
அக்டோபர் இதழில் இடம்பெற்றிருந்த அறிவுமதியின் நீரிசை மகளிர் கவிதையும் தூரிகை காட்சிகளும் அருமை. கவிதா பாரதி எழுதியிருக்கும் நீர் மனிதன் படித்து மகிழ்ந்தேன். பக்கத்து ஊர்க்காரர், கிராமங்கள், நகரங்கள், நடமாடிய சாலைகள், ஏரி, குளங்கள் எல்லாமே ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி சாதாரண மக்களை பெருந்துன்பத்திற்கு உள்ளாக்கி வருவது தொடர் கதை. மாற்றங்களை உண்டாக்கி மறுமலர்ச்சி அடைய வைப்பதாகச் சொல்லி வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்தவுடன் சட்டப்படி பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். நீதிமன்றமும் வருவாய்த் துறையும் ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து ஏண்டா போனோம் என்னும் நிலைக்கு மக்களை வருத்தும் செயலாகத்தான் இருக்கிறது. நிர்மல் என்னும் நீர் மனிதன் ஊருக்கு ஒருவர் தோன்ற மாட்டாரா? என்ற ஆதங்கத்தை உண்டாக்கிவிட்டது கவிதா பாரதியின் கட்டுரை.
பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை
உருக்கம்
38 ஆயிரம் பாடல்களைப் பாடிய அசாமின் ஜுபின் கார்க் எனும் பாடகனின் மரண செய்த அந்திமழை இதழில் படித்து கண் கலங்கினேன். இந்த மாபெரும் கலைஞன் பெரிய தம்பட்டம் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறது. அவரது வரலாற்றுச் செய்தியை அந்திமழை இதழ் மிக உருக்கமாக பதிவு செய்திருக்கிறது.
ஜே. மஃரூப், குலசேகரன் பட்டினம்
பாராட்டு
சங்க இலக்கியங்களைப் படிப்பதென்பது எளிதான செயலல்ல. அதைப் படித்துப் பொருளுணர்ந்து இனிய எளிய கவிதை நடையில் அதை எல்லோருக்குமானதாகக் கொண்டு சேர்ப்பதென்பது ஒரு கடினமான, இனிமையான பணியேயாகும். அப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள கவிஞர் அறிவுமதி பாராட்டிற்குரியவராவார். பாடல் வரிகளுக்குப் பொருத்தமான ஓவியங்களைத் தீட்டி வரும் ஓவியர் ரவிபேலட்டும் பாராட்டிற்குரியவரே.
இல. முத்து, திருச்சி
உதாரணம்
எடுத்தவுடன் கல்பனாவின் வியாழக்கிழமை படித்தேன். நடமாடும் நூலகம். அதில் கல்பனாவின் பணி கடையில் தான் புத்தகம் படிக்க வேண்டிய சூழ்நிலை. அதில் கடைசி முடிவு ஒரு நல்ல திருப்பம். அசாம் மக்களின் பாசத்திற்குரிய மக்கள் பாடகர் ஜுபின் கார்க் வாழ்க்கை நமக்கு சிறந்த முன்னுதாரணம். அப்படி வாழ வேண்டும். இப்படியான மனிதர்களை அந்திமழை அடையாளம் கண்டு எழுதுவது பாராட்டிற்குரியது.
நீர் மனிதன் நிர்மல் ராகவன், நீரின்றி அமையாது உலகம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார். அவர் பிறந்த பேராவூரணிக்கு பெருமை..
இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்
அருமை
நீர்மனிதன் கட்டுரை படிப்பதற்கு அருமையாக இருந்தது.
பாரதி, திருப்பூர்
மனிதனாகலாம்
வாடகை நூல் நிலையத்தில் பணியாற்றினாலும் புத்தகமே படித்திராத கல்பனாவை, படிக்கத் தொடங்கியபிறகு அவள் வாழ்க்கை எப்படி மாறி உயர்ந்தது என்பதை விளக்கிய புத்தகப்பித்தன் எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை புத்தக வாசிப்பின் அவசியத்தை அர்த்தமுடன் விளக்கியது. "வாழ்க்கையில் இத்தனை ஆயிரம் பேரை பார்த்து பழக முடியுமா? படிச்சா அந்த அனுபவம் கிடைத்திடுது". "படிக்க படிக்கத்தான் உலகத்தை புரிஞ்சிக்கிறேன். நம்ம பிரச்னை எல்லாம் சின்னதாயிடுது" போன்ற எஸ்.ராவின் அனுபவ மொழிகளை படித்தாவது, புத்தகம் வாசிக்க தொடங்கினால்தான் நாம் மனிதனாகலாம்.
அ. யாழினி பர்வதம், சென்னை.78.
அருமை
நீரிசை மகளிர் கவிதை அருமை. அவற்றின் படமும் சூப்பர். மக்கள் கலைஞர் ஜுபின் கார்க் படமும் கட்டுரையும் அருமை. அவரது படத்தை அட்டையில் போட்டிருக்கலாம்.
அ. முரளிதரன், மதுரை
அது அவர்தான்
செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதில்லை? அப்படித் தான் எனக்கு படிப்பு என்கிற சதாசிவம் கேரக்டர் மூலம் கதாசிரியர் கல்பனாவின் வியாழக்கிழமை. கதையில் நீதி கூறுவதுடன் வானவில்லின் வண்ண ஜாலங்களை விவரித்துக் காட்டுகிறார். படிக்காத, படித்த மனிதர்களில் இத்தனை அனுபவங்களையும் எடுத்தாண்ட விதம் அருமை. புத்தகங்களை நேசிக்க கற்றுத்தரும் சதாசிவம் வேறு யாரும் இல்லை அது எஸ்.ரா. தான்.
யூ. பையஸ் அகமது, நாமக்கல்
மகிழ்ச்சி
தைவானில், நியூயார்க்கில், ஜப்பானில், ஜெர்மனியில்எ ன தமிழ்நாட்டில் அரசுப்பள்ளியில் படித்தவர்கள், பணிபுரிபவர்கள் குறித்து செய்தியைப் படிக்கும்போது ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்திமழை இதழின் வடிவமைப்பும், நேர்த்தியும் அதற்கு மேலும் அழகைக் கூட்டுகிறது. அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும் இச்செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது, பாரதி கண்ட புதுமைப் பெண்களைப் பார்த்துவிட்டோம்.
உத்தமன்ராஜா, அச்சன்புதூர்
ஆச்சரியம்
"தமிழின் மகிழ்ச்சியான படம்" எது? என்ற கேள்விக்குறியில் தொடர்ந்து 26 பக்கங்களில் தந்துள்ள விறுவிறுப்பான தகவல்கள் ‘அந்திமழை’க்கு ரசிகர் மன்றம் அமைக்கலாம் என்ற எண்ணத்தை தருவித்தது! முன்னாள் இந்நாள் திலகங்களை ‘கவர்’ செய்துள்ள அந்திமழையில் வருங்கால முதல்வர் மட்டும் ‘மிஸ்' ஆனது ஆச்சரியமாக இருந்தது!
என்.ஜானகி.ராமன், செல்வமருதூர்
நன்று
எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை நன்று. மக்கள் கலைஞருக்கு அஞ்சலி, தமிழின் மகிழ்ச்சியான படம் உரையாடல்களும் சிறப்புக் கட்டுரைகளும் நன்று. அந்த ஏழு நாட்கள், பாலைவனச்சோலை சிறப்பான படங்கள். குறிப்பிடப்படவில்லை. அலெக்ஸ் சிறப்பு நேர்காணலும் நன்று.
ந மனோகரன், சிங்கை கோவை
தேங்க்ஸ்ப்பா.
ஏம்பா, அசோகரு! மகிழ்ச்சியான படம்னா எண்டர்ட்டைமென்ட் தான.....கண்ணு! ஜாலியை Good feelனு சொல்றது சரியா இருக்குமா! விடு. உள்ளத்தை அள்ளித்தா மாதிரி வெறும் ஹாஸ்ய படங்களையும், மொழி மாதிரி உணர்வுபூர்வமான படங்களையும் கழற்றிட்டு, லட்சுமி சரவணகுமார் பட்டியல் போட்ட மாதிரி தில்லானா மோகனாம்பாள், காதலிக்க நேரமில்லை, கரகாட்டக்காரன், அன்பே வா போல ஜனரஞ்சக படங்கள்தான் லிஸ்டுக்கு கரெக்ட்னு நம்ம கணிப்பு.
அது சரிப்பா, அவ்வை சண்முகியும், பஞ்சதந்திரமும், ஃப்ரெண்ட்ஸ் பட முதல் பாதியும் எப்படி யாருக்குமே ஞாபகம் வராம போச்சு.
ஆர்.பாண்டியராஜின் பசங்க படமும் லிஸ்ட்ல வரணும். எங்க வீட்டுப் பிள்ளையை நம்ம கலாப்ரியா மட்டுமே ஞாபகப்படுத்தினார்.
ஒரு டவுட். தில்லுமுல்லு என்றால் ஒரிஜினலா! ரீமேக்கா? மொத்தத்துல ரிப்பீட் பண்ணி அடிக்கடி பார்த்து மனசு ரிலாக்ஸாக நிறைய படங்களை அடையாளம் காட்டுச்சு அந்திமழை மீட்டிங்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
சாப்பிடுங்கள்!
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடர்பாக வந்த கட்டுரை நெகிழ வைத்தது. தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் சூப்பர். எத்தனையே நலத் திட்டங்களுக்கு கையெழுத்திட்ட பேனாவை சுப்புலட்சுமிக்கு முதல்வர் பரிசாகக் கொடுத்தது, எழுத்து தெய்வம் எழுதுகோல் தெய்வம் என்றான் பாரதி. நடுநிலைப் பள்ளியை தாண்டிச் செல்லும்போது “காலைலே சாப்பிடாத மாணவக் கண்மணிகளே முதலில் சாப்பிடுங்கள் அப்புறம் பாடம் படிக்கலாம்” என்ற டீச்சரின் கம்பீரக் குரல் கேட்கிறது.
எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்
பெருமை!
இசையால் உயிர் நனைத்த பிறகே அருவியில் உடல் நனைக்கும் இந்த வானர மகளிரின் வண்ண ஓவியம் அந்திமழை இதழுக்கே பெருமை சேர்க்கிறது.
கல்பனாவின் வியாழக்கிழமை என்ற சிறுகதையினை படித்தபோது நல்லதோர் குறும்படத்தைப் பார்த்தது போன்று இருந்தது.
நூலகர் கல்பனாவிற்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்!.
லயன் கா. முத்துகிருஷ்ணன், மதுரை