மதுரையிலும்

மதுரையிலும்
Published on

சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து கதைகளுமே ஒன்றுக்கொன்று போட்டிப்போட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தின. குறிப்பாக மதுரையைச் சேர்ந்த சிறந்த இருதய சிகிச்சை மருத்துவர் கண்ணன் எழுதிய "முடிவு" என்ற சிறுகதை என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு சிக்கலான பிரச்னையை ஒரு பொய் சொன்னதன் மூலம் எப்படி தீர்வு கண்டார் என்பது கதையின் முடிவில் தெரியவந்தது. மதுரையிலும் இருக்கிறார் ஓ.ஹென்றி!

- லயன் கா.முத்துகிருஷ்ணன், மதுரை-20.

கவ்வியது!

வாசிப்புத் திருவிழாவை நீட்டித்து இரண்டாம் பாகம் வெளியிட்ட அந்திமழை ஆசிரியர் குழுவினருக்கு பாராட்டுகள். ஆறு சிறுகதைகளும் மனதைக் கவ்வியது போங்க!

காசி. யோக அக்‌ஷ்யா, கோவை

நெகிழ்ச்சி

அரசியல் ஆயுதம் ஆகுமா வேலாயுதம் என்ற தலைப்பே அருமை. கடைசி நான்கு வரிகள் கட்டுரைக்கு முத்தாய்ப்பாக இருந்தன.

பெ. சண்முகத்தின் பேட்டி அருமை. கடைசி கேள்விக்கான பதில் சூப்பர். இப்போது நமக்குத் தேவை நம்பிக்கை கட்டுரை அருமை. மகா டீச்சர் கட்டுரை அருமை. தொடக்கம் முதல் முடிவு வரை நெகிழ வைத்தது. திரைவலம் பக்கத்தில் படங்களை கொஞ்சம் பெரிதாகப் போட்டு இருக்கலாம். வாசிப்புத் திருவிழா கதைகள் அத்தனையும் அருமை!

அ. முரளிதரன், மதுரை

அந்திமழை காலம்!

கவிதா பாரதி எழுதிய பெருவழிப்பாதை கட்டுரை படித்தேன். அருமை. மகா டீச்சர் தனக்குக் கிடைத்த ஆசிரியர் பணியை மனம் ஒன்ற செய்திருக்கிறார். எவ்வளவு அவமானப்பட்டிருக்கிறார். இந்தக் குழந்தைகளை சான்றோர் ஆக்க!

அரசியல் ஆயுதம் ஆகுமா வேலாயுதம்? குறிஞ்சி நிலத் தலைவனுக்கு விழா எடுப்பதில் தவறில்லை. ஆனால் தைப்பூசம், பங்குனி உத்தரம் இரண்டிற்கும் தீவிர முருக பக்தர்கள் வருகிறார்கள். விழா எடுத்ததில் தவறில்லை ஆனால் அண்ணாவையும் பெரியரையும் விமர்சித்ததுதான் சரியில்லை!

வாசிப்புத் திருவிழா படித்தேன். “அந்திமழையில் வந்த கதைகள் அனைத்தும் வற்றாத அமராவதி ஆறு போல” நம்பிக்கையுடன் நடந்தால் ஒரு மிடறு தண்ணீர் இல்லாமல் போகாது. பிரசண்ட விகடன் காலம், மணிக்கொடி காலம்… என்பது போல் சிறந்த சிறுகதை தாங்கிய அந்திமழை காலம் அழகானது.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

 

பெட்டகம்

சிறுகதைச் சிறப்பிதழ் சிறப்பு. பரிசு பெற்ற கதைகள் அனைத்தும் கருத்தாழம் மிக்க அற்புதமான கதைகள். அந்திமழை ஆசிரியர் குழு வாசகர்களின் மனம் அறிந்து வரும் இதழ். அந்திமழை இலக்கிய பெட்டகம்!

தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி

மகிழ்ச்சி

சிறுகதைச் சிறப்பிதழை படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. பாராட்டுகள்.

எஸ். பவதாரணி, பழனி

கொள்ளை கொண்டன

இன்னும் கொஞ்ச காலம் இருந்தால்தான் என்ன? என்னும் சினிமா பற்றிய கட்டுரை விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு திரையுலகை விமர்சித்தது. அருமை! அரசியல் ஆயுதமா வேலாயுதம்  என்னும் அரசியல் பற்றிய எழுத்தோவியம் அற்புதம். இப்போது நமக்குத் தேவை நம்பிக்கை என திசையாற்றுப்படையில் இரா. பிரபாகர் சிறப்பாக எழுதியிருந்தார். “இன்றைய சக மனிதர்கள் மேலான நம்பிக்கையின்மையிலிருந்து நம்மை விலக்கிக் கொள்வது எப்படி என்பதே இன்றைய அவசரத்தேவையாக உள்ளது.” என அவர் எழுதியது பாராட்டுக்குரியது. இதழில் வெளியான அனைத்து சிறுகதைகளும் உள்ளத்தை வெகுவாகக் கொள்ளை கொண்டன.

தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்

 

பெருமிதம்

சிறுகதைச் சிறப்பிதழ் இரண்டில் இடம்பெற்றிருக்கும் ஆறு சிறுகதைகளும் ரசனையை மேலோங்கச் செய்யும் சிறுகதைகளே! புதிய உத்தியில் படிப்பவர்களைப் பரவசம் கொள்ள வைக்கும் சிறுகதைகள்.

திசையாற்றுப்படை 26-இல் இரா. பிரபாகர் அவர்களின் கட்டுரை சுவையானது. வன்முறையற்ற சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் எனும் விழைவில் எழுதப் பெற்றிருக்கும் கட்டுரை இதுவென்பேன். ‘இந்த வெறுப்பரசியல், சகமனிதர்கள் மேலான நம்பிக்கையின்மையிலிருந்து நம்மை விலக்கிக்கொள்வது எப்படி என்பதே இன்றைய அவசரத் தேவையாக இருக்கிறது’ என்னும் வார்த்தை ஆயிரம் பொருளைத் தருகிறது. விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மகா டீச்சர் போன்ற ஆசிரியர்கள் மேலும் பெருக நாம் அனைவரும் இறைஞ்சுவோம்!

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

சினிமா காட்சி

தென்மாவட்டங்களில் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்கவில்லை என்று சிபிஎம் சண்முகம் சொல்வது உண்மை. மாநில அரசு பலவிஷயங்களில் பல்டி அடித்துவிட்டது. பிரபாகரின் கட்டுரை எப்பொழுதும் போல் அருமை. பல புத்தகங்களை வாசித்த அனுபவம்.

மகா டீச்சர் என்ற மகா லட்சுமியின் ஆசிரியப்பணி ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் முன் உதாரணம். எத்தனை ஆசிரியர்கள் இதைப் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. துர்கா என்ற மாணவியை படிக்க வைக்க அவர் பட்ட பாடு சினிமா காட்சியைப் போல் இருக்கிறது.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

 

அழகு

கவிதா பாரதியின் மகா டீச்சர் கட்டுரை எங்களின் இதய அறைகளில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டது. அவர் தேடித் தேடிப் போய் மாணவச் செல்வங்களை படிக்க வைத்திருப்பதும் அவர்களுக்குக் கல்வி அறிவு தந்திருப்பதும் வெகு அழகான செயல்.

ஜி. குப்புசாமி, வடபழனி

பாதுகாப்பு

ஷங்கரையும், மணிரத்னத்தையும் அடித்து துவைத்து காயப் போட்ட மிஸ்டர் முள், பான் இந்தியா படம் என்று பம்மாத்து பண்ணுபவர்களையும் கொத்து பரோட்டா பண்ணியிருக்கலாம். கடந்த ஆறு மாதங்களில் வந்த படங்களில் தேறியவை: "டூரிஸ்ட் ஃபேமிலி", "மெட்ராஸ் மேட்னி" மாதிரி பட்ஜெட் படங்கள் தான். இதை கோலிவுட் "ரெட் அலர்ட்"டாகக் கொண்டு டேக்கிங், மேக்கிங் என்று மேஜிக் காட்டாமல், உண்மையான உழைப்பு, திறமையில் நியாயமான படங்களை வழங்கினால் தான் இனி படவுலகுக்கு பாதுகாப்பாகும்.

_ அ.யாழினிபர்வதம் சென்னை.78.

 

எதிர்பாராத முடிவு

மனிதனுக்காகவே மதம் இருக்கவேண்டும் என்பதை அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டியது பி.ஆர்.ஜெ. கண்ணனின் முடிவு சிறுகதை. யாருமே எதிர்பாராத முடிவு கதைக்குச் சிறப்புச் சேர்க்கிறது.

நம்பிக்கையோடு உட்கார்ந்து தீர்வுகளை எட்டுவதே அறிவார்ந்த செயலாக இருக்க முடியுமென்பதை விளக்கியது இரா. பிரபாகரின் கட்டுரை.

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்

இதுவொன்றும் ஆச்சரியமல்ல!

மதுரையில் பாஜ.க. நடத்தி முடித்திருக்கும் 'முருகன் மாநாடு' அச்சு அசல் 'அக்மார்க் அரசியல்' மாநாடுதான். திராவிடக் கருத்தியலின் விளைநிலத்தில் 'அறுபடை முருகனைக் கூப்பிட்டு' எப்படி அறுவடை செய்யப்போகின்றனர் என்பது காலம் சொல்லவேண்டிய பதில்.

-பேரா. கரு. பாலகிருஷ்ணன், பெரிய காரை - 630 311.

உஷாரய்யா உஷாரு!

ஏழு கேள்விகளுக்கான பதிலில் மக்களின் அதிருப்தியை பிரதிபலித்த மா.கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம், "திமுக ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் என்ன? "என்ற கடைசி கேள்விக்கு "மக்களிடம் பிளஸ் மைனஸ் இரண்டுமே வெளிப்படுகிறது" என்று உஷாரானது, கூட்டணியைத் தக்க வைக்கும் யுக்தியோ!

 அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com