வரலாற்று சோகம்

வரலாற்று சோகம்
Published on

ஏப்ரல் மாத அந்திமழையில் ‘வள்ளுவரும், வைரமுத்துவும்’ என்ற தலைப்பில் சங்கரசரவணன் ‘வைர முத்தியம்’ என்ற பன்னாட்டு கருத்தரங்கில் வாசித்த கட்டுரையை வெளியிட்டிருந்தீர்கள். சிறந்ததோர் ஆய்வுக் கட்டுரை அது! இரா.பிரபாகர் தொடர்ந்து எழுதும் திசையாற்றுப் படை தொடரில் வரும் கட்டுரைகள் அனைத்துமே நமது அந்திமழை இதழுக்கு மணிமகுடம் சூட்டியது போன்றே உள்ளது! அதுவும் அமெரிக்காவில், தான் சந்தித்த வட இந்தியப் பெட்டிக்கடைக் காரரின் மன நிலையையே ஓர் ஒன்றிய அரசு கல்விக் கொள்கையாக வகுக்கத் தொடங்குகிறதே... இது வரலாற்றுச் சோகம்தான் என்று இந்த மாத கட்டுரையில் கூறியிருப்பது மெத்த சிறப்பு.

- லயன் கா.முத்துகிருஷ்ணன், மதுரை-20

கிரைம் நாவல்

அட்டைப்படம் அருமை. எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. சைபர் கிரைம் பற்றிய தகவல்கள் அருமை. இமையத்தின் கட்டுரை அருமை. கடைசி வரிகள் சிந்தனையைத் தூண்டியது.

அ. முரளிதரன், மதுரை

சென்றடையுமா?

இமையத்தின் எழுத்தோவியம் அருமையிலும் அருமை. தரமான நூல் அறிமுகம். பாஜக – அதிமுக கூட்டணி வெற்றி பெறாது. மக்கள் விரோத சக்தியான பாஜகவுடன் அதிமுக கைகோர்ப்பது நிச்சயம் அழிவுக்கு வழிவகுக்கும். பாஜக இந்தியை விரும்பாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிப்பது நாட்டில் இன்னொரு மொழிப்போர் உருவாக நிச்சயம் வழி வகுக்கும். வனமக்கள் தோழன் விபிஜியின் தொண்டுகள் மிகுந்த பாராட்டிற்குரியதாகும். சைபர் கிரைம் சிறப்புப்பக்கங்களின் கருத்துகள் நாட்டின் கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும். சென்றடையுமா?

தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்

பல செய்திகள்

நினைவில் வாழும் இடங்கள் என்ற கட்டுரை இன்று புத்தக வாசிப்பு குறைந்துள்ளதைக் காட்டுகிறது. மீண்டும் கூட்டணி அரசியலில் நாடகம் தொடங்கியுள்ளது.

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் பழங்குடி மக்கள் படும்பாட்டைப் பார்த்தால், இதுதான் சுதந்திர நாடா என கேள்வி எழும். வி.பி. குணசேகரன் போராட்ட குணம் பாராட்டிற்குரியது.

இன்று நாட்டில் நடக்கும் சைர் கிரைம் குற்றங்களை பார்க்கும்போது, இது நாடா? அல்லது கொலைக்களமா என்று எண்ணத் தோன்றுகிறது. எத்தனை மனிதர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதற்கு முடிவு என்ன? என்ற கேள்வி எழுகிறது. அந்திமழையால் பல செய்திகள் அறிகிறேன்.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

பயன்மிக்கவை

அட்டைப்படம் சூப்பர்! சிறப்புப்பக்கங்களில் விரிந்திருக்கும் சைபர் கிரைம் தப்புவது எப்படி? கட்டுரைகள் அனைத்தையும் அனைவரும் ஒருமுறைக்கு இருமுறை வாசித்தல் அவசியம். சைபர் கிரைம் ஆய்வாளர்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் அனுபவமிக்க திறமைசாலிகள் உள்ளிட்ட பலரது ஆலோசனைகளை வழிகாட்டல்களும் பயன் மிக்கது! தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு நன்மைகளைவிட தீமைகளையே அதிகம் ஏற்படுத்துகிறது. நம் கல்விமுறை சரியல்ல; பணமே பிரதானம், பணமிருப்பின் எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம் என்ற அபத்தமான நம்பிக்கை இருப்பது தீது என்று பொட்டில் அறைந்து நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் கட்டுரை ‘இணையவழிக் குற்றங்கள் எனும் அதலபாதாளம்! கட்டுரையாளர் ஷாஜி சென்னுக்கு வாழ்த்துகள்.

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

சிலிர்ப்பு

வனமக்கள் தோழன் கட்டுரை எங்களின் இதயத்தை துளைத்தது. வி.பி. குணசேகரனின் போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்தது. தர்மம் எப்போதும் ஜெயிக்கும். அதர்மம் எப்போதும் தோற்கும். கவிதா பாரதி கட்டுரையின் சாரமும் அதுதான்.

ஜி.குப்புசாமி, வடபழனி

கண்ணாடி

அரசியல், சினிமா, இலக்கியத்தை கண்ணாடியாய் உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அந்திமழை.

தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி

பாராட்டு

தாய்மொழியில் தள்ளாட்டம் இன்னொரு மொழிப்போர் கட்டுரைகள் சிறப்பாக இருந்தது. ஆசியருக்கு பாராட்டுகள்.

காஜா மைதீன், நெய்க்காரபட்டி

வாழ்த்து

மக்களுக்கு தேவையான செய்திகளை தாயுள்ளதோடு மாதம் தவறாமல் வாசகர்களுக்கு கடத்தும் சிறப்புப் பக்கங்கள் வெகு சிறப்பு. ஒவ்வொருவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வலியுறுத்திய தங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

காசி. யோக அக்‌ஷயா, கோவை

எச்சரிக்கை

பாமரனா சைபர் கிரைம் செய்கிறான்? படித்தவன் தான் செய்கிறான். படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என போவான் என்றான் பாரதி. கான்ஸ்டபிளான என் அப்பா அடிக்கடி சொல்வது குற்றவாளிகளை எங்களால் கைது செய்ய முடியும். ஆனால் கடைந்தெடுத்த அயோக்கியர்களை எங்களால் கிட்டக்கூட நெருங்க முடியாது. அந்த கடைந்தெடுத்த அயோக்கியர்கள்தான் சைபர் குற்றவாளிகள்.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

உணர்ச்சி

புத்தகங்களை நேசிக்கும் வாசிக்கும் பழக்கம் சிலருக்குப் பள்ளிப் பருவம் தொட்டே தொடங்கிவிடும். எழுத்துக் குறித்தும் பதிப்பகங்கள் குறித்தும் புத்தகக் கடைகள் குறித்தும் விரிந்து பரந்த அறிதலும் புரிதலும் அதன் வழி ஏற்படும். தம் அனுபவத்தை உணர்ச்சிக் குவியலாகக் கட்டுரையாக்கியிருக்கிறார் எழுத்தாளர் இமையம்.

தி. வெற்றிச்செல்வன், மேலைச்சிவபுரி

விளக்கம்

திசையாற்றுப்படையில் மும்மொழிக் கொள்கை மற்றும் புதிய கல்விக் கொள்கை குறித்த அலசல் ஆழமானதும், அறிவுப்பூர்வமானதும் ஆகும். ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் தாய்மொழி சார்ந்த கல்வி மட்டுமே எப்படி அவர்களை தனித்தும், சிறந்தும் விளங்க வைத்தது என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்த அவரது வாதம் போற்றுதலுக்குரியது. நியூயார்க் மெட்ரோ நிலையத்தில் இந்திக்காரர் ஒருவரோடு அவருக்கு ஏற்பட்ட அனுபவப் பகிர்வும், அதற்கு அவர் கொடுத்திருந்த விளக்கமும் சிந்திக்க வைத்தது.

பேரா. கரு. பாலகிருஷ்ணன், பெரிய காரை-630 311.

தொடரும்

மீண்டும் கூட்டணி பரபரக்கும் அரசியல் களம் என்று முத்துமாறன் தந்துள்ள தொகுப்பு ரொம்ப காலமாகவே தொடரும் வகுப்பு தான். அரசியல் வாதிகளின் ரோசம் அனைத்துமே வேசம் தான்.

மருதூர் மணிமாறன் இடையன்குடி

நிச்சயம்

'நினைவில் வாழும் இடங்கள்' என்ற இமையம் தரும் சிறப்புக் கட்டுரை நினைவில் வாழ்வது நிச்சயம்.

எஸ்.எல்.ஜார்ஜ் அருண், சொக்கன்குடியிருப்பு

வெளிச்சம்

வனமக்களின்தோழன்-தோழர் வி. பி. குணசேகரன் அவர்களின் உள்ளார்ந்த சேவைகளை கவிதாபாரதி நன்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார், ஏ ஆர்வலம்புரி

நாகராஜன், நசியனூர், ஈரோடு.

செய்யுமா?

நூல் வெளியீடுகளுக்கு மக்களோடு கலந்து விழா நடத்தி வந்த வைரமுத்து வைரமுத்தியம் பன்னாட்டு கருத்தரங்கை மட்டும் அழைப்பிதழ் உள்ளவர்களை மட்டும் அனுமதித்து கார்ப்பரேட் தனமாக நடத்தியதில் அவர் வாசகியாக சற்றே வருத்தமுண்டு. அங்கு வாசிக்கப்பட்டதொரு கட்டுரையை அந்திமழை மறு வெளியீடு செய்தது கொஞ்சம் ஆறுதல் தந்தது. இதற்கு பரிகாரமாக திருக்குறள் உரை வெளியீட்டு விழாவை புதிய வள்ளுவர் கோட்டத்தில் எங்களோடு வைரமுத்து நடத்துவாரென நம்புகிறேன்.

அ. யாழினிபர்வதம், சென்னை 78.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com