ஆதங்கம்

ஆதங்கம்

கவிதா பாரதியின் பெருவழிப்பாதை-3 இல் இடம் பெற்றிருந்த போர்க்குணத்துக்கு வயது 99 கட்டுரையைப் படித்த பிறகு வேறு படைப்புகளைப் படிக்க ஆர்வமில்லாமல் போய்விட்டது! ஏழை எளியவர்களிடம் அன்பு காட்டி அரவணைக்கும் குணம் நியாயங்களை அரங்கேற்ற நினைக்கும் பிடிவாதம் தீமைகளைத் தட்டிக் கேட்கும் துணிச்சல்; மக்கள் மேம்பாட்டுச் சிந்தனைகள் போன்ற உயர் குணங்களோடு உலாவரும் சிலரில் மாமனிதர் தோழர் நல்லக்கண்ணு அவர்களின் பணிகளை அறியாதவர் இலர்! தோழர் ஜீவா, மாயாண்டி பாரதி, தா. பாண்டியன் உட்பட இடது, வலதுசாரி தோழர்களின் அளப்பரிய பணிகளும் தொண்டு வரலாறும்! மார்க்சியம் தழைக்கவும், மனிதம் சிறக்கவும் கொண்ட கொள்கைகளில் இறுதிவரை விடாப்பிடியாக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் படமாகத் தொங்குகிறார்களே தவிர அவர்கள் வகுத்ததில் யாரும் பயணிப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஒரு மாற்று அரசியல் அணி அமைக்கப்பட மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராகக் கூட தோழர் நல்லக்கண்ணு தெரிவு செய்யப்படவில்லை என்ற ஆசிரியரின் ஆதங்கம் நம்மையும் சேர்த்து உறுத்திவிட்டது.

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

வழிகாட்டல்

அய்யா நல்லக்கண்ணு பற்றிய கட்டுரை சிறப்பு. சாத்தான் கடவுளாக இருந்த காலம் பற்றி நீரதிகாரம் நாவலாசிரியர் அ.வெண்ணிலாவின் விளக்கம் இளந்தலைமுறை படைப்பாளர்களுக்கான சிறப்பான வழிகாட்டல். செய்திச்சாரல் நினைவை ஆக்கிரமித்து நெஞ்சையும் குளிர்விக்கிறது. சிறப்புப் பக்கங்களின் முகப்புத் தலைப்பே முத்திரை பதித்தது. தஞ்சை என்.ஜே.கந்தமாறன்.

சென்னை - 89

இனிப்பு

அஸ்வின் 500! தமிழனுக்குக் கிட்டாத கேப்டன் பதவி என்ற தொகுப்பு ரசிப்போடு கூடிய இனிப்பு! "ஐநூறு விக்கெட்" வீழ்த்திய வீரர் அஸ்வின் என்றாலும் அணிக்குத் தலைமை என்ற கோணத்தில் அலசல் கூட இல்லை என்ற ஆதங்கம் ஒரு பக்கம் என்றாலும் அவர் 'தங்கம்!' என்ற ஆறுதல் மறுபக்கம்!

ஆர்.விநாயகராமன், 46, செல்வமருதூர்

நேர்த்தி

பைரி  பட இயக்குநர் ஜான் கிளாடியின் நேர்ணகாணல் நேர்த்தியானது! ஏழு கடல் + ஏழு மலை தாண்டி இருந்த சினிமாவிற்குள் நுழைந்தது + உழைத்தது + பிழைத்தது + தழைத்தது + செழித்தது என்ற அவரின் பரிணாமம் அறியப் பரவசம் இதயப் பிரவேசம்!

மருதூர் மணிமாறன் இடையன்குடி

மலரும் நினைவுகள்

‘அவர் செத்துட்டார்னு பேசாதப்பா!' என்று முத்துராமலிங்கத் தேவர் குறித்துப் பேசுவதைத் தாங்க முடியாத காலம், எம்ஜி ராமச்சந்திரன் என்று கூறாமல் எம்ஜிஆர் என்றே பேசணும் என்ற மக்களின் ஆர்வம் என்றெல்லாம் இருந்த காலத்தின் காட்சியை எஸ். ஏ. பெருமாள் விவரித்தது அருமையான மலரும் நினைவுகள்!

என்.ஜே.ராமன், செல்வமருதூர்

தேர்தலை நோக்கி

மார்ச் மாத அந்திமழை இதழில் சிறப்புப் பக்கங்களில் அந்தந்த கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களையும், அவர்களின் தனித்திறமையால் கட்சிகளுக்கு ஏற்படும் ஆதரவுகளையும், விளைவுகளையும் தொகுத்திருப்பது சரியான கணிப்பு. கட்டுரைகள் எல்லாம் வரும் தேர்தலை நோக்கி இருந்ததால் மார்ச் மாத இதழ் தேர்தல் ஸ்பெசல் போல இருந்தது.

மீ. யூசுப் ஜாகிர், வந்தவாசி.

பேச்சைக்குறைப்போம்

பொழுதுபோக்கு அம்சங்களற்ற அந்நாளில் விடிய, விடிய தெருக்கூத்துபோல தேர்தல் பிரசாரம் கேட்டு வெட்டிப்பொழுது கழித்த கதைகளைத்தான் சிறப்புப் பக்கங்கள் பேசியது. தேர்தல்தோறும் பேசியதில் செயலானது எத்தனை என்றால் ஏமாற்றமே மிஞ்சும். தமிழ் மொழியைக் கொண்டாடிய அளவுக்கு இன்னும் பயிற்று, அலுவல், நீதிமன்ற வழக்காட்டு மொழியாக்கவில்லையே! இனியாவது பேச்சைக் குறைப்போம். செயலால் ஜெயிப்போம்.

அண்ணா அன்பழகன் அந்தணப்பேட்டை

காலம் போற்றும்

ஒரு தேசியக் கட்சியின் மாநில செயலராக இருந்தாலும் அரசியலால் சம்பாதிக்காதவர். பதவி இல்லாமலேயே மக்கள் பிரச்சனைக்காக போராடியவர். இந்த நேர்மை நல்லவருக்கேயுரிய இயல்பான குணம்தான். அதைத் தாண்டி கடைசி காலத்திற்காக கொடுத்த ஒரு கோடி ரூபாயையும் கட்சிக்குக் கொடுத்தாரே! அரசு கொடுத்த ரூ10லட்சத்தையும் அரசுக்கே கொடுத்தாரே! அதுதான் உயர்ந்த மனிதனுக்குரிய உயரிய இலக்கணம். கம்பீரமாக வாழ்கிறார், ..ஐயா, ஆர்.நல்லக்கண்ணு! கவிதாபாரதி போல காலமும் இதை போற்றுமன்றோ! இதைத்தான் நல்லவன் வாழ்வான் என்று சொல்வார்களோ!

 அ. யாழினிபர்வதம். சென்னை-78.

பயன்மிக்கது

இளைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியாக தேர்தல் பரப்புரை குறித்த கட்சிகளின் நட்சத்திரப் பரப்புரையாளர்களிடமிருந்து சொந்த அனுபவங்களையும் கருத்துக்களையும் பெற்றுத் தொகுத்து கட்டுரைகளாக “மாறிவரும் தேர்தல் பிரச்சார முகங்கள்” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது பயன்மிக்கது. பாராட்டுக்குரியது. நடிகை, நடிகர்களின் திறமையைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாது எல்லாவற்றையும் உணர்ச்சிவயமாகவே பார்த்து ராசியில்லாதவர்கள் என்ற முத்திரையை அழுத்தமாகவே குத்தி ஓரங்கட்டிவிடும் குணாதிசயம் மிக்கது தமிழ்த் திரையுலகமென்பதை அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டியது நடிகர் நாசரின் நேர்காணல்.

மு.இராமு, திருச்சி

வரலாறு

பெருவழிப்பாதை 3இல், நல்லக்கண்ணு அவர்களைப்பற்றி எழுதியிருப்பது நீண்ட வரலாற்றை உள்ளடக்கியது.

வார இதழில் 122 வாரங்கள் வெளிவந்த நீரதிகாரம் நாவல்பற்றி அதன் ஆசிரியர் அ.வெண்ணிலா எழுதியிருப்பது சுவாரஸ்யங்கள் நிறைத்திருந்தது.

வெ.லட்சுமிநாராயணன், வடலூர்

அவ்வளவு சவாலா?

ஒன்றுமே இல்லை என்று சிலரால் ஒதுக்கப்படுவதாகவும் ஏராளமாக இருக்கிறது என்று சிலரால் கொண்டாடப்படுவதாகவும் ஒருவித பூடகத்தன்மையுடன் உளவியல் கூறுகளுடன் அமைந்த அ.முத்துலிங்கத்தின் மொழிபெயர்ப்புச் சிறுகதை "அதிர்ஷ்டமில்லாத மனிதன்" அத்தி பூத்தாற் போன்ற சிறுகதை என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

முத்து. வள்ளிமயில்

முக்கியம்

 ‘குந்தவை நாச்சியார் குரல்"’தலைப்பில் வெளியான கட்டுரை மிக முக்கியமான பதிவாகும். ஒரு வானொலி அறிவிப்பாளர் எப்படி அடுத்தக் கட்டத்திற்கு பயணிக்கிறார் என்பதை சுவாரஸ்யம் குன்றாமல் எழுதியுள்ளார் தா.பிரகாஷ்.

பழ.தங்கவேல்

நாகரிகப் பண்பு

ஆரம்பத்தில் பிரபாகர் கட்டுரை பிள்ளைகள் படிப்பது ஒன்று கடைசியில் செய்வது வேறொன்று என்று யதார்த்தமாக உள்ளது. பெரியோர்களோ! தாய்மார்களே தலைப்பு கட்டுரை சிறப்பாக எழுதியுள்ளார்கள். உண்மை நிலையை கோடிட்டுள்ளார்கள். அந்த கருத்துக்குத்தக்க பின்னால் வந்த கட்டுரைகள் சிறப்பு.

சண்முகம், கீழக்கலங்கல்

பதைபதைப்பு

பேருந்து நிறுத்தத்தில் சிறு பையை தலைக்கு வைத்து மரியாதைக்குரிய நல்லகண்ணு தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து பீட்டர் அல்போன்ஸ் மனது மட்டுமல்ல அந்திமழை படித்தவர்களும் பதைபதைப்பிற்குள்ளா னார்கள்.

அவர் தோற்றது அவருக்கு விழுந்த அடி அல்ல; ஜனநாயகத்துக்கு விழுந்த பேரிடி. நல்லக்கண்ணுவை கோவையில் தோற்கடித்துவிட்டார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் ஒரு அரசியல்வாதியை தோற்கடித்த சிறுமையை என்றும் அழிக்க முடியாது.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com