ஆடம்பரமே அந்தஸ்து!

ஆடம்பரமே அந்தஸ்து!

திகைக்க வைத்த திருமண விருந்துகள் குறித்து திசையாற்றுப்படை ஹாஸ்யமாக விவரித்தாலும் நமது அநாகரிகத்தை நாசூக்காகக் குட்டியது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமண வீடுகளில் மண வீட்டார் நான்கைந்து முறை ‘சாப்பிட வாங்க!' என்று வற்புறுத்தி கைப்பிடித்து அழைத்த பிறகுதான் சாப்பிடச்செல்வதைப் பார்த்திருக்கிறேன். இன்று சாப்பிடும் பந்திக்குப் பின்னால் ரிசர்வேஷன் செய்து நிற்பதையும் பார்க்கிறேன். ஒருவேளை, ஆடம்பரமே அந்தஸ்து என்ற மூடநம்பிக்கையில் மொத்த சம்பளத்தையும் இஎம்ஐ&யில் இழப்பதால் வீட்டில் நிறைவாக சமைத்து சாப்பிட முடியாமல்தான் திருமண மண்டபங்களில் பந்திக்கு முந்துகிறார்களோ! பொருளாதார பலம் பெறுவதே வாழ்க்கையின் வெற்றி என்ற கணிப்பில் தனிமனித தரம் பற்றி தமிழன் மறந்து விட்டான். மேலை நாகரீகத்தை காப்பியடித்து தாயக நாகரிகத்தை தொலைத்து விட்டான். எல்லோரும்

சொந்த வாழ்வியல் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தியது, இரா. பிரபாகரின் மே மாத அத்தியாயம்.

அ.யாழினிபர்வதம் சென்னை - 78

மானிடா..

பெரிய வூட்டுப் புள்ளை... பெரிய புள்ள தாம்பா என்ன பணிவு என்ன அடக்கம்... ஆமா நம்பே அருள்நிதி நேர்காணலத்தாஞ் சொல்றேன்.

பூனைக்கு இருக்கிற அறிவு கூட உனக்கில்லையே மானிடா என்று சொல்லியது என்.ஸ்ரீராம் சிறுகதை,

வெ.சின்னசாமி, மானூர்,பழனி

மணியானவை

இந்த மாத இதழ் காக்கிச் சட்டையின் கதைகள் என்ற தலைப்பில்  செங்கதிர் ஐபிஎஸ் எடுத்த  நடவடிக்கை மனசாட்சி உள்ள காவல் அதிகாரிக்கு எடுத்துக் காட்டு. மேனாள் நீதிபதி சந்துரு எழுதிய கட்டுரையில் கடைசி வாசகங்கள் மணியானவை.

இரா.சண்முகவேல், கீழக்கலங்கல்

துல்லியம்

 திசையாற்றுப்படையில், திருமண விருந்துகள் கேலிக் கூத்தாக நிகழ்த்தப்படும் ஒரு நிகழ்வாக மாறிய அவலத்தை வருத்தத்துடன் கூறிய விதம் அருமை.

காவல்துறையினரும் மனிதர்கள் தான். ‘ஈரமான' இதயத்திற்கு

சொந்தக்காரர்கள் தான். மனிதநேயத்-தோடு பிரச்னைகளை அணுக முயற்சிப்பவர்கள் தான் என்பதை துல்லியமாக அறிய முடிந்தது.

 ஆர்.மோகன், சேலம்

நல்ல தீர்ப்பு

காவல் துறையில் ஒரு மிகப் பெரிய குழுவே வேலை செய்யும். போட்டோவுக்கு போஸ்  கொடுக்க மட்டும் உயர் அதிகாரிகள் வந்துவிட்டுச் சென்றுவிடுவர். தற்போதைய நிலவரப்படி மன அழுத்தம் அனைத்து துறைகளில் கடவுள் போல் நீக்கமற நிறைந்து நிற்கிறது. காலம் தான் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

கலைச்செல்வி, அந்தியூர்

ரசிக்கத் தக்கதே

கலவரத்தின் நடுவே ரவி ஐபிஎஸ் எழுதிய கட்டுரை மிக மிக  ரசிக்கத்தக்கது. அதிகாரியாய் நிற்பது வேறு - சாதாரண மனிதனாக நிற்பது வேறு.

பாப்பம் சாமி, மூலக்கடை

விளங்கவில்லை

என்.ஸ்ரீராம் எழுதிய கதை நன்றாக இருந்தது. ஆனால், கதைக்கு ஏன் ‘உருவிலிக் கண்ணி‘ எனப் பெயரிட்டார் என்பதும், அதன் அர்த்தம் என்ன என்பதும் விளங்கவில்லை. மேலும், திரைவலம் பகுதியில் எகிறி அடிக்கும் எயினர்கள் என தலைப்பிட்டிருக்கிறீர்கள். எயினர்கள் என்றால் என்ன, விளங்கவில்லை.

டி.கே.கங்காரம், மதுரை

வாடிவிடும்

மழை இல்லையென்றால் பூமிவாழ் பெரும்பாலான உயிரினம் மடிந்துவிடும். அந்திமழை இல்லை என்றால் வாசகர் மனம் வாடிவிடும். வாசகர் கடிதத்திற்குப் பரிசோ, சன்மானமோ அல்லது அவர்களுக்கு ஒரு வருடம் அந்திமழையையோ அனுப்பலாமே.

ஸ்ரீமத் அருணகிரி, அந்தியூர்

கத்திமேல் நடந்து

சிறப்புப் பக்கங்களாக காக்கிச் சட்டைக் கதைகளைக் காவல் துறை உயரதிகாரிகளிடம் கேட்டுத் தொகுத்தளித்திருப்பது சிறப்பு. நேர்மையான அதிகாரி ஐ.ஜி. பெருமாள் சாமி அவர்களின் சிறப்பை சினிமாதான் வெளியுலகத்துக்கு அறியவைத்திருக்கிறது என்றும், அவ்வப்போது சில காவலதிகாரிகள் சட்டப்படி செயல்படுவதும், அதையும் மீறி சில கருப்பு ஆடுகள் கூட்டாட்சியைக் கவிழ்த்துவிட்டதும் நிகழ்ந்து வந்துள்ளன என்னும்  நீதிபதி சந்துரு அவர்களின் பதிவு கவனிக்கத் தக்கத்து. கத்திமேல் நடந்து, கவனமாகத் தொகுத்திருக்கும் ஆசிரியர் குழுவுக்கு பாராட்டுகள்!

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

உயிரோட்டம்

உருவிலிக் கண்ணி சிறுகதை படித்தேன். காதலில் முதலில் தீக்கிரையாவது பையனின் வீடுதான். அடுத்து நைஸாகப் பேசி வீட்டுக்கு வரவழைத்து விருந்து வைத்து பெத்து வளர்த்த மகளைக் காலனின் கையில் கொடுத்து விடுவது. கதை பூனைகளோடு ஒரு பயணம் செய்த உணர்வைத் தந்தது. மனித உயிர்கள் காதலித்தால் மட்டும் ஏன் மனது மாறிப் போய் விடுகிறது? உயிரோட்டமான கதை!

எஸ்.பஞ்சலிங்கம், திருப்பூர்

நீதித்துறை நடவடிக்கைகள்

காவல்துறைக்குச் சட்டத்தின் வழி கடிவாளமிட்டு நேரான திசையில் பயணிக்க நீதித்துறையால் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்துத் தெளிவாகவும், திறம்படவும் பேசியது மேனாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு அவர்களின் ‘உங்கள் நண்பனா காவல் துறை' கட்டுரை.

மு.இராமு, திருச்சி

சிந்திக்கத் தூண்டும்

திசையாற்றுப்படை - கட்டுரையின் கடைசி 12 வரிகள், திருமணம் எனும் பெயரில், ஊதாரித்தனமாகச் செலவு செய்வோரை நிச்சயம் சிந்திக்கத் தூண்டும் என்பது உறுதி.

அ.முரளிதரன், மதுரை

நிலைத்தது

ஊர் வாய்க்குப் பயந்து சமூகத்தால் திணிக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்தி இழப்புகளை உருவாக்க முயன்றாலும் இறுதி வெற்றி பாசத்திற்குத்தான் என்பதை படிப்பவர் மனதில் ஆழப் பதியும் வண்ணம் பறை சாற்றி அறிவித்த என்.ஸ்ரீராமின் ‘உருவிலிக்கண்ணி‘ சிறுகதை நெஞ்சை நிறைத்து நிலைத்தது.

தி.வெற்றிச்செல்வன், மேலைச்சிவபுரி

பாடம்

‘காலாவை விஞ்சும் தங்கலான்‘ -ஒளிப்பதிவாளர் கிஷோர்குமாரின் நேர்காணல் வளர்ந்துவரும் இளம் தலைமுறையினருக்கு பாடம் போல் இருந்தது.

எஸ்.கவிவர்மன், புதுக்கோட்டை

தீனிபோடும்

இம்மாத திசையாற்றுப்படை கட்டுரை தொடரில் “வருந்த வைக்கும் திருமண விருந்துகள்' உண்மைக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. நாமெல்லாம் அனுபவித்திருக்கிறோம். அடுத்து நூல் அறிமுகம். பலதரப்பட்ட நூல்களை அறிமுகப்படுத்தி வாசிப்பு வட்டாரத்தை விரிவாக்கும் செய்ய உதவுகிறார் மதிமலர்.

லயன் கா. முத்துகிருஷ்ணன், மதுரை

அபூர்வ தருணம்

ஆட்டுக்கும் வெறி பிடிக்குமா என்று பரபரப்புடன் படிக்க வைத்தார் மரு.சி.ஸ்ரீகுமார்.

செங்கதிர் ஐபிஎஸ்-சின் கட்டுரை உண்மைக்கான சாட்சியங்களை நிலைநிறுத்த காவல்துறை படும் பாடுகளை உணர்த்தியது.

அதில் முக்கியமாக... ராஜஸ்தானில் அலுவலக வேலையின்போது உதவியாக தமிழ்மொழி வந்த அபூர்வ தருணம் அது...என்ற வார்த்தைகளில் மனம் நிறைந்தும் போனது.

தஞ்சை என்.ஜே. கந்தமாறன், சென்னை - 89

பிரகாசம்

தங்கலான்' பட ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் நேர்காணல் நேர்த்தியானது. ஒளிப்பதிவின் அழகியலை அவர் விவரித்த விதம் பிரகாசம்தான்!

மருதூர் மணிமாறன் , இடையன்குடி

பெஸ்ட்

இம்முறை 'காக்கிச் சட்டை கதைகள்' சீரியஸ் கலந்த சீரியல்களாகி பாராட்டுப் பெறுகின்றன.

செங்கதிர் ஐபிஎஸ் தந்துள்ள மனசாட்சிக்கு நேர்ந்த சோதனை கண்டதும் செங்குருதி சிந்தியது! மு.ரவி ஐபிஎஸ் + குலோத்துங்க பாண்டியன் +சிவகுமார் ஐபிஎஸ் +அமல்ராஜ் ஐபிஎஸ் +திலகவதி ஐபிஎஸ் + முருகேசன் ஐபிஎஸ் + வி கண்ணன் + கே சந்துரு என்ற லிஸ்டில் வந்த அனைவரும் அளித்த தகவல்கள் பெஸ்ட்.

ஆர்.ஜி.பாலன், திசையன்விளை

திரில்லிங்

சினிமாவில் ஒன் லைன் என்பார்களே! அது மாதிரி ராஜேஷ்குமார் நாவல் எழுத தோதான கருவாக, அதிகாரிகள் சொன்ன காக்கிச் சட்டை கதைகள் நிஜமான அனுபவம் என்பதால் திரில்லிங்காக இருந்தது.

அண்ணா அன்பழகன் அந்தணப்பேட்டை.

அருமை

காவல்துறை அதிகாரிகளின்கதை அருமையான பதிவு. காக்கிச்சட்டைகளின் கதை மனதை தொட்டது என்றால் மிகையல்ல. அதிலும்174 சவரனை கண்டுபிடிக்க படாத பாடு பட்ட விவரம் அருமையான முறையில் விவரிக்க ப் பட்டுள்ளது.

பாரதிராஜன் (எ) ரங்கராஜன்.எஸ். வி., பாஸ்டன், அமெரிக்கா

உழைப்பு

ஹீரோ ஆகவேண்டும் என்ற கனவோடு வந்து இயக்குநராகி வென்று காட்டிய விக்ரம் சுகுமாரன் அவர்களின் நேர்காணல் ஒரு திரைப்படத்துக்கு பின்னால் இருக்கும் உழைப்பை பட்டவர்த்தனமாகக்  காட்டியது.

மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com