சொல்லாமல் சொன்னது
Editorial

சொல்லாமல் சொன்னது

மேட்ரிமோனியல் கல்யாண வாழ்க்கையின் ஒரு விபரீதத்தை பதைக்கப் பதைக்க வீடியோ ஆல்பமாகக் காட்டியது எஸ்.ராமகிருஷ்ணனின் ‘மலைப் பாம்பின் கண்கள்'. மிருதுளா 2020 காலத்துப் பெண், ராகவ்- 1980 காலத்து ஆண். திருமண பந்தத்தை இணைக்கும் விட்டுக் கொடுத்தல், அனுசரித்தல் எனும் நூலிழைகளை சொல்லாமல் சொன்னது,  சிறுகதை.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை - 611 102

வெற்றிப்படம்

மிமிக்ரி கலைஞர் மணிகண்டன் 14 ஆண்டுக்கால கலை வாசத்தில் ராஜாகண்ணுவாக மின்னுகிற நிலைவரையான நேர்காணல் தொகுப்பு அவரைப் போன்றே நேர்த்தியானது! நிச்சயம் அவரது கீர்த்தி களைகட்டி கொடிபறக்கும். ‘ஜெய் பீம்' ஓர் சிறந்த படம் மட்டுமல்ல நல்ல பாடமும் கூட என்பதால் ராஜா கண்ணுவுக்கும் அது ஒரு வெற்றிப்படம்!

ஆர்.விநாயகராமன், திசையன்விளை - 627657

நீர்க்குமிழி

‘நானும் ஒரு துளியாக' என்ற கட்டுரை என்போன்ற வாசகர்களின் நாவில் தேன் துளிகளாகச் சுரந்து இனிக்க வைத்தது. ‘பவா' வரிகள் ‘பாபா' தரிசனம் போலாகிவிட்டது.

செங்கேணி என்ற தேவதை மூலம் நீதித்தாகத்திற்கான கலைப்-படைப்பாக ‘ஜெய்பீம்' வெளி-வந்ததில் மகிழ்ச்சி! எதிர்ப்பு நிகழ்ச்சி எல்லாமே நீர்க்-குமிழிகள் ஆகிவிடும்.

 ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை

வித்தியாசம்

மணிகண்டனின் பேட்டி அவரது படங்களைப் போலவே மிகவும் வித்தியாசமாக உள்ளது.

சிறப்புப் பக்கங்கள் நன்று. எதைப் பாராட்டுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை, சாட்டையடி பதிவு தோழியைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

அ.முரளிதரன், மதுரை

ஆக்கப்பூர்வம்

நாகரீகம் என்கிற பெயரில் மனிதன் பூமியை மிகப் பெரிய மாசு உருண்டையாக மாற்றி வருகிறான். ஒவ்வொருநாளும் அவர்கள் பயன்படுத்தும் நச்சுக் கழிவுகளின்மூலம் ஒட்டுமொத்த அழிவுப்பாதைக்கு கொண்டு

செல்கின்றோம். மிகப்பெரிய அழிவு சக்தியாகிய பொருட்களை மறு சுழற்சி செய்து பூமிக்கு நல்லது செய்யும் அஜிங்கியா போன்ற நபர்களை கண்டு பிடித்து ஆக்கப்பூர்வமான பல செயல் செய்ய வழிவகை செய்யவேண்டும்.

வேதவள்ளி (எ) காவ்யா, ஆலாம்பாளையம்

வேற லெவல்தான்!

பாரதிமணியின் ‘நிகம்போத் காட்'டில் நெகிழ்ந்த என் நெஞ்சம், அதே இலக்கியத் தரத்தை அவரது வரிகளின் இறப்புச் செய்தியிலும் கண்டு பிரமித்ததென்றால், குறும்படம் போல, அதை பொருத்தமாகக் கோர்த்து கொடுத்த அந்திமழை இளங்கோவனுக்கும் ‘அட!' போட வைத்தது.

ப்ரோ, படைப்புகளை படிக்கும் போதும் பார்க்கும் போதும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் குறித்த ஒரு பிம்பம் மனதில் உருவாகிறது. ஆனால், அவர்களது அன்றாட வாழ்க்கையை பார்க்கும் போது, பிம்பம் உடைவது வேற லெவலாகத்தான் இருக்கிறது. புரியல, சிறப்புப் பக்கங்களை தான் சொல்கிறேன், பாஸ்.

அ.யாழினி பர்வதம், சென்னை - 78

நெகிழ்வோடு

‘சோமலெ' நூற்றாண்டு விழாவில், அந்திமழை இளங்கோவன் வாசித்த கட்டுரையின் ஒரு பகுதி படித்து மகிழ்ந்தேன். அரிய தகவல்களால் களை கட்டுகிறது கட்டுரை! சினிமாவுக்கு வந்த போலீஸ், நேர்காணலில் ஜெய்பீம் திரைப்படத்தில் நடிப்புத்திறனைக் கூட்டிய ராஜா என்ற ‘தமிழ்' வறுமையின் உச்சகட்டத்தைக் கடந்து திரைத்துறைக்கு வந்த காலத்தை, கதையை நெகிழ்வோடு நினைவு கூர்ந்து அப்படியே வாசகர்களுக்கு தொகுத்து தந்து வாசகர்களையும் வருத்தமுறக் செய்திருக்கிறார் கட்டுரையாளர் தா.பிரகாஷ்! வேறலெவல் சிறப்புப் பக்கங்கள், ஜெய்பீம் நிஜமும் நிழலும், பவா செல்லதுரை எழுதியிருக்கும் நானும் ஒரு துளியே, ஆகியவற்றை விவரித்துரைப்பின், பெரிய கடுதாசி போட வேண்டும் சார்.

நவீன்குமார், நடுவிக்கோட்டை

நல்ல கதை

திரு.எஸ்.ராவின் 'மலைப்-பாம்பின் கண்கள்' படித்தேன். மிருதுளா அற்புதமான கதா-பாத்திரம். மலைப்பாம்பு வந்ததும் கதையின் மாற்றம் ருசியாக மாறிவிட்டது. மிருதுளா

ரசனையான பெண். ராகவிற்கு கொடுத்து வைக்கவில்லை... மலைப்பாம்பை காற்றில் பறக்க விடும் பொழுது காற்றில் நாமும் பறந்து போய் விடுகிறோம்... மாடியின் உயரத்தில் மிருதுளா வீட்டை காலி செய்து விட்டுப் போகும் போது நாமும் அவள் பின்னால் போக வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. நல்ல கதை.

அந்திமழையில் வரும் சிறுகதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்...“எஸ்.ரா'  சிறந்த கதை சொல்லி.

எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக்குளம் - 642 113

மகிழ்ச்சி

‘சான்ஸே இல்ல ப்ரோ..' வேற லெவல்! சிறப்புப் பக்கங்கள் மட்டுமல்ல, இந்த ஆண்டின் இறுதி மாதத்தில் வந்துள்ள அந்திமழையின் எல்லா பக்கங்களுமே வேற லெவல் தான்!

“மழைத்துளிகளை ஏற்கும் மகிழ்ச்சி-யில் வெளிச்சிக் கெண்டை-கள் நீரின் மேலேறி ஒரு அடி துள்ளி விழும்...' ஆம், பவா செல்லதுரையின் எழுத்து போலவே என் நிலையும் ஆயிற்று!

 ‘ஜெய்பீம்' இந்த ஆண்டு தமிழ் திரை உலகிற்குக் கிடைத்த மாபெரும் கருவூலம். அதில் நடித்த நடிகர்களும், அவர்களின் பின்புலம், அவர்களது நினைவோட்டங்கள் படித்த நான் வெளிச்சிக் கெண்டைகள் துள்ளி விழுவதைப் போலவே மகிழ்ச்சியில் திளைத்தேன்.

 லயன் கா.முத்துகிருட்டிணன், மதுரை 625 020

 கணக்கு கச்சிதம்

 திரை வலம் பகுதியில் இடம் பெற்ற விமர்சனப் பார்வை தெளிவான வழிகாட்டல்.காதம்பரியின் இத்தகைய கைகாட்டலில்தான் இனி படங்களைப் பார்ப்பதென முடிவெடுத்து விட்டேன். கச்சிதமான கணக்கு அவருடையது.

 பாரதிமணி பற்றிய நினைவலையில் ஆழ்ந்து போனேன். வாழ்க்கைக்குப் பின்னும் வாழ்கிறார் அவர் என்ற நிறுவிய ஆசிரியரின் கருத்து மிகச் சரி.

*வேற லெவல் சிறப்புப் பக்கங்கள் பற்றி வேறெதுவும் சொல்ல முடியவில்லை. வாசகர்கள் சொல்ல வேண்டியதையெல்லாம்... வேற வார்த்தைகளில் நீங்களே சொல்லி விட்ட பிறகு நாங்கள் எதைப் பேச...! அபாரமாக ஆணி பிடுங்கிய பாமரன் தொடங்கி எல்லோருமே வேற வேற லெவலில்... அருமையாக கதைத்திருந்தார்கள்.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன். சென்னை - 89

இருட்டுப் பக்கங்கள்

இருளர் ராஜாக்கண்ணுவாக மணிகண்டன் படைத்த கேரக்டர் தமிழ் சினிமா உலகையும் தாண்டி இன்று பேசு பொருளாகி இருக்கிறது. பழங்குடிகளின் இருட்டுப் பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததில் ஒட்டு மொத்த படக் குழுவினருடன் இணைந்து அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. எலி பிடிப்பவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சாதியம் சார்ந்த சிக்கல்களை மனதில் வலி ஏற்படுத்தும் விதத்தில் காட்சிப்-படுத்திய-மைக்காக அவரை மனதாரப் பாராட்டலாம். அந்திமழையில் கலைஞர்களைப் பாராட்டி எழுதியிருந்த விதம் அருமை.

பேரா. கரு. பாலகிருஷ்ணன், தேவகோட்டை

பாடம்

தூக்கி எறிந்த சானிட்டரி நாப்கினிலிருந்து செல்லுலோசை பிரித்தெடுத்து லாபம் ஈட்டும் தொழில் புரியும் இளைஞர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பொன்மொழிக்கு உதாரணம். மிமிக்ரி கலைஞராக தன் தொழிலைத் தொடங்கி படிப்படியாக போராட்டங்களை சந்தித்து முன்னேறி ஜெய்பீமில் ராஜாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் எல்லோர் மனதிலும் நின்ற நடிகர் மணிகண்டன் மற்றும் குருமூர்த்தி என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் சாதித்த நடிகர் தமிழ் போன்றோர், இளைஞர்கள் வைராக்கியத்துடன் சாதிக்க நினைத்தால் சாதிக்கலாம் என்ற பாடத்தை உணர்த்துகின்றனர்.

ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்

ஆச்சர்யம்

தூக்கி எறியும் சானிட்டரி நாப்கினில் 1.5 கோடி ரூபாய் சம்பாதிக்கும் இளைஞர் பற்றிய தகவல் ஆச்சரியம் தந்தது. மிமிக்ரி கலைஞராக இருந்து நடிகராக,வசனகர்த்தாவாக, இயக்குநராக தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து இன்று ஜெய்பீம் ராஜாக்கண்ணுவாக வாழ்ந்து ஒட்டுமொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் மணிகண்டன். கடந்த ஒரு மாதமாகவே ஜெய்பீம் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை. ஜெய் பீம் பற்றிய எனது திரைவிமர்சனத்தை முகநூல் குழுமம் ஒன்றில் பதிவிட்டேன் ஒரே நாளில் 1.5டு விருப்பகுறியீடுகளை பெற்ற அந்த விமர்சனத்தை அட்மின்

நீக்கிவிடுகிறார். என்ன காரணம் என்று தெரியவில்லை. இப்படியாக படத்திற்கு எதிர்ப்பும் செய்கிறார்கள் ஆனால் அதற்கு சொல்லும் காரணம் தான் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

ஜனவரி - 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com