வானவில் கடிதங்கள்

Published on: 

நடக்குமா பார்க்கலாம்!

திராவிட இயக்கத்தின் வாக்குவங்கிக்கு வயதாகிறது. அதனால் தேய்ந்து வருகிறது. திராவிட இயக்கம் இரண்டாகப் பிரிந்து இதுவரை மோதிக்கொண்டதால் ஆலமரத்தின் கீழே செடி முளைக்காது என்பதுபோல மூன்றாவது கட்சி வளரவே முடியாமல் போனது. பிரகாசமாகப் பிறந்த கட்சிகளும்கூட கழகங்களின் அரசியல் சூழ்ச்சிகளால் கலகலத்து, அக்கழகங்களிடமே ஒட்டுண்ணியாக பிழைக்கின்றன. இந்நிலையில் மாற்றத்தை விரும்பியவர்களும், ஜென்ஸிகளும் சேர்ந்து தவெக ஆட்சியை அமைத்துக் காட்டியிருக்கிறார்கள். தவெகவை முறியடிக்க வேண்டுமானால் இரு கழகங்களுக்கும் ஜென்ஸி ஆதரவு தேவை. ஜென்ஸிகளோ அரசியல் ஆர்வமில்லாமல் வளர்ந்தவர்கள். அவர்களுக்கு திராவிட இயக்க வரலாறே தெரியாது. ஜெயலலிதா, எடப்பாடியை மட்டும் பார்த்திருக்கிறார்கள். சினிமாவிலிருந்து வந்ததால் விஜய் மூலம் இப்போதுதான் அரசியலைக் கவனிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இவர்களை ஈர்க்க புதிய இளைய பட்டாளம் திராவிட இயக்கத்தை வழிநடத்த வேண்டும். அதில் பழைய குறுநில மன்னர்களின் வாரிசுகள் இருக்கக் கூடாது என்பது கண்டிப்பான கண்டிஷன். நடக்குமா பார்க்கலாம்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

Summary

பயணம்

‘ராஜாவுடன் நடந்த நாள்கள்’ – இரா. பிரபாகர் கட்டுரை எண்பதுகளுக்கு ராஜாவுடன் பயணித்ததைப் போன்ற இனிய உள்ளுணர்வை உண்டாக்கி பரவசப்படுத்தியது.

‘சந்தர்ப்பவாதம்’ என்ற தலைப்பில், அரசியல், இலக்கியம், வெள்ளித்திரை, மருத்துவம் என்று எல்லா தளங்களிலும் சென்று பலதரப்பட்ட பகிர்வுகளை கட்டுரையாளர்கள் எழுதியிருந்தனர். படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.

அறிவுமதியின் ‘மஞ்சள் பிசாசு’ கவிதை சங்கத் தமிழுக்கு சிறந்த விளக்கமாக ‘தங்கத்’ தமிழில் பரிமளித்தது.

கே.ஆர்.இரவீந்திரன், சென்னை.

மெய் மறந்து

செப்டம்பர் இதழில் நெய்வேலி பாரதிக்குமார் எழுதிய ‘மறந்து... இருந்து...பறந்து...’ சிறுகதை படித்து, மெய்மறந்து போனேன். ஹார்மோனிய வாத்தியாருடன் இருந்து, இசை கற்ற மாதிரி கதை அமைந்தது!

பாராட்டுக்கள்!

ஜே. மகரூப், குலசேகரன்பட்டினம்.

எதிர்பார்க்கிறோம்

தி.மு.க. செயற்குழுக் கூட்டம் பற்றிய கட்டுரை அருமை! கடைசி வரிகள் முத்தான வரிகளாகும். திண்டுக்கல் லியோனியின் கட்டுரைகளைத் தொடர்ந்து எதிர்்பார்க்கிறோம். ‘ராஜாவுடன் நடந்த நாள்கள்’ கட்டுரை சூப்பர்!

‘மஞ்சள் பிசாசு’ கவிதை டபுள் சூப்பர்! வாசகர்களின் கவிதைகளையும் வெளியிடலாமே!

மாலனின் கட்டுரை டிரிபுள் சூப்பர்! காந்தி புகைப்படம் ஒரு குறிஞ்சி மலர் எனில் மிகையன்று. சந்தர்ப்பவாதம் கட்டுரைகள் அனைத்தையும் பாராட்ட இந்த கடிதத்தை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துகிறேன்.

அ.முரளிதரன், மதுரை.

அட்சயபாத்திரம்

செப்டம்பர் அந்திமழையில் ‘ராஜாவுடன் நடந்த நாள்கள்’ படித்தேன். அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரம் இளையராஜா.

பண்பலையில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை கோடைத் தென்றலில் நிச்சயம் இளையராஜாவின் பாடல் இருக்கும். அதற்கடுத்து இரவு 10 மணி முதல் 11 மணி வரை நினைவே சுகம்- ஒவ்வொரு நாளும் ஒலிபரப்பாகும் ஒவ்வொரு மாவட்ட நேயர்களின் பல பாடல்களில் இளையராஜாவினுடைய தாக்கம் தான் இருக்கும்.

அன்னக்கிளியில் ஆரம்பித்த பயணம் இன்றுவரை தொடர்கிறது. இரவு நேரத்தில், பகலில் பணிக்குப் ப்போய்விட்டு வந்து இரவு நேரத்தில் தாயின் தாலாட்டாக, சின்னத்தம்பி திரைப்படத்தில் இளையராஜா இசை யமைப்பில், பாடகர் மனோ பாடிய “தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே...” நம்மைத் தொட்டிலில் போட்டு ஆட்டுவிப்பது தாய்க்குத் தாயாக இளையராஜா.

என்னைப் போல் சிறு வயதிலேயே தாயை இழந்தவர்களுக்கு தாயின் தாலாட்டு இளையராஜாதானே...

எஸ்.பஞ்சலிங்கம், திருப்பூர்.

அரிதாரம் அதிகமின்றி

‘வ்ரயிலில் வந்த மண்வாசனை’ அரிதாரம் அதிகமின்றி, கிராமத்து மக்களின் இயல்பான வாழ்வினை, செயற்கை முலாம் ஏதுமின்றி, அவர்களின் யதார்த்த உரையாடல் வழி, காந்தி சொன்ன கிராமத்து ஜீவனைப் படமாக்கி, சினிமா உலகத்தை பாமர மக்களிடம் கொண்டுசேர்த்த பாரதிராஜாவுடனான தனது கெழுதகு நட்பை அவர் யாத்தளித்த படங்களை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் நகைச்சுவை நளினமிட எழுதிச் சிறப்பித்திருக்கிறார் திண்டுக்கல் லியோனி.

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை.

புதிய சிந்தனைக்கு வழி!

சந்தர்ப்பவாதம் குறித்த சிறப்பிதழ் கட்டுரைகள் அத்துனையும் சிறப்பாக இருந்தன. குறிப்பாக, பன்னாட்டு அளவிலான பெருநிறுவனங்கள் குறித்து பீகாரைச் சேர்ந்த முனைவர் கோபால் கிருஷ்ணா ஆய்ந்தறிந்து சொல்லியிருந்த சந்தர்ப்பவாத சுரண்டல்கள் அதிர்ச்சி ரகம். ஜார்கண்ட் ஆதிவாசிகளின் வார்த்தைகளில் 'பெருநிறுவனங்கள் எங்களுக்குச் சோறிடு வதில்லை, எங்களைச் சாப்பிடுகின்றன' என்று படித்தபோது பேரதிரச்சி. அந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து முடித்தபோது யூனியன் கார்பைடு, ஜான்சன் அண்ட் ஜான்சன் தொடங்கி மெட்டா, வாட்ஸப் போன்ற நிறுவனங்கள் வரை எப்படியான சந்தர்ப்பவாத வியாபாரத் தந்திரங்களை கையாள்கின்றன என்று அறிந்தபோது மூச்சு முட்டியது. அரசியல் சந்தர்ப்பவாதம் குறித்து இந்திய - உலக அளவிலான பல சிறப்பான உதாரணங்கள் சொல்லப்பட்டன. அரசியலோ - சினிமாவோ, நோயோ - நலவாழ்வோ எந்த ஒரு நிகழ்வும்கூட ஒருவகையான சந்தர்ப்பவாதம் என்றே நம்பத் தோன்றுகிறது. பதினாறாம் ஆண்டில் பதினாறும் பெற்று ‘பொன் மழை பொழிய' அன்பு வாசகனின் வாழ்த்துகள்!

-கரு. பாலகிருஷ்ணன், பெரியகாரை-630311.

சிறப்பு

நெய்வேலி பாரதிகுமார் சிறுகதை மறந்து... இருந்து... பறந்து... மிகவும் அருமையாக உள்ளது. ஒவ்வொரு கட்டுரை யுமே சிறப்பு.

ந மனோகரன், சிங்கை கோவை

அசத்தல்

செப்டம்பர் அந்திமழை, அந்திசாயும் முன் சுட்டெரித்த வெயிலை விரட்டும் சாரல் மழையாகப் பெய்யும்போது ஏற்படும் இதத்தைத் தந்தது. மாலன் அவர்களின், 'அந்த நாள் முதல் இந்த நாள் வரை!' கட்டுரையில் 2026-இல்

த.வெ.க. ஆட்சி அமைந்(த்)தவிதம் பற்றிய அலசல் அசத்தியது.

- ஆர். சூர்யா, கூகலூர், கோபி

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com