பழனி செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள வன்னியர் வலசு கிராமத்திற்கு காந்தியடிகள் வந்திருக்கிறார். காந்தி வருவதற்காகவே அந்த சாலை போடப்பட்டது. நடந்தே வந்திருக்கிறார். இங்கு 3 ஆண் குழந்தைகளுக்கு பெயர் வைத்திருக்கிறார். ராஜகுரு, விவேகானந்தர், தாகூர் என்று.
‘தனியாகத்தான் நடந்து போவேன்’என்று வண்ணதாசன் எழுதிய கட்டுரை சிலிர்க்க வைக்கிறது. எழுத்தாளன் நடக்க வேண்டும். தான் கண்ட காட்சியை கண்முன் கொண்டு வர வண்ணதாசனால் தான் முடியும். எழுத்தாளன் ஒருவன் மேகத்தை உரசிக் கொண்டு செல்லும் காட்சியை அழகாகக் கொண்டுவர அந்திமழையால் தான் முடியும். அந்திமழை இளங்கோவன் கால்நடை மருத்துவராக ஆரம்பித்து பத்திரி்கைத் துறையில் சாதித்து கம்பீரமாக இருக்கிறார். அச்சிதழ் கொண்டுவருவது எளிதானது அல்ல. அந்திமழைக்கு நல்ல எதிர்காலம் உண்டு
எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்
வரவேற்பு
உடற்பயிற்சியில் தலை சிறந்தது நடைப்பயிற்சி என்பதை கூறியிருந்தார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பிச்சாண்டி. கலைஞர் போன்ற ஆகச் சிறந்த ஆளுமைகளின் நீண்டகால அனுபவத்தை அனைவரும் அறியத்தக்க வகையில் ஆகஸ்ட் மாத இதழில் வெளிவந்த ‘நடந்த கதைகள்’ அந்திமழையின் தேன் மழையாக வெளிவந்தன. வரவேற்றுப் பாராட்டக்கூடிய அரிய கருத்துகள்.
தண்டாயுதபாணி, வேலூர்
கலங்கினேன்
கவிதா பாரதி எழுதிய கண்ணகி நகர் எக்ஸ்பிரஸ் கட்டுரை பல தெளிவுகள் உள்ளடக்கிய கட்டுரையாக மின்னியது. ‘நாங்கள் இன்னும் மண் தரையில்தான் பயிற்சி எடுக்கிறோம்.’ என்பதைப் படித்துக் கலங்கினேன். உரிய உதவி கிடைக்க வேண்டும்.
குப்புசாமி, வடபழனி
கவனிக்கத் தக்கது
குக்கிராமத்தில் வசிக்கும் எனக்கு பழைய நினைவுகளை உள்வாங்கி உசுப்பிவிட்டுவிட்டது அறிவுமதியின் மண். இப்போது சிறுசுகள் நவீன மோஸ்தரில் பளபளப்பு வண்ணக் கெட்டித்தாளில் நிரப்பப்பட்ட சிப்ஸ்களை உண்ணத் தொடங்கியிருப்பதையும் நினைக்க வைத்த நெடுங் கவிதை. மர உரலில் உலக்கையால் குத்திப் புடைத்து சாப்பிடும் அவலின் ருசி நாவல் ஊறுகிறது. வாழ்த்துகள் கவி!
தனிவழி நாயகன் எவ்வாறு செயல்பட்டால் அரசியல் கோலோச்சலாம் என்பதை அவரது படங்களில் ஒலித்த பாடல்களை முன்வைத்து நகைச்சுவையாகப் படைத்திருக்கிறார் ஜான் ஸ்னோ! தனித்து நின்றால் நீண்ட மேடு பள்ளங்கள் நிறைந்த பயணத்துக்கு விஜய் தயாராக வேண்டும் என்று தனது கருத்தையும் கட்டுரையாளர் பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.
அந்திமழை இளங்கோவனின் முதலாமாண்டு நினைவு நாளுக்காக கவிஞர் சுகுமாரன் எழுதியிருக்கும் பல வண்ணக் கனவுகள் கண்டவர் என்னும் கட்டுரையை இதழாளர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும். அந்திமழை அவதரித்து இன்று சிறந்த பத்திரிகையாக இலக்கிய மழை பொழிகிறது.
பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை
அபத்தம்
கட்சி தொடங்கும் நடிகர்களை எம்.ஜி.ஆரோடு ஒப்பிடுவது அபத்தம். சமீப கால விஜயகாந்துடன் விஜய்யை ஒப்பிடுவது வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். முதல் தேர்தலில் எட்டு சதவீத வாக்கு வங்கியோடு விஜயகாந்த் மட்டுமே எம்எல்ஏவானார். அவரது வருகையால் திமுகவும் அதிமுகவும் மெஜாரிட்டி இழந்தன. அத்தகைய தாக்கத்தை மட்டுமே 2026ல் விஜய் கட்சியும் ஏற்படுத்துமென்றே எதிர்பார்க்கலாம்.
மல்லிகா அன்பழகன் சென்னை.
மறக்க முடியாது
பேராசிரியர் மு.நாகநாதன் எழுதிய கலைஞரோடு எனது நடைப் பயிற்சி அனுபவங்கள் கட்டுரை உள்ளத்தை வெகுவாக கொள்ளை கொண்டது. தனியாகத்தான் நடந்துபோவேன் என்னும் வண்ணதாசனின் சிறப்புப் பக்கங்கள் உண்மையில் சிறப்புப் பக்கங்கள்தான்.
மண் என்னும் தலைப்பில் அறிவுமதியின் எழுத்தைப் பாராட்ட உண்மையில் வார்த்தைகள் இல்லை. அறிவுமதி தமிழ்நாட்டின் தலைசிறந்த கவிஞர் என்பதற்கு பாடலே உதாரணம். தனிவழிநாயகன் விஜய் பற்றிய ஜான் ஸ்னோ எழுதிய எழுத்தோவியம் தமிழ்நாட்டு அரசியலை ஓர் அலசு அலசியது. பல வண்ணக் கனவுகளைக் கண்ட அந்திமழை இளங்கோவனை யாராலும் மறக்கவே முடியாது.
தங்க. சங்கர பாண்டியன், பொழிச்சலூர்
நெருக்கம்
பாசத்திற்கு முன் பணம், பதவி, பட்டம், புகழ் ஆகியவை அனைத்தும் துச்சமாகிப் போய்விடும் என்பதை அழுத்தமாக விளக்கியது சோம. வள்ளியப்பனின் தலைமுறை சிறுகதை.
தாத்தாவிற்கும் பேத்திக்கு மிடையேயான உறவில் பாசம் எத்தகைய விந்தைகளைச் செய்கிறது என்பதை உணர்த்தும் வண்ணம் சிறுகதை அமைந்திருந்தது. உண்மைக்கு மிகமிக நெருக்கமான சிறுகதை.
முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்
சிறப்பு
மண் கவிதை சூப்பர். தனிவழி நாயகன் கட்டுரை அருமை. அந்திமழை இளங்கோவனைப் பற்றிய சுகுமாரனின் கட்டுரை அருமையிலும் அருமை. நமது இதழுக்கே மணி மகுடமாய் அமைந்துள்ளது. குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. பற்றி மாலன் எழுதிய கட்டுரை மிகச் சிறப்பு. எதைப் பாராட்டுவது எதை விடுவது என்று தெரியவில்லை.
அ. முரளிதரன், மதுரை
மறக்க முடியாது
விஜய்யை தனிவழி நாயகன் என்று தலைப்போடு செய்தி. எல்லா நடிகரும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மாதிரி ஆகிவிட முடியாது. நடிகரை நம்பும் மக்கள் சாதனையாளர்களாக இருந்தால்தான் நம்பிக்கையும் ஏற்படும். அந்திமழை இளங்கோவனைப் பற்றி சரியாக நினைவு கூர்ந்துள்ளார்கள். அந்த சிரித்த முகத்தை மறக்க முடியாது. கையெழுத்து பிரதியில் ஆரம்பித்து அச்சாகும் வரைக்கும் சாதனை புரிந்துள்ளார்.
கண்ணகி நகர் பற்றி கவிதா பாரதி எழுதிய கட்டுரை நன்று. ராவ் எழுதிய கட்டுரை புதிய அனுபவமாக இருந்தது. நல்லதொரு வாசிப்பனுபவம்.
இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்
பாராட்டு
ஆகஸ்ட் இதழில் பல வண்ணக் கனவுகள் கண்டவர் கட்டுரை படிப்பதற்கு சிறப்பாக இருந்தது. இதை வெளியிட்ட ஆசிரியருக்கு பாராட்டுகள்.
அ. காஜா மைதீன், நெய்க்கரைபட்டி
செய்வார்களா?
ஏழ்மையில் பிறந்து, உள்மன உந்துசக்தி பெற்று, கபடி விளையாட்டில் சாதித்திருக்கும் பெண்ணை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் 'கவிதாபாரதி' (பேனா) க்கு வணக்கம்.
கார்த்திகாவின் கோரிக்கையை தமிழக முதல்வருக்கும், விளை யாட்டுத்துறை அமைச்சரும் நிறைவேற்றித் தருவார்கள் என்று நம்புவோம்.
ந.செளந்தரராசன்,சென்னை 91
தொட்டது!
'நினைத்தாலே மரணம்!' சிறுகதை படித்தேன். நிஜமா? நிழலா? என்று யூகிக்க முடியாத படி திருப்பங்களுடன் சென்ற கதை நெஞ்சைத் தொட்டது!
எஸ்.எல்.ஜார்ஜ் அருண் சொக்கன்குடியிருப்பு
சுவை
அறிவுமதியின் 'மண்' கவிதை படித்தேன். விண்ணென்று அறிவுக்குள் மின்சாரம் பாய்ந்தது. கால் நூற்றாண்டு முன் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் புழுங்கல் அரிசியை ஈரப் பதப்படுத்தி மெல்ல அதக்கி ருசிக்கும் உமிழ்நீர் குறித்தும், அவல் இடிக்கும் பெண்கள் அவலை மென்று அதக்கி ருசிப்பது குறித்தும் நினை வூட்டி எங்கள் உமிழ் நீருக்கும் சுவை சேர்த்து விட்டதே.
ஆர்.ஜி.பாலன், மணலிவிளை
ரசனை
ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிச்சாண்டி எழுதிய தனது சென்னை நடைப்பயிற்சி அனுபவம் படு திரில்லாக இருந்தது. எனக்கும் இதுபோன்ற சில அனுபவங்கள்உண்டு!
ஆனால் அவர் எழுதிய விதம் படுசுவாரஸ்யம்! அமெரிக்காவில் நடைப்பயிற்சி சென்ற போது சிங்கம் பிரச்சினை படாதபாடு படுத்தியதை இவர் நகைச்சுவையோடு சொன்ன விதம் ரசனைக்குரியது!
கடல் நாகராசன், கடலூர்