நல்வாய்ப்பு

நல்வாய்ப்பு

திரைவலம் பகுதியின் திறனாய்வு படித்தே படங்களைப் பார்க்கும் வழக்கம் உருவாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டதில், தேர்வின் நிம்மதி தொடர்கிறது. காதம்பரிக்கு நன்றி.

ஜோஜூ ஜார்ஜின் நேர்காணல் மனதைத் தொட்டது. பல படங்களில் அவரின் நடிப்பு தனித்துவ மானது. தமிழகத்திற்கு கலை சார் அடையாள நிகழ்வு தேவையே. மறுப்பதற்கில்லை. என்றாலும் தமிழகத்தில் அரசு நடத்தும் கலைசார் சங்கம நிகழ்வுகளை மிக சுலபமாக தவிர்த்தது ஏனோ...?

படிக்கச் சொல்லிய அந்திமழையாரின் முன்னுரையும், அவர் குறிப்பிட்ட 120 புத்தகங்களின் பட்டியலும், 104 பிரபலங்கள் சுட்டிக்காட்டிய நூல்களின் பட்டியலும். சிறப்பு. ஆர்வமுள்ள வாசகருக்கு வழி காட்டும் நல்ல முயற்சி.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன். சென்னை – 89. 

தியானமுறை

புத்தகக் கண்காட்சிகள் பெருகிவரும் சூழலில் புதிய வாசகர்கள் எத்தகைய புத்தகங்களைத்தேர்ந்தெடுக்க வேண்டுமென, வாசிப்பை நேசிப்பவர்களிடமிருந்து சிறு தொகுப்பை வாங்கி வழங்கியது சிறப்பு முயற்சி. 100+ முகங்கள் 500+ புத்தகங்கள் பரிந்துரைத்ததில் அதிக வாக்குகள் பெற்றது திருக்குறள்தான்.

புத்தகம் வாசிக்கவே நேரமில்லாதவர்கள் கூட பாக்கெட் சைஸ் திருக்குறளை வாங்கி வைத்துக்கொண்டு, சற்றே ஓய்வெடுக்கும்போது ஓரிரு குறள்கள் வாசித்தாலே போதும். அந்திமழை முயற்சி வெற்றிபெறும். கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகங்கள் வாசித்துவரும் என் அனுபவத்தில் சொல்கிறேன். புத்தக வாசிப்பு, நம் மனதிற்கு பக்குவத்தையும், முதிர்ச்சியையும் தரும். லௌகீக வாழ்வில் எந்த பிரச்னையையும் சமாளிக்கும் திடமூட்டும். புத்தக வாசிப்பே ஒரு தியானமுறை என்பதால் பொறுமை வளரும். எல்லோரிடமும் சகஜமாக பழகும் திறன் பெறுவதால் மனிதாபிமானம் பெருகும்.  இதைவிட வேறு என்ன வேண்டும்! இனியாவது அலைபேசியை மூடுங்கள். புத்தகங்களை புரட்டுங்கள்.

அண்ணா அன்பழகன்  அந்தணப்பேட்டை.

பதிவு

கேப்டன் மில்லர் பின்னணி இசைக் காகவே பேசப்படும் என்ற ஜிவி பிரகாஷின் நேர்காணல் சீர்பட இதயப்பதிவானது! அவர் தங்கையும் நடிப்பில் மின்னுவது எண்ணப் பதிவானது. பிரகாஷ் நடிப்பில் பிரகாசிப்பது அவரது பன்முகத் தன்மை வரிசையின் வைரக்கல்! ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு காலம் கடந்து பாராட்டு மெட்டுகளை பரிசாகப் பெறுவது கூட பரிகாசம் அல்ல பிரகாசமே!

என்.ஜே.ராமன், செல்வமருதூர்

நோக்கம்

மந்திரியான மாவோயிஸ்ட்டின் வரலாறு என்று அனுசுயா என்ற சீத்தக்காவின் தெலுங்கானா மந்திரி சபை மலரின் மணத்தை நுகர்ந்தேன்.மக்கள் நலனுக்காக ஆயுதம் ஏந்திய நிலையில் அதிகாரம் பெற்றுள்ளார் அவரது நோக்கம் ஆக்கமாக அமைய புதிய ஆட்சி ஊக்கம் தர விரும்புகிறேன்.

எஸ்.எல்.ஜார்ஜ் அருண், சொக்கன்குடியிருப்பு

மரியாதை

அரசியலில் எம்ஜிஆருக்குப் பிறகு (எதிர்க்கட்சித் தலைவர் வரை) ஜெயித்த ஒரே நடிகர். அதிகம் கோபப்பட்டாலும் அதனால் எதிரிகளை சம்பாதிக்காததன் காரணம், அந்த கோபத்திலிருந்த நியாயம். எம்ஜிஆரை ஆதர்ச புருஷராகக் கொண்டாலும் கலைஞரின் தமிழையும் வணங்கி கொண்டாடியவர். கடைசிகாலம் அரசியலிலும், சினிமாவிலும் சோபிக்க முடியாமல் முடங்கினாலும், கேப்டனின் இறுதி அஞ்சலிக்கு திரண்ட கூட்டம், நல்ல மனிதராக வாழ்ந்தால் கலியுகத்திலும் மரியாதை கிடைக்கும் என்பதை நமக்கு எடுத்துக்காட்டியது. அதனால்தான் அந்திமழையும் அட்டைப்பட அஞ்சலி கட்டுரைகள் வெளியிட்டதோ?

அ. யாழினிபர்வதம்  சென்னை.78.

உண்மை

புத்தாண்டு நல்வாழ்த்துகள். நம்மூரில் நூல்களை வாசிப்பதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் சம்பந்தமில்லை என்று எண்ணம் இருக்கிறது. அந்த கருத்தை உடைக்கும் கட்டுரை. பரந்துபட்ட புத்தகங்களைப் படிக்கும் இனத்தின் காலடியில் செல்வம் உட்பட சகலமும் இருக்கும் என்பது உண்மை. சிறப்பிதழ் அருமை.

சுந்தரபுத்தன், சென்னை

பூமர்த்தனமா?

இம்மாத அந்திமழையில் கடைசி நேரத் தயாரிப்பாக இருந்தாலும் விஜய்காந்த் குறித்த கட்டுரைகள் நன்று. ஜோஜூ ஜார்ஜ் பேட்டி சிறப்பு. புத்தகப் பரிந்துரை ஓவர்டோஸாகி விட்டது. பலரும் ஒரே ரீதியிலான புத்தகங்களை பரிந்துரைத்து பூமர்த்தனத்தை வெளிக்காட்டிக் கொண்டார்கள். உம்மணாம் மூஞ்சிகளுக்கு மட்டுமா புத்தகங்கள்? வெகுஜன நூல்களை சிலராவது பரிந்துரைத்திருக்கலாம்.

யுவகிருஷ்ணா, சென்னை

உழைத்தால் உயரலாம்

கேப்டன் விஜயகாந்தின் விருந்தோம்பல் பண்பும் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற இரக்க குணமும் ஒதுக்கிவைத்து ஒதுங்கிப் போன நடிகைகள் ஓடிவந்து கைகுலுக்கும்வரை காலம் கனியும்வரை காத்திருந்த பொறுமையும் எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி எளிமையான மனிதர்களையும் தயாரிப்பாளர் ஆக்கியதோடு, பெரிய நிறுவனங்கள், ஹிட் கொடுத்த இயக்குநர்கள், பெருத்த சம்பளம் என்பனவற்றை எதிர்பார்க்காத திடமான தெளிவான செயல்பாடுகளும் அவரின் பெயருக்கும் புகழுக்கும் உயர்வுக்கும் வழிவகுத்துக் கொடுத்தன என்பதைச் சுட்டிய நந்தகுமாரின் 'அந்த வானத்தைப்போல' கட்டுரை, உண்மைகளின் அணிவகுப்பாகும் தொகுப்பாகவும் அமைந்தது.

புத்தக வாசிப்பு குறித்த கருத்துகள் பற்றியும் அந்திமழை இளங்கோவன் சிறப்புப்பக்கங்களுக்கான முன்னுரை எழுதியிருப்பதை வாழ்க்கையில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டும். குற்றவாளியாக நின்று நீதிமன்றத்திலேயே வழக்கறிஞருமாக நின்ற சீதாக்கா குறித்த கவிதா பாரதியின் கட்டுரை பின்னணிகள் எதுவாக இருப்பினும் உழைத்தால் உயரலாம் என்பதை மெய்ப்பிப்பதாக இருந்தது.

மேலை. தமிழ்க்குமரன், திருச்சி - 101.

அருமை

தமிழினம் முன்னேற சிறப்புப் பக்கங்கள் அருமை. படிக்கப் படிக்க ஆர்வம் உண்டாகிறது. வாசகர்களிடமும் கருத்து கேட்டிருக்கலாம். அந்த வானத்தைப்போல என்ற தலைப்பிலான விஜயகாந்தைப் பற்றிய கட்டுரை+ படம் அருமை. படிக்கப் படிக்க அவருடன் பேசுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. நன்றி! கடைசி 13 வரிகள் டபுள் அருமை!! என்றும் மாறாத மனிதர் நடிகர் இளவரசுவின் பேட்டி மிக மிக அருமை. திசையாற்றுப்படை கட்டுரை மிகவும் அருமை எனில் அதற்கான படமும் அதைவிட அருமை. மொழியால் உயரலாம் வைகைச்செல்வனின் கட்டுரை, தமிழைக் காதலிக்கும் என்னைப் போன்றோருக்கு விருந்தாக அமைந்துள்ளது என்பது மட்டும் நிஜம். படியுங்கள் செல்வம் சேரும் - இளங்கோவனின் கட்டுரை எனக்குப் பிடித்த புத்தாண்டுப் பரிசு.

அ. முரளிதரன், மதுரை - 3.

ஆவலைத் தூண்டும்

அந்திமழை சிறுகதைப் போட்டிக்கான தலைப்பு, இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசிய ஒன்றே ஆகும். எத்தனை பெற்றோர்கள் இன்றைய பதின்பருவ சிறார்களது உணர்வுகளால் பெற்ற அனுபவங்களையும் அவதூறுகளையும் கதை வழியில் வடிக்க உள்ளார்களோ என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்திமழை இளங்கோவன் எழுதிய படியுங்கள் செல்வம் சேரும் என்ற தலையங்கக் கட்டுரை -  அறிவுரை, அனைவராலும் படித்தும் பாதுகாத்தும் செயல்படுத்தப்படவும் வேண்டிய ஒன்று. அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சியால் கைபேசி, வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம், தொலைக்காட்சி சீரியல்கள் போன்றவை பெருவாரியான குறிப்பான இளைஞர்களின் மிகுந்த நேரத்தை எடுத்துக்கொண்டாலும் அவை அனைத்தும் நினைவில் கொள்ளத்தக்கவை அல்ல. அந்தந்த நேரப் பொழுதைக் குறிப்பாக பஸ் - ரயில் பயணங்களில் கழித்திடுவதைப்போல தற்காலிகமாக உதவுமே தவிர, மாறாக நல்ல சிந்தனை, வாழ்வில் முன்னேற்றம், பிரச்னைகளைக் கையாள்வது போன்றவற்றுக்கு என்றும் உறுதுணையாக இருப்பவை புத்தகங்கள் மட்டுமே. 120 புத்தகப் பட்டியல், 104 இலக்கிய ஆர்வலர்களால் குறிப்பிட்ட புத்தகங்களைப் பார்த்து, முதல் கட்டமாக நான்கு புத்தகங்களைத் தேர்வுசெய்து இணையத்தின் மூலம் வாங்கிடப் பதிவுசெய்திருக்கிறேன்.

எச். சுப்பிரமணியன், துணை ஆட்சியர் (ப.நி), சின்ன சுரைக்காய்பட்டி.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com