வானவில் கடிதங்கள்

வானவில் கடிதங்கள்
Published on: 

மறந்துவிட்டீரே

திரையில் தோன்றிய இயக்குநர்கள் சிறப்புப் பக்கங்களில் விடுபட்டவர்களைப் பார்க்கலாமா? சங்கராபரணம் கே.விஸ்வநாத் குருதிப்புனல் கமல் முதல் ராஜபாட்டை விக்ரம் வரை இணைந்து நடித்திருக்கிறாரே! எல்.வி.பிரசாத் ராஜபார்வையில் கமலின் தாத்தாவாக நடித்ததை மறந்துவிட்டீரோ! இயக்குநராக ஜெயிக்க முடியாவிட்டாலும் சிங்கம்புலி, ரவி மரியா, தம்பி ராமையா, (மறைந்த) மனோபாலா போன்றோர் காமெடியில் கலக்குகிறார்களே! கமல் வற்புறுத்தியும் மறுத்துவிட்டு தாமிராவின் ரெட்டைச் சுழியில் கே. பாலச்சந்தர் நடித்தது ஒரு ஆச்சரியம்! மிக மென்மையான மகேந்திரன் தெறியில் வில்லனாக தெறிக்க விட்டதோ.... அதைவிட அதிசயம். கரு. பழனியப்பன், மீண்டும் குக்கர் படம் இயக்குவதையும் குறிப்பிட்டிருக்கலாம். கௌதம் வாசுதேவ் மேனனை மறக்கலாமா! பாரதிராஜாவின் குரு ரா.சங்கரன் பிராமண கதாபாத்திரத்திற்காகவே பிரபலமானவர். கலகலப்பான கேரக்டரான கரகாட்டக்காரன் டைரக்டரை "இத்தனை நாள் யாரும் ஏன் நடிக்க வைக்கவில்லை?" என்று யோசிக்க வைத்தது, லெனின் பாண்டியன். பாலாஜி சக்திவேல் இரண்டாம் எஸ்.வி.ரங்கராவ்.

இது தவிர நடிக்க கூச்சப்பட்டு ஒரே ஒரு காட்சியில் தோன்றியவர்கள்: ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ்.

- அ.யாழினி பர்வதம் சென்னை.

பாராட்டுகள்!

நாய்கள் மனிதருக்கு தோழனில்லையடி பாப்பா, என்ற எதிர்வினை ஆய்ந்து அறிந்து தெளிவடைய வேண்டிய கருத்தாகும். கருத்தாளர் தியோடர் பாஸ்கர் அவரின் கருத்தை வெளியிட்டு அசத்திய ஆசிரியர் குழுவினருக்கு பாராட்டுகள் பற்பல!

- காசி.யோகஅட்சயா, கோவை.

அறியாத தகவல்கள்!

இன்றைய வாழ்வில் எவ்வளவு தான் வளர்ச்சியிருந்தாலும் கொள்கையற்ற அரசியலும், தனிமனித வழிபாடுகளும், மக்களைச் சிந்திக்கும் திறனற்றவர்களாக்கும் செயல்களும், பொதுநலம் மறந்து சுயநலத்திலேயே சுகம்காணும் அரசியல் வாதிகள் பற்றி அலசிய கொள்கையற்ற அரசியல் கோலோச்சுகிறதா? கட்டுரை அருமை.

புத்தக விமர்சனங்கள் படிக்கும்போதே, உடனே நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

ராஜாவுடன் நடந்த நாள்கள் கட்டுரை இசைஞானியின் பாடலை ரசிப்பதுபோல், படிக்கும்போதே விழிகளில் காட்சிகளாக வருகின்றன.

- கே.ஆர். இரவீந்திரன், சென்னை.

மாற்றம்

காலம் மாறுகிறது, அரசியலும் மாறுகிறது. யாரும் மாற்றத்தைத் தடுக்க முடியாது. எது மாறினாலும் இலக்கு நோக்கில், பயணம் இலக்கியம் மட்டுமே மாறாதது. 9ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கி.ரா., ஜெயமோகன் படிக்கிறான்... மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்திமழையில் வெளியான நெய்வேலி பாரதிக்குமார் சிறுகதையை மெய்மறந்து படிப்பதைக் கண்டேன்.

அந்தப் பையனின் அம்மா பேருந்து நடத்துநர். என்னமா உன் பையன் இன்னொரு ஜெயகாந்தனாக வருவான்போல என்றதற்கு உண்மை தானுங்கய்யா! இலக்கிய வாசமே இல்லாத என் குடும்பத்தில் ஒரு எழுத்தாளன் உருவாக வேண்டும் என்று அந்தப் பெண் ஆசைப்பட்டார். பெரிய எழுத்தாளனாக வருவான். மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.

- பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.

அருமை

அறமறம் கவிதையும் அதற்கான படமும் அற்புதம்.

சாலமன் பாப்பையாவைப் பற்றிய கட்டுரை அருமை. ஒரு நல்ல தமிழறிஞரை இழந்துவிட்டோம் என்று தோன்றுகிறது.

- அ.முரளிதரன், மதுரை.

சுவாரஸ்யம்

நாய் தன்னிச்சையாக நடந்தால் மனிதனுக்கு தோழனில்லை என்பது உண்மையே. தியோடர் பாஸ்கரன் பதிவு சரியே. ஹரிகிருஷ்ணன் செயல்பாடு அபாரம். நாட்டில் இப்படி ஒரு பொதுத்தொண்டு மனிதரைப் பார்த்ததில்லை. அவர்கள் துணைவியார் அதற்கு பக்கபலம் என்பதெல்லாம் ஆச்சரியம். கடைசியாக விடுக்கும் செய்தி ஏற்புடைய கருத்து.

சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தில் மதுரைத் தமிழ் கொஞ்சி விளையாடும் லியோனி ஆழ்ந்து பதிவு செய்துள்ளார்கள்.

பழம்பெரும் நடிகர்கள், இயக்குநர்கள் 14 பேரின் சிறப்பை எழுதி இந்தக் கால இளைஞர்களுக்கு தெரிய வைத்துள்ளீர்கள்!.

- இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

கனகச்சித கணிப்பு

கொள்கையற்ற அரசியல் கோலோச்சுகிறதா? அரசியலில் ஈடுபட எண்ணும் இளைஞர்கள் எல்லாரும் படிக்கவேண்டிய கட்டுரை. இன்றைய அரசியல் சூழலை அப்படியே புட்டுப் புட்டு வைத்திருக்கிற புலனாய்வுக் கட்டுரையாக இதைக் கொள்ளலாம். கொள்கைகள், கருத்தியல்கள், சித்தாந்தங்கள், தனியுடைமை, பொதுவுடைமை, ஜனநாயகம் ஆகியனவெல்லாம் வெற்று வார்த்தைகளாக காலாவதியாகிவிட்ட சூழலை விண்டுரைக்கும் கனமான கட்டுரை!

மக்கள் சிந்திக்காதவரை இப்படியானதலைவர் கள்தான் தோன்றிக் கொண்டே இருப்பார்கள்!

திரையில் தோன்றிய இயக்கு நர்கள் கட்டுரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவரும் என்பது திண்ணம்.

- பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை.

கலைஞர்களுக்கு வாழ்வு!

சிறப்புப் பக்கங்களில் சொல்லப்பட்ட 'திரையில் தோன்றிய இயக்குநர்கள்' தமிழ்த் திரையுலகம் குறித்து புதிய கோணத்திலான பல புரிதல்களைத் தந்தது. இங்கு இருப்பது வேற்றுமையில் ஒற்றுமை காணும் கூட்டம். கலையைக் கொண்டாடும் தமிழ்நாட்டில் கலைஞர்களுக்கு பெரு வாழ்வுதான். இன்றுவரை அதுவே சர்வ நிச்சயம். இங்கே எல்லா நல்ல படைப்புகளும் விற்பனையாகும். ஆனால் அதுவே நிரந்தரமா என்றாலும் கேள்விக்குறிதான் பதிலாகும்.

-கரு. பாலகிருஷ்ணன், பெரிய காரை-630311.

நானும்கூட

'கடந்துவந்த படிக்கட்டுகள்' என்ற சிறுகதையில் வரும் மகுடபதியை போலதான் நான் இருப்பதாக எனக்கு தோன்றியது. அந்த பள்ளிக்கூட நண்பர்கள், அந்தக் காலச் சூழ்நிலை போன்றவற்றை நினைத்துக் கொண்டிருப்பதுடன், அவர்களுடன் அதைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்றும் நினைப்பேன். எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தச் சிறுகதை என்னுடைய மாணவப்பருவத்துடன் சேர்ந்து என் மனதில் இப்போது சுற்றிச் சுற்றி வருகிறது!

-சின்னஞ்சிறுகோபு, சிகாகோ.

துல்லியம்

பழம்பெரும் நடிக இயக்குநர்கள் தலைப்பில் திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன் மிக துல்லியமாக எழுதியுள்ளார்.

வழக்கம்போல கவிதாபாரதி புதிய சாதனையாளர்களை அறிமுகம் செய்துள்ளார். பிரபாகரும் திண்டுக்கல் லியோனியும் அவர்களது பங்கினைச் சிறப்பாக செயல்படுத்தி உள்ளனர்

- ந மனோகரன், சிங்கை கோவை

பளிச்சிடுகிறது!

புறநானுறு - கவிதைப் பின்னணியின் தத்துவத்தை கவிச் சாராக்கித் தொடர்வதில் 'அறமறம்!' கரும்புச் சாராக ருசித்திருப்பதில் கவித்திறம் பளிச்சிடுகிறது!

- என்.ஜானகிராமன் 124, செல்வமருதூர்

நகைச்சுவை

சாலமன் பாப்பையா குறித்த பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி அவர்களது கட்டுரை, அவரது பட்டிமன்றப் பேச்சைப் போலவே நகைச்சுவை ததும்பி வழிந்தது.

- ஆர். சூர்யா, கூகலூர், கோபி.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram