அந்திமழை இளங்கோவன் கட்டுரையில், ஐம்பதாண்டு அரசியல் களம் அலசப்பட்டிருக்கிறது. அந்தக்கால அரசியல் ஆளுமைகளின் ஆகச்சிறந்த பணிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும் ஆய்ந்து ஒருசேரத் தந்திருப்பது பாராட்டுக்குரியது. வருங்காலங்களில் கடந்த கால அரசியல் நிலைப்பாட்டைப் பொருத்திப் பார்த்து மக்களின் அவசியத்தேவைகளை நிறைவேற்றித்தர முன்வரும் உண்மையானவர்களை இனங்கண்டு அவர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு மக்களுக்கு இருக்கின்றது. அது மக்களின் ஒரு விரல் புரட்சியில்தான் மலரும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார், கட்டுரையாளர்.
ராவ் எழுதியிருக்கும் ‘அண்ணா தெரிந்து வைத்த மகிமை‘, ‘1971 கலைஞரின் வெற்றி வியூகம்‘ கட்டுரை வழி ஆர். முத்துக்குமார், திமுக கூட்டணி பெற்ற பிரமாண்ட வெற்றியை விளக்கி எழுதியிருந்ததும், பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் ‘ஜெயலலிதா புதிய முகமும் யுத்திகளும்‘ என்ற கட்டுரையில் தன்னை ஓர் இரும்புப் பெண்மணியாக நிலைநிறுத்திக் கொண்ட ஜெயலலிதாவின் தனித்திறன் குறித்தும், வெற்றி சூத்திரம் 471, அண்ணாவின் தேர்தல் வியூகம் போன்ற கூட்டணி அரசியல் கட்டுரைகளும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.
பவளவண்ணன், நடுவிக்கோட்டை
நினைவு
பாகிஸ்தான் பெண்ணான சபாவின் மீதான தாக்குதலைப் பார்க்கும்போது உடுமலை கௌசல்யா சங்கர் நினைவுதான் வருகிறது. ஜாதி, மதம், கௌரவம், புனிதம் எல்லாமே பெண்களை மையப்படுத்தியே வருகிறது. எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிராக தான் இருக்கிறது. “கடவுள் இல்லை என்று சொல்பவன் கோயிலை இடிப்பதில்லை, நம்புறவன்தான் கோயிலை இடிக்கிறான்' என்று இயக்குநர் மணிவண்ணன் வசனம் தான் நினைவுக்குவருகிறது.
ஜெகதீசன், ஸ்ரீரங்கம்.
வெற்றி
இந்தத்தேர்தல் பூட்டுக்கான சாவி இளைஞர்களிடம் இருக்கிறது என்கிறார் மநீம பொதுச் செயலாளர் சிகே குமரவேல். எல்லா பூத்துகளிலும் ஏஜெண்டுகள் இருக்கவேண்டும். அப்போது தான் இறந்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள், ஓட்டு போடாமல் இருப்பவர்களின் ஓட்டில் சிறு பங்கு கிடைக்கும். மாலை ஆறு மணிக்கு மேல் தான் 90 சதவீத பூத்கள் பரபரப்பாக இருக்கும். போடாத ஓட்டுகளை இவர்கள் பிரித்துக்கொள்வதில் பல இடங்களில் பெரிய ரகளையே நடக்கும். அதல்லாம் நாங்க பண்ண மாட்டோம், நாங்க நேர்வழி தான் என்று மநீம சொன்னால், 5% ஓட்டு தாண்டுவதற்கு இன்னும் இரண்டு சட்டமன்றத் தேர்தல் வேண்டும். இது நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும். சென்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு பல இடங்களில் பூத் ஏஜெண்டுகள் இல்லை. இதுதான் பலருடைய வெற்றியைத் தீர்மானிக்கிறது.
காவினி, நாமக்கல்.
சிறப்பு
கடந்த மார்ச் மாத அந்திமழை இதழில் “தேர்தலில் வெல்லும் கலை' என்ற சிறப்புப் பக்கத்தில் மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவின் அரசியல் நடவடிக்கைகளையும், அவரின் எளிமையையும் கட்டுரையாளர் கையாண்டிருக்கும் விதம் வெகு சிறப்பு. ஏனெனில், திராவிட இயக்க அரசியல் தலைவர்களின் வெற்றி ரகசியத்தைப் பேசும் கட்டுரைகளுக்கு, இடதுசாரி தலைவர் ஒருவரின் அரசியல் வாழ்க்கையை உதாரணம் காட்டியிருப்பதே அது.
அதேபோல், தமிழக தேர்தல் அரசியலில் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் வெற்றி ரகசியத்தை ஐந்து கட்டுரையாளர்களும் நேர்த்தியாக விவரித்துள்ளனர்.
‘இணையத்தில் என்ன பார்க்கலாம்? என்ற தலைப்பில் பாகிஸ்தான் பெண் சபா பற்றிய ஆவணப்படம் குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரையைப் படிக்கும் போது பதட்டம் மேலோங்குகிறது. பாகிஸ்தானில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஆணவப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சி அடைய வைக்கிறது.
அழகிய பெரியவனின் நிழலாட்டம் சிறுகதை மனதை உலுக்கி விடுகிறது. மனிதர்களின் வாழ்வு துயரங்கள் நிறைந்த கதைகளைக் கொண்டது என்பதை நடேசனின் வாழ்வு மூலமாக கடத்திச் செல்கிறார் கதையாசிரியர்.
ராஜ்குமார் சுகந்தி, சென்னை
பெரியாரியம்
சசிகலா வருகை அதிமுகவுக்கு ஓர் பயம், சசிகலா வந்தால் குலை நடுங்கும் தலைவர் பட்டியல் போட்டுள்ளீர்கள். கால்நடை மருத்துவர் அனுபவம் எல்லோருக்கும் தெரிய வேண்டியது. சபாவின் ஆணவப் படுகொலை இன்றும் நடக்கிறது. தோழர் மகேந்திரன் 23 நாட்கள் போராட்ட பூமியில் இருந்தது வரலாறாக மாறும். மக்கள் போராட்டம் இளைஞர்களை சிந்திக்க வைக்குமா? அதையும் சிந்தித்தால் நலம். மார்க்சிய தலைவர் ஜோதிபாசு கூறிய கருத்துகளை அரசியல் தலைவர்கள் கடைபிடிப்பார்களா? எம்ஜிஆரை அண்ணா தெரிந்து வைத்த அளவு கலைஞர் அறியாததால் பகைத்ததன் விளைவு நாடறியும்.
கலைஞர் 1971 வெற்றி வியூகம் ஸ்டாலினுக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் மூன்றாவது அணி உருவாகும். இதைத் தன் சுய சிந்தனையில் செயல்பட வேண்டும். அண்ணாவின் வியூகமும் கூட்டணி அரசியல் பற்றி பொதுவுடமையாளர்கள் விவரித்த விதம் அலாதியானது. திராவிட பொதுவுடமைக் கட்சி என சொல்ல வேண்டும் என்ற ஆசை. இப்போது பெரியாரிய பொதுவுடமை இயக்கமாக மாறிவிட்டது.
இரா. சண்முகவேல், தென்காசி
தரமான கட்டுரை
பிப்ரவரி மாத அந்திமழையின் அட்டைப்படம் சிறப்பு. மறைந்த தலைவர்களின் படங்களை மட்டும் அட்டையில் வெளியிட்டுத் தப்பித்து விட்டீர்கள்.
வெற்றி சூத்திரம் 471- தலைப்பிலான கட்டுரை சிறப்பு. குறைகளைக் கொண்டு ஆரம்பித்த கட்டுரை, அதைக் கொண்டே முடிந்தது அருமையிலும் அருமை! பிப்ரவரி மாத இதழில் எதைப் பாராட்டுவது எதை விடுவது என்றே தெரியவில்லை. போராட்ட பூமியில் 23 நாட்கள் கட்டுரை மற்றும் அதில் பயன்படுத்தப்பட்ட படங்கள் சூப்பர். சி.கே.குமாரவேலின் பேட்டி மற்றும் படங்கள் அருமை. சரியான நேரத்தில் வெளியான தரமான கட்டுரை!
அ.முரளிதரன், மதுரை
அடித்தடம்
அந்திமழை இதழ் ‘தேர்தலில் வெல்லும் கலை என அடர்த்தியான கருத்து மழை பொழிந்துள்ளது. அந்தி மழை இளங்கோவன் தேர்தல் ஊடகங்களால் நடத்தப்படுவது என்று ஆகிவிட்டதால்'மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.
1967 பொதுத் தேர்தலில் எம் ஜி ஆர் கொடுக்க வந்த லட்சம் ரூபாய் வேண்டாம், உங்கள் முகம் போதும் என்று தெரிவித்த அண்ணா அறிந்திருந்த தேர்தல் வெற்றி மகிமையை ராவ் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல வெளியிடப்பட்ட அரசியல் தொடர்பான ஆறு கட்டுரைகளையும் படித்தவர் தமிழக அரசியல் அடித்தடத்தை அறிவார்.
டாக்டர் குரு, சேலம்.
நல்ல எழுத்துகளின் ரசிகன்!
சென்னை புத்தகக்கண்காட்சியில் அந்திமழை வெளியீடாக ராசி அழகப்பன் எழுதிய நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி புத்தகத்தை கமல்ஹாசன் வெளியிட்டார். அதன் முதல்பிரதியை எழுத்தாளர் இந்திரன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் இயக்குநர் ராசி அழகப்பன், நிறுவிய ஆசிரியர் அந்திமழை இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இத்துடன் அண்ணாதுரை எழுதிய என்றென்றும் கண்ணதாசன், வழக்கறிஞர் த.ராமலிங்கம் எழுதிய காலத்தை வென்ற கண்ணதாசன், கவிஞர் சினேகன் எழுதிய அவரவர் வாழ்க்கையில் ஆகிய புத்தகங்களையும் அவர் வெளியிட்டார்.
பின்னர் விழாவில் பேசிய கமல்ஹாசன், “இந்த தமிழ் சினிமா சந்தையில் தமிழை வளர்க்க முடியும் என்று நிரூபித்தவர் கண்ணதாசன். எங்க படம் ஒண்ணுக்கு பாட்டு எழுத வந்தாரு. அன்னிக்கு இளையராஜா போட்ட ட்யூன் டைரக்டருக்கு பிடிக்கல, ஆனால் கண்ணதாசன் எழுத ஆரம்பிச்சிட்டாரு, அவர் எழுதிய முதல் வரி ராஜபார்வை பார்க்கும் ஜோடிகள்!. பரவாயில்லை, உங்களுக்குத்தான் இன்னிக்கு நஷ்டம் எனக்கு லாபம்தான். ராஜபார்வை தான் படத்திற்கு தலைப்பு, எனக்கு படத்தலைப்பு கொடுத்திட்டீங்க என்றேன். நான் நல்ல எழுத்துகளின் ரசிகன். இந்த மய்யம் என்ற பெயர் அவசரத்தில் கட்சிக்காக வைத்த பெயர் என்று நினைக்கிறார்கள். இதற்கு முன்பு மக்கள் வாசிக்கும் மய்யமாக பிரசுரமாகி கொண்டு இருந்தது. இதற்குப் பெரிய உதவியாக இருந்தவர், ராசி அழகப்பன். நிஜமான உணர்வுடன் இங்கு வந்திருக்கிறேன். நிஜமான மனிதர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன்!” என்றார்.
ஏப்ரல், 2021