நல்வாழ்த்துகள்

நல்வாழ்த்துகள்
Published on

தமிழகத்தை முன்னேற்றும் எந்த திட்டத்தை யார் கொண்டு வந்தாலும் அவற்றை உரிய முறையில் வரவேற்பதும், வாழ்த்துவதும் தமிழர்களாகிய நம்முடைய தலையாய கடமையன்றோ? “பாலா பரம்பரை” என்றென்றும் தொடர நல்வாழ்த்துகள்.

டாக்டர் சங்கர சரவணனின் “எட்டு ஆண்டுகளும் எட்ட வேண்டிய இலக்குகளும்” அனைவராலும் படிக்கப்பட வேண்டிய கட்டுரையாகும்.

தி. வெற்றிச்செல்வன், மேலைச்சிவபுரி

இல்லை

“கருஞ்சட்டை வீரர்” கோவை
கு. ராமகிருஷ்ணன் பற்றிய கவிதா பாரதியின் எழுத்தோவியம் வெகு அருமை. ‘ஆசிரியரைக் கொன்றுவிட்டோமா’ என்ற கட்டுரை உண்மையில் சிந்திக்க வைத்தது. இன்றைய நிலையில் ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இல்லை. மாணவர்களும் மாணவர்களாய் இல்லை. இது தமிழ்நாட்டின் சாபக்கேடு.

தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்

சொல்லிக்கொண்டேன்!

 ஷங்கர் பட டூயட் பாடலில் கிளிமஞ்சாரோவை டைட் கிளோசப்பில் பார்த்த நாங்கள், அதன் அடிவாரத்தில் சில நாள்கள் வாழ்ந்து விட்டுவந்த உணர்வைத் தந்தது, சிவா அனந்த் சிறுகதை.  ‘நாம் எல்லோருமே ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள்தான்’ என்று என்னையும் அறியாமல் சொல்லிக் கொண்டேன்.

 அ.யாழினிபர்வதம், சென்னை-78.

எதார்த்தம்

பெகல்காம் தாக்குதல் ஒரு கோழைத்தனமான செயல். கல்லூரி பேராசிரியர்கள் நிலைமை பற்றி பிரபாகரின் கட்டுரை எதார்த்தத்தை பிரதி பலித்தது. கு. ராமகிருஷ்ணன் பற்றிய கட்டுரை அருமை.

கந்துவட்டி அந்த நாளிலிருந்து இந்த நாள் வரை தொடர்கிறது. “கையில வாங்கினேன். பையில போடல. காசு போன இடம் தெரியல” என்ற பட்டுக்கோட்டை பாடல் வரி கள் நிலையானவை.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

பயனுள்ளவை

முதல் கட்டுரையாக மலர்ந்திருக்கின்ற மருத்துவர் அகிலாண்ட பாரதியின் நானும் ஏமாந்தேன் கட்டுரை அனைவருக்குமானது. இரா. பிரபாகர் கட்டுரை கனமானது. ஆண்டுதோறும் புதிய புதிய தனியார் கல்வி நிறுவனங்கள் பளபளப்போடு தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. தொலைக்காட்சியைத் திறந்தால் கல்வி வியாபாரம்தான் மிகுதி! அவற்றை பணம் உள்ளவர்களே பயன்படுத்த முடியும். ஏழைகள் ஏங்கிச் சாகிறார்கள். சிறப்புப் பக்கங்களில் விரிந்திருக்கும் கட்டுரைகள் அனைத்தும் பயனுள்ளவையே.

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

பெருமை

கடன் எலும்பை முறிக்கும் என்றும் மெண்டல் டார்ச்சர் தரும் தண்டல் என்றும் கட்டுரை வழங்கிய மிஸ்டர் முள் களநிலவரத்தை கலவரத்துடன் வலியுறுத்தியது. அருமை+பெருமை!

கா. சித்ரா காமராஜ், கோவை

இன்றைய நிலை?

ஆசிரியரைக் கொன்று விட்டோமா…? கொன்று விட்டோம். தனியார் கல்லூரியில் சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் நிலை பரிதாபமானது. இன்று கொத்தனாருக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் கூலி.  ஆனால், தனியார் கல்லூரிப் பேராசிரியர்களின் நிலை?

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

எளிமை

'கடன் என்பது கடல் போன்றது' என்ற வரிகள் எவ்வளவு உண்மை என்பதைக் கட்டுரைகள் விளக்கின. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பது முதுமொழி.உலகின் 'பெரிய அண்ணன்' அமெரிக்கா 'ஆகப்பெரிய கடன்காரன்' என்ற விளக்கம் அருமை. பேராசிரியர் ஜோதி சிவஞானம் எழுதியிருந்த 'தமிழக அரசின் கடன்கள்' என்ற கட்டுரை மாநில அரசின் கடன்கள் பற்றிக் கூறிய விதம் எளிமை.

பேரா. கரு. பாலகிருஷ்ணன், பெரிய காரை-630 311.

நிம்மதி

கடன் நல்லது என்று சிறப்புப் (27) பக்கங்கள் சிபாரிசு செய்தாலும், கடன் இல்லாமல் இருப்பது கஷ்டம் தரலாம். ஆனால் நிம்மதி தரும். நல்ல தூக்கம் வரும் என்பது என் வாழ்க்கைப் பாடம்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

logo
Andhimazhai
www.andhimazhai.com