கடமை உணர்த்துதல்

கடமை உணர்த்துதல்

பருவ இதழ்களில் வழக்கொழிந்த தொடர்கதையின் காணொலி வடிவமே டி.வி சீரியல். அதன் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி தான் வெப் சீரிஸ். இதற்கு தணிக்கை கிடையாது என்பதால் அதீத ஆபாசமும், வன்முறையும் தான் தலைதூக்கியது. இதிலும் காதல், கிரைம், திகில் என்ற சினிமா சமாச்சாரம்தான் தூக்கலாக இருக்கிறது. கலை வடிவம் உயிர்ப்புடன் இயங்கும் காட்சி வடிவமாகும்போது, அதில் இலக்கியத்தரம் ரசிகனின் ரசனையை உயர்த்தும் வண்ணம் அமைய வேண்டுமென்பது அவசியமல்லவா? அதற்கான சுதந்திரம் பெற்ற வெப் சீரிஸ்கள், அந்த கடமையைச் செவ்வனே செய்ய வேண்டுமென உணர்த்தின சிறப்புப் பக்கங்கள்.

அ. யாழினிபர்வதம், சென்னை - 78.

பழிவாங்கும் இயற்கை

ஜாதி வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்பட வேண்டிய நோய். இட ஒதுக்கீட்டுக்காக மேன்மேலும் ஜாதியை காப்பாற்றி கொண்டிருந்தால் தீண்டாமைச் சுவர்தான் கட்ட வேண்டியிருக்கும்.

புலிவேட்டை கட்டுரை சிறப்பாக இருந்தது. திசையாற்றுப்படை தொடரில் இரா. பிரபாகர் அருமையாக எழுதுகிறார். பேட்டைக்காளி படம் எடுத்த சம்பவம் சுவாரஸ்யமான கட்டுரை.

இணையத் தொடர் பற்றி இந்த இதழ் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அவ்வளவு செய்திகள் அந்திமழை பார்த்த பிறகு தெரிகிறது. எவ்வளவோ கூர்ந்து படிக்க வேண்டிய செய்திகள்!

 

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

புதுப்பிக்கும் உறவு

சாதிவாரிக் கணக்கீட்டு அரசியல் கட்டுரை கனமானது. எதிர்வரும் இளைய தலைமுறையினர் அனைவரும் படிக்கவேண்டிய கட்டுரை. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அதிகாரத்தில் பங்கேற்பதற்கான சூழலை சாதிவாரி கணக்கெடுப்பின் வாயிலாக சாத்தியமுண்டு என்று பல்வேறு சமூகச்செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. புலிவேட்டையின் கதை வெட்டுப்புலி நாவல் பிறந்த வரலாற்றை எதார்த்தமாக வாழ்வியலோடு இணைத்துப் பதிவாக்கியிருக்கிறார் தமிழ்மகன். சான்றாக ஓவியர் கோபுலுவின் ஓவியம் மலர்ந்த காட்சியினை விவரித்து அவரது தனித்தன்மையையும் சுட்டிக் காட்டியிருப்பது சுவையோ சுவை.

ஒவ்வொரு இதழிலும் ஒரு சூட்சமத்தை வைத்து வாசகர்களை சுண்டியிழுக்கும் வண்ணம் சிறப்புப் பக்கங்களை விரியவிட்டு இதழுக்கு மகுடம்சூட்டி, வேகவாசிப்புக்கு வழிகாட்டும் அந்திமழை இளங்கோவன், இவ்விதழிலும் தமிழில் தவறவிடுகிறோமா? உலககைக் கலக்கும் வெப் தொடர்களை அறிமுகப்படுத்தி அசத்திவிடுகிறார். மத்தகம் பிரசாத் முருகேசனின் - வெப் சீரிஸ் அனுபவங்கள் வாசகர்களை அப்படங்களில் மூழ்கி முத்தெடுக்க வைத்திருக்கிறது. மேலும் எழுத்தாளருக்கும் தமிழ்

சினிமாவுக்கும் தொலைந்துபோன உறவை வெப் சீரிஸ்கள் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றது என்ற வெற்றியின் எண்ணம் வெற்றிபெறுகிறது.

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

தள்ளாடும் மனம்

எதற்கும் மயங்காத மடங்காத ஆணின் மனம் சபலப்படும் பொழுது தன் சுயமிழந்து தள்ளாடித் தடுமாறுகிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டியது ‘சமையல்' சிறுகதை.

திறமையைக் கண்டறிந்து மதிக்கின்ற திறன்மிகுந்தவராக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி விளங்கியதை பாடகர் ஸ்ரீநிவாசின் கூற்று வெளிப்படுத்தியது சிறப்பு.

ஓவியர் கோபுலு எவ்வளவு பெரிய திறமைசாலி என்பதை எல்லோரையும் உணர வைத்தது தமிழ்மகனின் செய்தி.

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்

 அருவருப்பு

வன்முறையை விற்றுப் பிழைக்கிறதா தமிழ் சினிமா என்று கேட்டால் ஆம் என உறுதியாகச் சொல்லலாம். அந்தக் கால எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகள், தற்காப்புக்காக போடும் சண்டை மாதிரியே இருக்கும். இன்றைய காலகட்டம் போல் வன்முறையே இருக்காது. ஆனால் இன்று, எதற்கெடுத்தாலும் பெரிய பெரிய சுத்தியல்கள், அரிவாள்கள், துப்பாக்கிகள் என்று எதிரியைத் தாக்கும்போது, நம்மையே தாக்குவதுபோல் உணர்கிறோம். அடிவாங்கியவன் விழுந்து கிடந்தாலும் மீண்டும் மீண்டும் அடிப்பது. நேர் எதிரே துப்பாக்கியால் சுடுவது போன்ற அருவருப்பான காட்சிகள் தான் உள்ளன. ஆனாலும் போர்த்தொழில், அயோத்தி என சிற்சில தரமான படங்களும் வருகிறதே என திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.

டி.கே.கங்காரம், மதுரை

வித்தியாசம்

டிசம்பர் இதழின் அட்டைப் படம் சூப்பர். வெளிநாட்டு பத்திரிகை போல தோற்றம் தருகிறது.  தமிழில் தவறவிடுகிறோமா சிறப்புப் பக்கங்கள் அருமை. எதை பாராட்டுவது எதை விடுவது என்றே தெரியவில்லை. இயக்குநர் ராஜ்குமாரின் பேட்டி, படங்கள் அருமை. அவரது உழைப்பு பாராட்டுதலுக்குரியது.

அ.முரளிதரன், மதுரை

கலங்கிய கண்கள்

வசூல் குறைவு என்றாலும் மனநிறைவு படமாக வந்த ‘கிடா' இயங்குநர் வெங்கட் நேர்காணல் படித்தேன்! மனதை அள்ளியது. அம்மாவும் அக்காவும் அவரை தாங்கிப் பிடித்ததும் அம்மாவுக்காகவும் அக்காவுக்காகவும் இவர் உழைக்கத் துணிந்தது எல்லாமே ‘சிலிர்ப்பு' மேட்டர்கள்! சான்றோன் எனக் கேட்ட தாய் மன நிலையை அவர் பிரதிபலித்ததில் கண்கள் கலங்கின. பொருளாதார ரீதியிலும்ஜெயிச்சு அம்மா அக்கா இருவருக்கும் நிறைய செய்யணும் என்ற அவர் எண்ணம் கண்டு கலங்கிய கண்கள் மலர்ந்து பிரகாசித்தன!

மருதூர் மணிமாறன், இடையன்குடி

பரிதாபம்

பல அரசியல் கட்சிகள் சாதி வாரியாக கணக்கெடுப்பினை வலியுறுத்திய நிலையில் பீகார் மாநிலம் அதைச் செய்து காட்டிய வேளையில், தமிழ் நாட்டில் மெஜாரிட்டி கட்சிகள் அதை கல்வி உள்ளிட்ட சலுகைகள் ஆக பார்க்காமல் வாக்கு வங்கி அரசியலாக்க பார்க்க நினைப்பது தவறு என்றாலும் கூட, இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் சலுகைகளை தவறான பாதையில் எவரும் பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

சினிமா என்பது வெறும் நிழல் தான் என்பது இன்னமும் பலருக்கு புரியாத நிலையில் தங்கள் அபிமான திரை நட்சத்திரங்கள் சொல்வது அனைத்தும் வேத வாக்கு என்று நினைக்கும் ரசிகர்கள் இருப்பது பரிதாபம் தான்.

 

சி. கார்த்திகேயன் சாத்தூர் - 626203

கவலைக்குரியது

 சிறப்புப் பக்கங்கள் சரியான சதவீதத்தில் அமைந்து, ஈடுபட்டிருப்போருக்கும், ஆர்வமுள்ளோருக்கும் வழிகாட்டுவதாகவும்,  அறிய விரும்புவோருக்கு உரிய விவரம் தருவதாகவும் அருமையான விவரங்களை உணரத் தந்தது.

 சாதிவாரிக் கணக்கீடு சமூக நீதிக்கு பாதை போடும் என்பதை கட்டுரை சரியாகச் சுட்டியது. ஆனால் அரசியலின் கைகளில் அது என்ன விளைவைத் தருமோ என்கிற ஐயப்பாடு எழுவதையும் தடுக்க முடியவில்லை.  மீண்டும் வன்முறைக் களத்தில் வருமானம் பார்க்கும் தமிழ்த் திரைப்பட விற்பனைப் பார்வை கவலைக்குரியதே.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன். சென்னை - 89

விதவித தொடர்கள்

டிசம்பர் மாத அந்திமழை இதழில் பிரசுரமான சிறப்பு பக்கங்கள் தரமாக எடுக்கப்படும் வெப்தொடர்கள் பாகுபாடின்றி அனைத்து மக்களையும் சென்று சேர்வதையும், அதன் தாக்கம் மக்களிடையே நீடித்து நிற்பதும் உண்மையே என்று உரைத்தது. சினிமாக்களை டிக்கெட் வாங்கி அடித்து பிடித்து பார்த்த காலங்கள் மாறி மொபைல் போனில் சந்தா செலுத்தினால் போதும் வித விதமான வெப் தொடர்கள் எல்லா ஜானர்களிலும் கிடைக்கிறது.

சிறுவர் முதல் பெரியவர் வரை வெப் தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர் என்றாலும் தகும். புதிய புதிய வெப் சீரிஸ் களை, அதன் இரண்டாம் பாகத்தை அடுத்த எபிசோ டில் என்ன நடக்கும் என்பதிலிருந்து ஆர்வமாக தொடர்கின்றனர். நல்ல படைப்புகளை, இலக்கியங்களை இந்த வெப் தொடர் மூலமாகவே அனைத்து தரப்பையும் கொண்டு சேர்க்கமுடியும் என்பது நிச்சயம்.

மீ. யூசுப் ஜாகிர்,வந்தவாசி.

நெகிழ்ச்சி

பாடகர் ஸ்ரீநிவாஸ், ஷாஜிசென் உரையாடலில் ஒரு பகுதி தான் என்றாலும் ‘எம்எஸ்வி'யின் பக்கம் ஸ்ரீநிவாஸ் ஈர்க்கப்பட்டதும், ரஜினி சொன்ன பிறகே எம்எஸ்வி யின் கணிப்பு களிப்பானதும் தெரிந்து நெகிழ்ந்தேன். ‘சமையல்'

சிறுகதையின் ஆறுபக்கமுமே அறுசுவைதான்! ஆர்டருக்கான அட்வானஸ் கிடைக்க அரும்பாடுபட்ட காட்சியும் பின்னணியில்  எதிர் பார்ப்புடன் இருந்துள்ள சகாக்களின் நிலைப்பாடும் முருகன், மணி அன்கோவின் தொழில் பாட்டை எழிலாகச் சித்திரித்துவிட்டது எக்கச்சக்க ருசி!

ஆர்.ஜே.கலியாணி

செல்வ மருதூர்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com