்பில் சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினர் சிந்தனின் சிந்தனை சிந்திக்கத்தக்கது. நிறுவனமான கட்சிகள் கட்டுரையில் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் இன்றைய அரசியல் கட்சிகள் எவ்வாறெல்லாம் இயங்குகின்றன

என்பதை குறித்து மிகத் தெளிவாக, நடைமுறை உண்மையை அப்படியே சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு பொருத்தமே! ‘அரசியல் என்பது பணம் சம்பாதிப்பதற்கான வழி, இன்றோ நாம் இதில் என்ன பயனடைகிறோம், இன்றைய நிலையில் யாரும் எதையும் தியாகம் செய்யத் தயாராக இல்லை, கட்சிப் பதவிகளையே காசுக்கு விற்கும் அவலத்தைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்' போன்ற பதிவுகள் அத்தனையும் உண்மை!

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

நன்று

விவேக் பிரசன்னாவின் பேட்டி மிகவும் யதார்த்தமாக அமைந் துள்ளது. காதல் கோர் சினிமா கட் டுரை அருமை. ஹரீஷ் பேரடியின் பேட்டி ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. ஆன்மீக அரசியல் கட்டுரை சூப்பர். கட்சிகள் கம்பெனிகள் ஆகவே முடியாது இளங்கோவன் கட்டுரை அருமை. சிறப்புப் பக்க ங்களில் எதை பாராட்டுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை. கட்சிகள் எப்படி சம்பாதிக்கின்றன என்ற கட்டுரை நன்று.

அ.முரளிதரன், மதுரை

நம்பலாம்

சிறப்புப் பக்கங்களில் இன்றைய அரசியலின் நிலையைப் பற்றியும், தலைவர்களும், அரசியல்வாதிகளும் தங்களது இருப்பைக் காட்டிக் கொள்ளவும் அதை நிலைநாட்டிக் கொள்ளவும் செய்யும் தகிடுதத்தங்களைப் பற்றியும் சிறப்பாக சொல்லப்பட்டிருந்தது. காதல் தி கோர் என்ற திரைப்படம், உண்மையிலேயே இந்திய சினிமாவில் ஓர் இனிய வரவுதான். திரையரங்குகளில் அது ஸ்கோர் செய்யும் என நம்பலாம்.

டி.கே. கங்காராம், மதுரை

திறனாய்வு

ராமரை கார்ப்பரேட் மூலதனமாக்கிய ஆன்மிக அரசியல் தானே இப்போது நடைபெறுகிறது? நிறைய விவரங்களைத் தந்து சிந்திக்க வைத்த சிறப்புப் பக்கங்கள் அருமை. அந்திமழையாரின் ‘கட்சி கள் கம்பெனிகள் ஆகாது'என்ற கருத்து 100 - க்கு - 100 உண்மை. இந்திய அரசியல் என்பது ரீடெய்ல் ஷாப் பிசினஸ்தான்.அதுதான் எடுபடும் என்பதே உண்மை. இயல்பான நடிகரான ஹரீஷ் பேரடியின் முகமூடி அணியாத கருத்துகள் தனித்துவம் பேசின. காதல் தி கோர் திரைப்படம் பற்றிய விமர்சனத்தை சரியான கோணத் தில் அணுகிய இரா.பிரபாகரின் திறனாய்வு சிறப்பு.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை

கொள்ளைப்பாராட்டு

ஓரு சாதாரண பூரான் மேட்டரை வைத்து காட்சிகளை விவரித்த விதமும் ஆண்பிள்ளை பூரானை அடிக்கக் கூடாது என்றிருக்கும் கிராம ஐதீகத்தைச் சுட்டியும், தீட்டியிருக்கும் பிள்ளைப்பூச்சி கதைக்குக் கொள்ளைப் பாராட்டு!

ஆர்.விநாயகராமன், 46, செல்வமருதூர்

துரோகம்

சொந்தக் காசில் பிட்நோட்டீஸ் அடித்து, வெறும் டீயை மட்டும் குடித்தபடி, தொண்டர்களால் தேர்தல் பணிகள் நடந்ததுண்டு. வேட்பாளர்கள் நடந்தே வீடுகள் தோறும் சென்று வாக்கு கேட்ட துண்டு. பிரச்சாரத்திற்கு வீடுகளில் நீளபெஞ்சுகள் இரவல் வாங்கப்பட் டதுண்டு. காமராஜர், அண்ணா காலம்வரை. இன்றைய கட்சி, தேர்தல் நடைமுறைகளை சிறப்பு பக்கங்கள் விவரித்தபோது முதலில் எழுந்த வினா: ‘இவ்வளவு செலவுகளா?!' இதற்காக வசூலிக்கப்படும் நன்கொடைகள், ஆளும்கட்சியாக இருக்கும்போது தவறான வழியில் சேர்க்கப்படும் நிதிகள் என்ற ஆபத்தான போக்கால் மக்கள்நலம், நாட்டின்வளம் குறித்த பொறுப்பு காணாமல்போகும் என்பதுதான் சமூக பரிதாபம். ஜனநாயக துரோகம்.

மல்லிகா அன்பழகன் சென்னை - 78.

ஐந்தும் ஐந்து விதம்

நூல் அறிமுகம் பகுதியில் இடம்பெற்ற ஐந்து நூல்களுமே அருமை. இதை அறிமுகம்செய்த அந்திமழைக்கு நன்றி. ஐந்து நூல்களும் ஐந்து விதமாக இருந்தன. அதாவது, ஐந்தும் ஐந்து விதம்! குறிப்பாக, சர்ச்சைக்கு உரிய மெக்காலே பற்றிய புத்தகம், காலத்துக்கு ஏற்ற ஓர் அறிமுகம். ஆசிரியருக்கு மீண்டும் நன்றியும் பாராட்டும்.

செல்வராசு, வையம்பட்டி.

சிந்திக்க வைக்கும் கதை

கட்சிகள் கம்பெனிகள் ஆகவே முடியாது என்பதற்கான காரணங்களை அந்திமழை இளங்கோவன் முன்வைத்துள்ள ஆறு காரணங்களும் உண்மையான, ஒழுங்கான, தெளிவான, அருமையான எல்லோரும் ஏற்றுக்கொண்டே தீரவேண்டியவை. சமூக ஊடகத் தளத்தில் வெளிவரும் போலிச் செய்திகளை இனங்காட்டுவது பெரும் சவாலான பணியாக இருக்கிறது என்ற இசையின் கருத்தும் மறுக்கவியலாத உண்மை. நகைச்சுவையும் அங்கதச் சுவையும் ஊடாட சிரிக்க மட்டுமல்ல, ஆழ்ந்து சிந்திக்கவும் வைக்கின்றவாறு அமைந்திருந்தது, சித்ரூபனின் இலக்கிய விபத்து சிறுகதை.

மு.இராமு, மேலரண் சாலை, திருச்சி – 8.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com