வசீகரம்
Office

வசீகரம்

நாவல் பிறந்த கதைகள் பற்றிய ஆதி வரலாறுகள் மிக அருமை. தமிழ்ப் படைப்புகளையும் படைப்பாளர்களையும் கொண்டாட வேண்டிய தருணமிது என, நிறுவிய ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதைச் சிறப்பாகவே செய்திருக்கிறது அந்திமழை ஆசிரியர் குழு. குறிப்பாக என்று சொல்வதை விட, படைப்புகள் கருக் கொண்டதை படைப்பாளர்கள் அனைவருமே வாசக உள்ளங்களை வசீகரிக்கும் விதத்தில் சொல்லி இருந்தார்கள்... அனைவருக்கும் நன்றி. அடுத்தடுத்து தமிழின் அத்தனை நாவலாசிரியர்களின் கதைகளையும் வெளியிட விரும்புவதாகத் தெரிவித்த அந்திமழை இளங்கோவன் அவர்களுக்கு நன்றி.  ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.

தஞ்சை கந்தமாறன் சென்னை - 89

சிறப்புப்பக்கங்கள்

பொங்கல் சிறப்பிதழ் என்று குறிப்பிட்டு வாழ்த்து சொன்னது தவிர பொங்கல் பற்றிய ஒரு வரி கூட இதழில் இல்லையே! அது தான் சிறப்போ! வெறி நாய்க்கடி டாக்டரின் அனுபவங்கள் வித்தியாசம். நீண்ட நாளைக்குப் பிறகு ராஜேஷ்குமார், நீல பத்மநாபன் (புகைப்) படங்களைப் பார்த்த போது ஆச்சரியம்! முகிழ்ந்து அதில் மகிழ்ந்து உருவாவதால் தான் எழுத்தாளர்கள் ‘கரு' என்கிறார்களோ! அதன் வளர்ச்சியின் சுக அவஸ்தையோடு முடிவாகப் பிரசவ வலியுடன் வெளியாவதால்தான் புத்தகத்திற்கும் ‘டெலிவரி' என்கிறார்களோ! என்று தீர்மானிக்க வைத்தன, சிறப்புப் பக்கங்கள். 

மல்லிகா அன்பழகன், சென்னை- 600078

 வேண்டுகிறோம்

வானில் கரைந்த உயிர்கள் - கட்டுரை எங்களின் இதயத்தை உலுக்கியது. மனம் கனமானது. அஜாக்கிரதையே தவிர வேறு என்ன சொல்ல முடியும். மதிப்பு மிக்க நமது நாட்டு ராணுவ வீரர்களை இழந்து நிற்கிறோம். அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.      

கோ. குப்புசாமி, வடபழனி - 26

வைரமோதிரம்

மருத்துவர் சரவணன் கட்டுரை நன்று! வித்தியாசமாக உள்ளது. நன்றிகள். செய்திச்சாரல் தலைப்பிலான செய்திகள் சுவாரஸ்யமானதாக உள்ளன. முள்ளரும்பு மரங்கள் தலைப்பிலான கட்டுரையின் படங்கள் மிகவும் அருமையாக உள்ளது. வரைந்த  விரல்களுக்கு வைர மோதிரம்தான் போடவேண்டும்.

அ.முரளிதரன், மதுரை - 03   (ஓவியர் ரவி பேலட், இப்பசந்தோஷமா? - ஆர்.)

பாராட்டு

அந்திமழை இளங்கோவனின் முன்னுரையுடன் 22 எழுத்தாளர் களின் நாவல் பிறந்த கதைகளைப் படித்து மகிழ்ந்தேன். இது முற்றிலும் மாறுபட்ட முயற்சி. பாராட்டப்பட வேண்டிய பணி!

வெ.லட்சுமி நாராயணன், வடலூர் -607 303

ஆச்சர்யம்

கால்நடை மருத்துவர் சரவணன் ஓர் புனித டாக்டர். தன் கடமையில் செய்ததை நினைத்து ஒரு சிறந்த அனுபவத்தை எழுதியுள்ளார். பாராட்டுக்குரியவர்.  சொல்லப்படாத கதைகள் கட்டுரையில், அன்னா பிரகோவா மரணம் 1872-இல். அதுவே அன்னா கரீனினா நாவலின் கரு. புதிய படைப்புகளைக் கொண்டாடுவதாகத் தெரிவித்தது மகிழ்ச்சி. ஆன்டி இந்தியன் படம் எதார்த்தமாக எடுத்துள்ளார் புளூ சட்டை மாறன். இந்திய நாட்டின் விமான விபத்து வரலாறு கட்டுரை பழைய நினைவுகளைக் கண் முன் கொண்டு வருகிறது. தொழில் நுட்ப முன்னேற்றக் காலத்தில் இப்படி ஒரு நிகழ்வு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. 

இரா.சண்முகவேல், கீழ்க்கலங்கல் - 627 860

ரசிப்பும் வியப்பும்

அந்திமழை இளங்கோவன் தொகுத்தளித்திருக்கும் ‘சொல்லப் படாத கதைகள்' இதழுலகத்திற்கு புதுசு! லியோ டால்ஸ்டாயின்  ‘அன்னா கரீனினா' கிரிகோரி டேவிட் ராபர்ட்டின் சாந்தாராம் போன்ற புகழ்பெற்ற படைப்புகள் உருவான கதைகளையும், அப்படைப்புகளில் மூழ்கித் திளைத்த சூழலையும் விவரித்திருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துகள்! ஒரு தேர்ந்த கதை சொல்லி என்று அந்திமழை இளங்கோவனை அழைக்கலாம், அப்படியான அழகிய நடை! தமிழில் நாவல்கள் பிறந்த கதையை முதற்கட்டமாக 22 நாவலாசிரியர்களின் நாவல் பிறந்த கதைகள் சிறப்புப் பக்கங்களில்  விரிந்திருந்த தகவல்கள் அத்தனையும் ரசிக்கவும் வியக்கவும் வைத்ததில் அந்திமழை வாசகர்கள் மகிழ்ந்திருப்பர் என்பது திண்ணம்! ரத்த உறவு யூமா வாசுகி தொடங்கி அ.முத்துலிங்கம் எழுதிய கடவுள் தொடங்கிய இடம், குள்ளச் சித்தன் சரித்திரம் முதல் நாவல் பிறந்த களத்தையும் காலத்தையும் யுவன் சந்திரசேகர் விவரித்திருந்த கதையும் ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி உருவான  சூழலும், மக்கள் அந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்தில்  கண்கள் கலங்கிய காட்சிகளையும் கதாசிரியர் விவரித்திருந்த விதமும் மேலும் பாவண்ணன், எம்.கோபாலகிருஷணன், வண்ணநிலவன், திலகவதி, அழகிய பெரியவன், சோ.தர்மன், இமையம், இரா.முருகன், பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் சுகுமாரன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் அனுபவங்களும், கதைகள் உருவான விதமும் களமும் அவர்களின் புதினங்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கின! தமிழ்ப் படைப்புகளையும் படைப்-பாளர்களையும் அறிமுகப்படுத்தும் அந்திமழை இளங்கோவன் அவர்களின் இதழியல் பணி வெல்க!

பவளவண்ணன், நடுவிக்கோட்டை

இதம்

கே.எல்.பிரவீனின் பேட்டி அவரைப் போன்றே பியூட்டி. ராமருக்கு கூட 14 வருடங்கள் வனவாசம். பிரவீனுக்கு 14 வருடங்களில் 100 படவாசம்! ஒரு தேசிய விருது! ஆரம்பத்திலிருந்து ஆணவத்தை மறைத்து தொழில்ரீதியான ஆனந்தமாக மாற்றியது பாலுமகேந்திரா என்பதால் தொகுப்பில் அவரை பிரவீன் ஆராதித்துள்ள விதம் ஆத்மாவுக்கு இதம்! 

மருதூர் மணிமாறன், இடையன்குடி - 627 651

இறப்புக்கட்டுரை

‘வானில் கரைந்த உயிர்கள்' தொகுப்பில் நேதாஜி முதல் ஏ.டி.பன்னீர்செல்வம், மோகன் குமாரமங்கலம், பாலதண்டாயுதம், பாலகோவிந்தவர்மா, எம்பி விஜயலட்சுமி, பொன்னப்ப நாடார், ராணிசந்திரா, சஞ்சய் காந்தி, சுரேந்திரநாத், என்.வி.என்.சோமு, மாதவராவ் சிந்தியா, பாலயோகி, ராஜசேகர ரெட்டி, டோர்ஜி, ஜிண்டால், சுரேந்திரசிங், சௌந்தர்யா என தொடர்ந்து தற்போது முப்படைத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் உட்பட விமானத்தில் பயணித்த பலரின் இழப்பு குறித்த தொகுப்பு என்பதால் ‘சிறப்புக் கட்டுரை' என்பதைக் கூட ‘இறப்புக் கட்டுரை' என்றே வாசித்து விழி நீர் சிந்தினேன்.

ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை - 627 657

வரலாறு

எழுத்துலகில் புதிதாக நுழையும் அனைவரும் படிக்க வேண்டிய பகுதி இம்மாத சிறப்புப் பக்கங்களில் காணப்படும் இருபத்தியிரண்டு தமிழ் எழுத்துலக மேதைகளின் முதல் புத்தகங்கள் தோன்றிய வரலாறுகள் தான். உங்கள் மனதுக்கு அது யோசிப்பது பிடிபடும் வரை காத்திருந்தால் நீங்கள் ஒரு நாவல் எழுதலாம் என்ற மேல்நாட்டு அறிஞர் போல, நான் கேட்டது...நான் கண்டது... காண விரும்பியது... காண விரும்பாதது... ஆகிய சம்பவக் கோர்வைகள் தான் நான் எழுதிய படைப்புகளில் காணக்கிடைப்பது என்றார் புதுமைப்பித்தன். அதேபோல் 1979ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றுக்கொண்ட அரங்கில் தி.ஜானகிராமன் நிகழ்த்திய உரையில், நான் அன்றாட உலகைப் பார்த்து வியக்கிறேன், சிரிக்கிறேன், விரும்புகிறேன், பெறுகிறேன், பொருமுகிறேன், நெகிழ்கிறேன் முஷ்டியை உயர்த்துகிறேன், பிணங்குகிறேன், சில சமயம் கூச்சல் போடுகிறேன். மேற்கண்ட சேஷ்டைகள் அடங்கிய தொகுப்புதான் இன்று பரிசினை பெற்றிருக்கும் நூல்‘ என்று கூறினார்! இதற்கு எடுத்துக்காட்டாக... ‘சிறப்புப் பக்கங்களில்' வெளியான யூமா வாசுகி முதல் நாஞ்சில் நாடன் வரை, இருபத்திரண்டு எழுத்தாளர்களைத் தேடிப்பிடித்து எங்கள் முன் நிறுத்தியதற்கு அந்திமழை இளங்கோவனுக்கும் அவர் தம் குழுவினருக்கும் புத்தாண்டு மலர்ச்செண்டு!

எஸ்.பஞ்சலிங்கம், திருப்பூர் - 642 113

ஜொலிக்கிறது

தனிக்குடித்தனங்கள் போன்றே ஆங்காங்கே தனித்தனியே பூக்கும் நாவல்கள் என்பதை நாடறியும். பல நாவல்களின் ருசியை இலக்கிய உலகமே உணரும்! ஆனால் அந்திமழைக்கு மட்டும் எப்படி இந்த சிந்தனை பூத்தது! நாவல் பிறந்த கதைகள் என்ற தொகுப்பினால் அந்திமழை சிறந்த உயரத்தில் ஜொலிக்கிறது.

ஆர்.ஜி.பாலன், திசையன்விளை - 627 657

ச.தமிழ்ச்செல்வன்
ச.தமிழ்ச்செல்வன்

நிறைவளிக்கிறது

இம்மாத அந்திமழை இதழ் எனக்கு மிகுந்த நிறைவளிக்கிறது. முக்கியமான நூலாசிரியர்களிடம் அவர்களது நாவல் பிறந்த கதையை கேட்டுப் பெற்றுப் பிரசுரித்திருப்பது பெரிய காரியம். இலக்கியத்துக்கான முக்கியமான பங்களிப்பும் மரியாதையுமாகும். ஆசிரியர் குழுவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அட்டைப்படும் அருமை. ஓவியருக்கு என் தனித்த பாராட்டு.

அன்புடன்

ச.தமிழ்செல்வன்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com