ஆதரவு தொடரும்

ஆதரவு தொடரும்
Published on

சிறப்புப் பக்கங்களில் வந்துள்ள அனைத்து கட்டுரைகளும் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. தமிழக நதிகளின் அத்தனை சிறப்புகளையும் ஒரே இதழில் வெளியிட்டுள்ளீர்கள். இதைப் பார்க்கும்போது அறிஞர் அண்ணா 1943இல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நதிக்கரை நாகரீகங்கள் பற்றி மாணவர்கள் மத்தியில் ஆற்றிய ஆற்றோரம் என்ற சொற்பொழிவு நினைவுக்கு வந்தது. இந்த தலைப்பு, அவர் மேடையில் அமர்ந்த பிறகே அவருக்குத் தரப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. நதிக்கரைகளில் மனித நாகரீகம் முகிழ்த்து வளர்ந்தது எப்படிப் பரவியது என்பதைப் பற்றி அவர் அன்று கூறிய வார்த்தை என் நிவைவுக்கு வந்தது.

இன்றைக்கு தேவையான சிறப்புப் பக்கங்களைக் கொடுத்துள்ளீர்கள். அது தொடரட்டும். நீண்ட யோசனைக்குப் பின்னே இந்த விலையேற்றம் எனக் கூறியுள்ளீர்கள். ஆனால் இதுவே மிகவும் தாமதமான முடிவு. எங்கள் ஆதரவு எப்போதும்போல் தொடரும்.

லயன் கா. முத்துகிருஷ்ணன், மதுரை

ஈரம்

அந்திமழை இதழின் விலையை எவ்வளவுதான் உயர்த்தினாலும் நாங்கள் வாங்கிக்கொண்டே இருப்போம்.

இந்த மாதம் தான் வீட்டுக்கு வெளியேயும் குளிர்கிறது (மழையால்) வீட்டுக்கு உள்ளேயும் குளிர்கிறது (அந்தி) மழையால். அட்டைப் படத்தைச் சொல்கிறேன்.

நதிகளைக் கொல்ல முடியாது. சிறப்புப் பக்கங்கள் சூப்பர். படித்ததும் என் மனசும் ரொம்ப ஈரமாகிப் போனது.

சமூகத்துக்கு அளிக்கும் சக்தி கட்டுரை நன்று. கடைசி வரிகளைக் கொட்டை எழுத்தில் போட்டிருக்கலாம்.

அ. முரளிதரன், மதுரை

பெருங்கொடைத் தன்மை

பெருவழிப்பாதை -14 இல் இடம் பெற்றிருக்கும் ‘சமூகத்துக்கு அளிக்கும் சக்தி’ கவிதா பாரதியின் கட்டுரை கனமானது, சத்து மிகுந்தது சக்தியளிப்பது. வளம் மிகுந்த பலரிடம் குவிந்துகிடக்கும் செல்வமும் பணமும் பிறர்க்குதவாத சூழலில், சக்தி மசாலா நிறுவன அதிபர்கள் துரைசாமி – சாந்தி துரைசாமி இணையர்களின் பெருங்கொடைத்தன்மை வியக்க வைக்கிறது.

தாம் தேடிச் சேகரித்து வைத்த சொத்துகளும் சுகபோக வாழ்வும் மூன்றாம் தலைமுறையில் முடிந்து போன வரலாற்றைப் பார்க்கிறோம். ஆனால், சக்தி மசாலா நிறுவனத்தின் செயற்கரிய சமூக சேவைகள் என்றும் நிரந்தரம். ”ஒவ்வொரு சக்தி மசாலா பொதியிலும் உணவுப் பொருட்கள் மட்டுமின்றி சுற்றுப்புறத் தூய்மை மக்கள் நலன் கல்வியறிவளித்தல், மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு பெண்கள் முன்னேற்றம் ஆகியவையும் அடங்கியிருக்கின்றன என்பதை அறியும்போது அதன் சுவையும் நறுமணமும் மேலும் அதிகமாவதை உணர முடிகிறது” எனும் பதிவு அசர வைக்கிறது. வாழ்த்துகள் கவிதா பாரதி சார்.

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

ஆணிப்பொன்முத்து

தமிழகத்திலோடும் ஆறுகளுடன் வட இந்தியாவில் ஓவும் யமுனை நதியையும் சேர்த்து 12 நதிகள் குறித்து 12 இலக்கியவாதிகள் அந்நதிகளுடனான தத்தமது தொடர்புகளைக் குறித்து இலக்கியம், புராணங்கள், வரலாறுகள், செவிவழிச்செய்திகளுடன் கூடிய செய்திகளை உணர்வுப் பூர்வமாகத் தந்திருந்த சிறப்புப் பக்கக் கட்டுரைகள் பன்னிரண்டும் குறிஞ்சி மலராக மணம் வீசின. தேனாய்த் தித்தித்தன. ஆணிப் பொன்முத்துகளாய்ச் சுடர் விரித்தன.

மு. இராமு, திருச்சி

தக்க சான்று

எதனையும் சீர்தூக்கி எடைபோட்டு உண்மை, திறமை, நேர்மை ஆகிய மூன்றினையும் உடையவர்களை மட்டுமே தன் பக்கத்தில் வைத்து கொண்டு ஏழை எளியவர்களின் வாழ்வு துலக்கமுறுவதற்கான ஆட்சியைப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மேற்கொண்டார் என்பதைத் தக்க சான்றுகளுடன் நிறுவும் வண்ணம் அமைந்திருந்தது த. பிச்சாண்டி அவர்களின் எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர். நினைவுகள் நூல் குறித்த அறிமுகக் கட்டுரை.

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்

ஒவ்வொன்றும் ஒருவிதம்

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம்போன்ற அறிவுஜீவிகளின் கடமையாகும். என்ன செய்தார் எம்ஜிஆர் என்னும் மதிமலரின் கட்டுரையைப் படித்தேன். எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர். நினைவுகள் என்னும் த. பிச்சாண்டி எழுதிய அற்புதமான நூலை நானும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன்.

நதிகளைக் கொல்ல முடியாது! ஆறுமனமே ஆறு என்னும் தலைப்பில் வெளியான அத்தனை ஆறுகளைப் பற்றிய சிறப்புப்பக்கங்கள் அனைத்தும் என்னைத் தேனாற்றில் மிதக்க வைத்தன. பத்திரிகைகள் பல விதம். அந்திமழை ஒவ்வொன்றும் ஒரு விதம்.

தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்

அழுத்தம்

பிரபாகரின் கட்டுரை சிந்திக்க வைக்கிறது. ஆன்மிகம் மக்கள் மத்தியில் ஊடுருவிவிட்டது. இறப்பதும் பிறப்பதும் ஆண்டவன் கையில் இல்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

சக்திமசாலாவின் துரைசாமி – சாந்தி துரைசாமியின் வாழ்க்கை வரலாறு, உண்மையான உழைப்பைக்காட்டுகிறது. வரும் ஊதியத்தில் கஷ்டப்படுகின்ற பலரைக் காப்பாற்றி உள்ளனர். கல்வி, மருத்துவ உதவிகளை செய்கின்றனர்.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

எங்கிருந்தோ

ஆறு மனமே ஆறு… என்ற அட்டைப்படக் கட்டுரையை செதுக்கிய தமிழ் ஆளுமைகளை எங்கிருந்தோ கண்டுபிடித்து எங்களுக்கு அறிமுகப்படுத்தும் உங்களுக்கு வாழ்த்துகள்.

கா. சித்ரா காமராஜ், கோவை

நம்பிக்கை

என். ஶ்ரீராமின் அமராவதி கட்டுரை படித்தேன் என்பதை விட அமராவதியில் குளித்தேன் எனலாம். என்னுடைய இளமைக்காலம் முழுவதும் நதிக்கரையில்தான் கழிந்தது. புதுத்தண்ணீர் வரும்போது கட்டு விரியன் உட்பட பெரிய பாம்புகள் மிதந்து வரும். அதனால்தான் புதுத்தண்ணீரில் குளிக்க வேண்டாம் என்பது.

ரயில் பாலத்திலிருந்து தெற்கு வீரமாத்தி கோயில் அங்கேதான் அனைவரும் சந்திப்பது வழக்கம். இளையராஜா இசை போல வீரமாத்தி கோயில் பின்னால் சின்ன சின்ன ஊற்று உருவாகி சிறு ஓடைபோல் பிரிந்து ஆற்றில் கலக்கும். இந்த நீர் சுவையாக இருக்கும். கடும் கோடையில் எங்களுக்கு அது தாய்ப்பால். 50 ஆண்டுகளுக்கு முன்னர் நதி நதியாகவே இருந்தது.

நதியோடு இருப்பவர்களுக்கு தெரியும். ஆகாயத் தாமரை வேகமாக வந்தாலோ, தண்ணீரில் மணல் கலந்து வந்தாலோ, நீர் செந்நிறமாக மாறினாலோ கரை ஏறிவிட வேண்டும். நதியும் பெண்ணும் ஒன்று. அமராவதி தாயின் சீற்றத்தில் பலியானவர்கள் ஏராளம்.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

பூமர் அங்கிள்

ஒருவிதத்தில் நானும் பூமர் அங்கிள்தான். கடந்த 80-90களில் நான் கண்ட மென்மையான காதல் படங்களில் ஒரு காவியத்தன்மை இருந்தது. காதலின் மேன்மையே, அதன் மென்மைதான் என்று கவிதை படித்து வளர்ந்த நான், தற்போது 2கே கிட்ஸ்களுக்கான வன்முறையுடன் கலந்த காதல் திரைப்படங்களைக் காணும்போது நெஞ்சம் பதறுகிறது. இதில் உயிரோட்டமும் இல்லை. தெய்வீகமும் இல்லை.

ஆர். மோகன், காஞ்சிபுரம்

நம்பிக்கை

'சடங்குகளின் தேசம்!' என்ற வித்தியாசமான பார்வை கொண்ட வினய மிக்க கட்டுரை. ஆகட்டும், இயல்பாகவே இந்திய இதயங்களில் தொன்று தொட்டு தொடரும் பக்தி தேட்டம் ஒரு போதும் வாட்டம் அடைந்ததேயில்லை. ‘அவரவர் அனுபவம் அவரவர் தமக்கு' என்ற உண்மை நிலைப் பாடும், முதல் அடியை மூலவரே கொடுத்து உருவான புராண படைப்பாளர்களுக்கான பிறவிப் பயன்பாடுகளும், வழிபாடுகளுக்கு குறைவே வராத வகையில் ஒரு வித ஈர்ப்பை நீளச் செய்கிறது. சடங்கு, சம்பிரதாயம், பண்பாடு, கலாச்சாரம், அனைத்துமே தர்மம் சார்ந்து தொடர்வதால் இறக்குமதியாகும் எந்த நாகரீகத்தினாலும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

ஆர்.ஜி .பாலன், மணலிவிளை

வரவேற்போம்

நதிகள் இயற்கை தந்த இனிய கொடை, இந்த நமது உயிர் கொடையான நதித்தாயை பயன் படுத்திய அளவிற்கு, பாதுகாத்தோமா...? என்றால் இல்லை. செயற்கை நுண்ணறிவு - ஒரு பயன் பாட்டு கருவியே தவிர, மனித ஆற்றலுக்கு ஆதரவாக மட்டுமே இருக்கும் என்பது தான் உண்மை, எனவே Al ஐ வரவேற்போம்.

வலம்புரி நாகராஜன், நசியனூர்.

சாபம் சும்மாவிடாது

தனுஷ்+ சிம்பு தொடங்கி வைத்த அடாவடி கேரக்டர்களால் தான் இளைய சமுதாயம் தடம் மாறியதாக குற்றச்சாட்டு உண்டு. அதுவே யூத் ஸ்பெஷலாக அங்கீகரிக்கப்பட்டு இன்று வாந்தி எடுக்க வைக்கும் கதைகளாக "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்", "டிராகன்" என்று வெற்றி பெறுவது விபரீத வேடிக்கை! ஒரு பூமர் அங்கிளாக என் வேதனையான விண்ணப்பம் என்னவென்றால், ஆதாம்+ஏவாள் காலம் தொட்டு பெருமைப்பெற்ற காதல் என்ற சொல்லின் புனிதத்தை கெடுக்காமல், அதற்கு பதிலாக வேறொரு சொல்லை 2கே கிட்ஸ்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டால் ரொம்ப புண்ணியமாக போகும். இல்லாவிட்டால் ரதி+ மன்மதனின் சாபம் உங்களை சும்மா விடாது!

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

இப்படியும்...

'நதிகளைக் கொல்ல முடியாது!' என்று கூட சிறப்புப் பக்கங்களைத் தர முடியும், என்று நிரூபிக்கிறது அந்தி மழை! முல்லை பெரியாற்றின் பிள்ளைகள் கட்டுரை 'முல்லை' மனத்தை, மலர்ச்சியை விட அதி மேலானது!

என்.ஜானகி.ராமன், செல்வமருதூர்

கேட்டாரே ஒரு கேள்வி!

மார்ச் மாத அந்திமழை இதழில், நூல் அறிமுகம் பகுதியில் ‘என்ன செய்தார் எம்.ஜி.ஆர்’ கட்டுரையை படித்தபோது, 1980களில் நான் தாரமங்கலம் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது நடந்த சம்பவம் என் நினைவில் நிழலாடியது. அந்த தொகுதிக்கு உட்பட்ட தொளசம்பட்டி என்ற ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் மனு ஒன்றைக் கொடுத்தேன். அதை படித்துப்பார்த்துவிட்டு அப்படி தரம் உயர்த்தினால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா? என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஊராட்சிகளுக்குத்தான் மத்திய அரசின் நிதி அதிகமாக கிடைக்கிறது. அந்த ஊராட்சியை தரம் உயர்த்தினால் அந்த நிதி நிறுத்தப்பட்டுவிடும். மேலும் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் வரி அதிகம் விதிக்கப்படும். மக்கள் அதனால் பாதிக்கப்படுவார்கள். என்ன செய்யலாம். நீயே சொல்” என்று கேட்டார். ஏன் இந்த கோரிக்கையை வைத்தோம் என்றாகிவிட்டது.

பிறகு அவரே கேட்டார். “எதை எதிர்பார்த்து இந்த கோரிக்கையை வைத்தாய்?.” அதற்கு நான்,’தொகுதியின் மையப்பகுதியில் இருக்கும் அந்த ஊருக்கு ஒரு காவல் நிலையம் வேண்டும். அடுத்து மருத்துவ வசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று தேவை. சேலத்திற்கு சென்று வர மக்களின் போக்கு வரத்து வசதிக்காக நகரப் பேருந்து விடவேண்டும்’ என்றேன். மக்களின் தேவைகளை அறிந்து, பார்த்து பார்த்து செய்யும் பண்பாளரான புரட்சித்தலைவர். அதே ஆண்டிலேயே மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தந்தார். இவை அனைத்தையும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உத்தரவுப்படி செய்து முடிக்க உதவி புரிந்தவர் அவரது நம்பிக்கைக்குரிய தனிச் செயலாளர் பிச்சாண்டி அவர்கள்தான் என்பதை என்னால் மறக்க முடியாது.

எஸ். செம்மலை, முன்னாள் அமைச்சர்- அதிமுக

மழைக்கு மறுநாள் ஓடிய வெள்ளத்தில்...

அந்திமழையில் இந்த மாத கோடைக்கு ஏற்றார் போல் குளுகுளுவென்று மழையில் நனைய வைத்ததோடு ஆற்றிலும் குளத்திலும் அருவிகளிலும் குளிக்க வைத்து மனதையும் உடலையும் குளிர வைத்துவிட்டீர்கள்.

எங்கள் ஊரிலும் ஓடை உள்ளது. ஆனால் பாலம் இல்லை. ஏதாவது பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் பக்கத்துக்கு ஊருக்குத்தான் போகவேண்டும். எங்களை ஊர் பெரியவர்கள் கைகளைப் பிடித்தும் தோளில் தூக்கியும் மறுபுறம் கொண்டு சென்றுவிடுவார்கள். மழை பெய்த மறுநாள் காய்ந்த பருத்தி மார், மிளகாய் மார்களைப் பிடுங்குவதற்குப் போகவேண்டும்.

பெருமழை பெய்த மறுநாள் முதல் பருத்தி பிடுங்குவதற்கு என் மாமா பிஞ்சைக்குப் போனேன். முதல் நிறையில் குனிந்தேன். அதில் மூக்கு முழி காது எதுவும் இல்லாமல் கால், கை எல்லாம் விறைத்து பேய் போல் ஒரு உருவம் கிடக்க நான் பயந்து அலறி மயங்கி விழுந்துவிட்டேன். எல்லோரும் ஓடிவந்து என்னை தூக்கினார்கள்.

என்ன நடந்ததென்றால், முதல் நாள் எனக்கு அத்தை முறை வேண்டியவர் இறந்துவிட்டார். அந்த காலத்தில், சுடுகாட்டிற்கு மேற்கூரைகள் கிடையாது. அத்தையைத் தூக்கி வந்து சுடுகாட்டில் வைத்து எரித்திருக்கிறார்கள். தீ நன்றாக பிடித்த உடன் மழையும் வந்துவிட்டது. அத்தை பாதி வெந்தும் வேகாமலும் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு பிஞ்சைக்கு வந்துவிட்டார். அதைப் பார்த்துத்தான் நான் பயந்துபோனேன். இரண்டு நாள் காய்ச்சலில் கிடந்தேன். என் அம்மாவோ ஒரு ரூபாய் சம்பளத்தைப் பாழாக்கிட்டாளே என்று வஞ்சிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நாள் சம்பளம் எட்டணா (ஐம்பது பைசா).

பாரத தேவி, எழுத்தாளர்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com