வழிகாட்டி

December-2024-wrapper
Published on

அந்திமழை சிறப்புப் பக்கங்களில் விரிந்திருக்கும் இதயம் முதல் கிட்னி வரை டேக் கேர் டிப்ஸ் அரிய மருத்துவக் குறிப்புகள். இதை மருத்துவ வழிகாட்டி என்றே சொல்லலாம். இதழில் பிறபகுதிகளைப் படிக்க வேண்டும் என்ற விழைவைத் தராதவகையில் அனைத்து மருத்துவக் கட்டுரைகளும் தேர்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து தொகுத்து வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. உலகப் புகழ்பெற்ற 47000 இதய அறுவை சிகிச்சை செய்த மூத்த மருத்துவ நிபுணர் டாக்டர் செரியன் அவர்களின் வழிகாட்டலை அனைவரும் படிக்க வேண்டியது அவசியம். பக்கவாதம் பக்கத்திலேயே வராத அளவுக்கு நம்மைக் காத்துக் கொள்ள டாக்டர் ஏ.வி. சீனிவாசன் அவர்கள் தரும் டிப்ஸ் சூப்பரோ சூப்பர்! குடியைக் கெடுக்கும் மதுபானத்தால் அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் மதுவிரும்பிகள் கட்டாயம் படித்துத் திருந்த பல வழிகள் மருத்துவர் சிவசுப்ரமணியன் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கின்றன. படித்தும் பத்திரப்படுத்த வேண்டிய இதழ் இது!

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

மக்கள் ஆதரவு

ஜில்லு திரைப்படம் எடுத்த விதம், செலவினம், படம் எடுக்கையில் சில்லரைத்தனங்கள் எல்லாவற்றையும் குறிப்பிட்டுள்ளார்கள். மக்கள் ஆதரவு எதிலும் இருந்தால்தான் வெற்றி கொள்ள முடியும்.

தோழர் ரோகிணியின் வரலாற்றை கவிதா பாரதி எழுதிய கட்டுரை சிறப்பு. சமுதாய மாற்றத்திற்காக படங்கள் தேவை. இதயத்தை பராமரிக்க டாக்டர் செரியன், பக்கவாதம் வராமல் தடுக்க ஏ.வி. சீனிவாசன் கூறும் ஆலோசனைகள் சிறப்பு. குடிப்பழக்கம் நாட்டில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.. மருத்துவர் வி.எஸ். நடராஜன் இளமையோடு வாழ வழிகாட்டுகிறார்.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

நிதர்சனமாக

தோழர் ரோகிணியின் 50 ஆண்டு கட்டுரை படித்தேன். கோவையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ரோகிணியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுந்தர ராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள் பற்றி அவரிடம் பேசியது இன்றும் நினைவில் உள்ளது.

டீன் ஏஜ் மனநலம் கட்டுரை படித்தேன். காலத்தின் தேவை அறிந்து எழுதிய கட்டுரை. மனநல பிரச்னை என்பது தனிநபர் சார்ந்த பிரச்னை இல்லை. சமுதாய பிரச்னை. நல்ல கட்டுரை.

எம். கோபாலகிருஷ்ணனின் ஓடக்காடு பெரியப்பா வீட்டில் ஓர் இரவு கதையில் சம்பவங்கள் அப்படியே நிதர்சனமாக உள்ளது.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

பெருமிதம்

சிறப்புப் பக்கங்களில் விரிந்திருக்கும் இதயம் முதல் கிட்னி வரை டேக் கேர் டிப்ஸ் தந்த அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

காசி. யோக அக்‌ஷயா, கோவை

அருமை

இதயம் முதல் கிட்னி வரை சிறப்புப் பக்கங்கள் அருமையிலும் அருமை. மருத்துவர்களின் பேட்டி, கட்டுரைகள் சூப்பர். பாதுகாக்க வேண்டிய பக்கங்கள்.

சீனா பக்கம் சாய்கிறதா இலங்கை? நேர்காணல் அருமை. கடைசி கேள்வி, அதற்கான பதில் அட்டகாசம்.

திசையாற்றுப்படை பக்கங்கள் அருமையிலும் அருமை.

அ. முரளிதரன், மதுரை

அப்ளாஸ்

அறிமுக இயக்குநர்கள் எதிர்பார்ப்பு குறித்த விமரிசனம் கவனிக்க வைக்கிறது.’ப்ளு ஸ்டார்’ ஜெயக்குமார், ஜான்கிளாடி, ‘ஜமாவின் பாரி இளவழகன், ‘போகுமிடம் தூரமில்லை’ மைக்கேல் ராஜ், ‘லப்பர் பந்து’ தமிழரசன் ‘பராரி’ எழில் என்று அந்திமழை தனக்கே உரித்தான பாணியில் அறிமுகம் செய்து அப்ளாஸ்களை அள்ளிக் கொண்டது!

எஸ்.எல்.ஜார்ஜ் அருண், சொக்கன்குடியிருப்பு,

சிறுகதை

வாழ்க்கை கணக்கு கூட்டல், பெருக்கல்களினால் மட்டும் ஆனதல்ல கழித்தலும் வகுத்தலும் அதிலே உண்டு என்பதை அ, ஆ தெரியாத பையனை ஐந்தாம் வகுப்பில் உட்கார வைத்தால் எப்படி அலங்க மலங்க விழிப்பானோ அப்படி பெரியப்பா, பெரியம்மாவின் வன்முறையோடு கூடிய குடும்பச்சண்டையைக் கண்டு பயந்து நடுங்கி யாரிடமும் சொல்லாமல் ஓட்டம் பிடிக்கின்ற நிகழ்வை எம். கோபாலகிருஷ்ணன் ஓடக்காடு பெரியப்பா வீட்டில் ஓர் இரவு சிறுகதை மனக்கண் முன்னே காட்சிகளாக விரிய வைத்தது.

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்

வைர வரிகள்

கையை கொடுங்க சார்... வேண்டாம், வேண்டாம். கொரோனாவுக்குப் பிறகு வணக்கம் சொல்வதே வழக்கமாகிவிட்டது. முப்பதுக்கு ரூபாய்க்கு மூன்றாயிரத்திற்கான மருத்துவக் குறிப்புகளை வழங்கி விட்ட அந்திமழைக்கு வணக்கமும் பாராட்டுகளும்.

இதுவரை அறிந்திராத செய்திகளை தெரிய வைத்து தோழர் ரோகிணி 50ஆம் ஆண்டு கவிதா பாரதியின் கட்டுரை.

வெ. சின்னசாமி, பழனி

பதில்கள்!

திசையாற்றுப்படையில் 'ஜில்லு' திரைப்படம் குறித்து இரா. பிரபாகரன் எழுதியிருந்த 'கேட்க விரும்பாத கதை' சொல்லப்பட்ட விதத்திலும், கொட்டப்பட்டிருந்த தகவல்களாலும் 'படிக்க விரும்பிய பக்கங்களாக' இருந்தன. 'ஜில்லு' பட இயக்குநர் திவ்ய பாரதி சந்தித்த இன்னல்கள் மற்றும் இடர்ப்பாடுகள் பற்றி புதிய கோணத்தில் சொல்லிய விதம் கவனம் ஈர்ப்பதாக இருந்தது. 'கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா நடக்கும் விழுப்புரத்திலேயே திருநங்கையர் தங்கி படமெடுக்க படக் குழுவினருக்கு வீடு கிடைக்க வில்லை' என்ற திவ்யபாரதியின் வார்த்தைகள் உண்மை நிலையை உரக்கச் சொல்லியிருந்தது. மொத்தத்தில் திருநங்கையர் குறித்த பல சமூகக் கேள்விகளுக்கு உரிய பதிலை கட்டுரை பேசியிருந்தது.

கரு. பாலகிருஷ்ணன், பெரிய காரை-630311

உற்றுநோக்கல்

பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகம் நேர்காணல் மூலம் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. அதிபர் அனுர குமார், சைனா ஆதரவுடன்தான் ஆட்சி செய்வார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது. ஆனால் அவர் அண்மையில் இந்தியா வந்து போனது பற்றியும் உற்று நோக்க வேண்டியுள்ளது.

- நந்தவனம் சந்திரசேகரன், திருச்சி.

பேரன்பு

டிசம்பர் மாத அந்திமழை இதழில் பிரசுரமான சிறப்பு பக்கங்களில் இதயம், பக்கவாதம், குடிநோய், மனநலம், மகளிர்், எலும்பு, சிறுநீரகம், முதுமை, டீன் ஏஜ் மனநலம் என முக்கியமான நோய்களுக்கான காரணங்களும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டிய வழிமுறைகளையும் சிறந்த மருத்துவர்கள் கட்டுரையாக கொடுத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களைக் கொடுத்த அந்திமழைக்கு பேரன்புகள்.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

நம்பிக்கை

‘இதயம் முதல் கிட்னி வரை’ சிறப்புப்பக்கங்கள் ஆகியிருப்பது அந்திமழைக்கே டாக்டர் விருது வழங்கும்படி அமைந்துள்ளது. மருத்துவர்கள் கே.எம்.செரியன் + ஏவி சீனிவாசன் + சிவசுப்ரமணியன் + ராம் + அகிலாண்டபாரதி + அரவிந்த் + விஜயகுமார் + நடராஜன் + சுனில்குமார் உட்பட டாக்டர்கள் அனைவரும் தொகுத்துள்ள மருத்துவ அனுபவங்களும் அடையாளங்களும் படிக்கும் போது உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிரச் செய்ததோடு உள்ளத்தின் நம்பிக்கை ஒளியைப் பிரகாசிக்க வைத்துவிட்டன.

மருதூர் மணிமாறன், இடையன்குடி

logo
Andhimazhai
www.andhimazhai.com