மணிமகுடம்

மணிமகுடம்
Published on

அறைக்குள் ஒரு வானம் – சிறப்புப் பக்கங்கள் அருமை. எதைப் பாராட்டுவது எதைவிடுவது என்றே தெரியவில்லை. என்னை போன்ற புத்தக பிரியர்களிடமும் புத்தகம் சேர்க்கும் அனுபவத்தை கேட்டிருக்கலாம்.

யார் பக்கம் யார் கட்டுரை அருமை. கடைசி வரிகள் தற்போதைய தமிழக அரசியலை பிரதிபலிப்பவை. தோட்டா தரணியின் பேட்டி தற்போதைய கலை இலக்கியவாதிகளை பிரதிபலிக்கிறது. கடைசியாக கலைஞரைப் பற்றி அவர் கூறியது முத்தாய்ப்பாக இருந்தது.

பொருநை தமிழர் பெருமை கட்டுரை இதழுக்கே மணிமகுடம்.

அ.முரளிதரன், மதுரை.

பாராட்டு

புத்தகச் சேகரிப்பாளர்களின் அபூர்வ உலகத்தை கண்முன் நிறுத்திக்காட்டி  இருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவ்விதழில் தமிழ்நாட்டில் குறைந்தது பத்தாயிரம் நூல்களுக்கு மேல் தங்கள் சேகரிப்பில் நிரல்படுத்தி வைத்திருக்கும் அறிவுஜீவிகளான பழங்காசு சீனிவாசன், ஆவணக்காரர் சித்தானை, மதுகேசவ பொற்கண்ணன், ஓடை பொ. துரை அரசன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, முனைவர் சு. முத்தழகன், கோவை சிறுவாணி, பேராசிரியர் லூர்து, இராமச்சந்திரன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன் மற்றும் ஜி.ஆர். பிரகாஷ் உட்பட்ட புத்தக நேசகர்களின் புத்தகச் சேகரிப்பு சார்ந்த மகத்தான நேர்காணல்கள் அனைத்தையும் வருங்கால இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் என்பது திண்ணம். அதனால் தான் அவர்களை சொர்க்கத்தில் வாழ்கின்றவர்கள் என்று ஆசிரியர் பாராட்டியிருக்கிறார்.

அடுத்த முந்நூறு படங்கள் முன்னேறாத தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறை சேர்ந்தவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய விழிப்புணர்வு தரும் கட்டுரையாகும். நம் முன்னே விரிந்து பரந்து கிடக்கும் கலை இலக்கிய பெருமையை விரித்துகாட்டி நினைவூட்டியிருக்கும் மிஸ்டர் முள் பாராட்டுக்குரியவர். பாதுகாக்க வேண்டிய இதழ்.

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை.

அழகு

ஜனவரி சிறப்பிதழில் அறைக்குள் ஒரு வானம்! புத்தக சேகரிப்பாளர்களின் அபூர்வ உலகத்தை ஆள்பவர்களின் நேர்காணல்கள் அழகு.

கா. சித்ரா காமராஜ், மடத்துக்குளம்.

துல்லியம்

கவிஞனென்பவன் மிகைப்பட்ட உணர்ச்சிகளுடன் வாழ்பவன். பெரும்பாலான கவிஞர்கள் குடித்துக் குடித்துப் போதையில் ஆழ்பவர்களாகவும், வித்தியாசமான காம நுகர்வுக்கு ஆட்பட்டவர்களாகவும்

ஆகச் சிறந்த பொருள் களுக்கெல்லாம் சொந்தக்காரர் களாகவும் ஆகிறார்களேனும் எதிர்பாராத தருணத்தில் முடிந்து போனவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை மிகத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியது சிவா ஆனந்தின் "கவிஞன்" சிறுகதை.

எழுநிலை மாடத்தின் உச்சியில் ஏந்திழையர்கள் வரிப்பந்து ஆடிய நிகழ்வை பேனாவால் சித்திரமாக்கிய அறிவுமதியும் தூரிகையால் வண்ணச் சித்திரமாக்கிய ரவி பேலட்டும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் உரியோராவர்.

முத்து.வன்னிமயில், முத்தரசநல்லூர்

சிறப்பு

புத்தகங்கள் வழியே நான் அடைந்தவை ஜி.ஆர். பிரகாஷ் பேட்டி சிறப்பாக இருந்தது.

பாலன், திருப்பூர்

கோவில்போல

அந்திமழை ஜனவரி மாத இதழ் சிறப்பு. காரணம் புத்தகம் வாசிக்கும் பழக்கம், நூலகம் சம்மந்தமாக வந்த பேட்டிகள்.தோட்டா தரணியின் உழைப்பும் வைராக்ய வாழ்க்கையும் பாராட்டப்பட வேண்டியவை.

தேர்தல் நெருங்குவதால் அரசியல் வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். இதை நம்பி வாழ்நாளை கழிக்கும் கூட்டம் அதிகம்.

நூல் சேகரிப்பாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டை கோயில் போல் வைத்துள்ளார்கள். பழங்காசு சீனிவாசன், சித்தன், மதுகேசவ பொற்கண்ணன், ஓடை பொ. துரை அரசன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, வித்யா ராஜகோபாலன், முனைவர் சு. முத்தழகன், ஜி.ஆர். பிரகாஷ், திருவள்ளுவனார், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன் நேர்காணல் வரை வந்துள்ளது. என் போன்றவர்கள் ஜீவா பெயரில் 30 ஆண்டுகளாக நடமாடும் நூலகம் நடத்தி வருகிறோம். வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் அந்திமழைக்கு பாராட்டுகள்.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்.

சல்யூட்

கனவை நனவாக்கிய கீர்த்தனா-  கட்டுரை படிக்கும் போதே மனதை நெகிழசெய்தது. சிறப்புப்பக்கங்கள் பகுதியில் வெளியான நூல்கள் பற்றிய கட்டுரைகள் அருமையான பதிவு. பழங்காசு சீனிவாசன், சித்தானை, ராஜசேகர், ஞானாலயா இவர்களுடைய புத்தக சேவைக்கு ஒரு சல்யூட்.

பாரதிராஜன், அம்பத்தூர்

மலைத்தோம்!

தங்களது ஜனவரி இதழில் வெளிவந்த "புத்தகங்கள் வழியே நான் அடைந்தவை என்ற தலைப்பில் கோவை சிறுவாணி ஜி ஆர் பிரகாஷ் பற்றிய தகவல்கள் என்னை வியக்க வைத்தன. அவரது வாசகர் மையத்தில் நானும் அங்கத்தினராக இருந்து வருகிறேன். அவரது வீட்டில் மலையாக அவர் வைத்திருந்த புத்தகங்கள்  அழகாக அடுக்கப்பட்டுள்ளன. அதைக் கண்டு மலைத்து நின்றோம் நாங்களும். ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. மேன்மேலும் அவர் வளரட்டும். ஊக்குவிக்க நீங்கள் இருக்கையில் வேறென்ன வேண்டும்?

சே.ரா.விஸ்வநாதன், கூடுவாஞ்சேரி.

குறைபாடு

முந்நூறு படங்கள் முன்னேறாத தமிழ் சினிமா... என்ற சினிமாத் தொகுப்பு அந்திமழைக்கே உரித்தானது! அதே சமயம் தமிழ் சினிமாவுக்கான முன்னேற்றம் கரிபூசப்பட்டுள்ளதோ என்று அறியும் படியான விவரங்களைப் படித்ததும் முகமும் கருத்துத் தான் போய்விட்டது! மெகா தொடர்கள் கூட வித்தியாசம் நிறைந்த நல்ல கதைக்களங்களைக் கொண்டு வரும் போது பெரிய திரையில் முன்னேற்றக் குறைபாடு என்பது ‘கறை' தான் !

 என்.ஜானகிராமன், செல்வமருதூர் 

கூட்டணி

யார் பக்கம் யார்?' தொடங்கும் கூட்டணி சாகசங்கள்! என்ற அரசியல் தொகுப்பு ட்ரெண்டுக் கேற்றவாறு கரண்டாக உள்ளது. முழுவதும் படித்த பின்னர் தான் புரிந்தது " தொங்கும் கூட்டணி சாகசங்கள்!' என்று!

எஸ்.எல்.ஜார்ஜ் அருண்   சொக்கன்குடியிருப்பு,

எழுதியிருக்கலாம்

ஜனவரி இதழ் நூலகங்களைப் பற்றிய இதழாக மலர்ந்துள்ளது. திருவில்லிப்புத்தூரில் அமைந்துள்ள இரண்டாவது பழமையான நூலகமான பென்னிங்டன் நூலக த்தைப்பற்றி எழுதி யிருந்தால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும்.

ந மனோகரன், சிங்கை கோவை.

வழி என்ன?

ஜனவரி மாத இதழின் சிறப்புப் பக்கங்களில் வெளியான புத்தக சேகரிப்பாளர்களின் அழகான அனுபவப் பகிர்வு கட்டுரைகள் மிகவும் உன்னதமானவை. இந்தப் புத்தகங்களை நமக்குப் பிறகு யார் பாதுகாப்பார்கள் என்ற கவலைதான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இதற்கென்று அரசாங்கம் இவர்களின் புத்தகங்களை கையகப்படுத்த வேண்டும் அல்லது பல்கலைக்கழகங்கள் கையகப்படுத்த வேண்டும். அது ஒன்றுதான் வழி.

லயன் முத்துகிருஷ்ணன், மதுரை.

நடக்குமா?

 ‘முந்நூறு  படங்கள்... முன்னேறாத தமிழ்’ சினிமா கட்டுரை சமகால தமிழ் சினிமாவின் பிரச்னையை சுட்டிக்காட்டுகிறது. தமிழ் ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் வட இந்தியாவிலும் கொடிகட்டிப் பறக்க, இயக்குநர்களால் தான் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க முடியவில்லை என ஆதங்கப்படுகிறார். அந்த குறையை  இலக்கிய வாசிப்பு போக்கும் என்கிறார். நடக்குமா?

கார்த்தி, விழுப்புரம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com