சுனாமி தாக்கியும் விழாத திருவள்ளுவர் சிலை, கலைஞர் உடன் கணபதி ஸ்தபதி வடிவமைத்த சிலை. தமிழ் வலியது என்பதை உணர்த்தியவை அந்த திருவள்ளுவர் சிலையும் வள்ளுவர் கோட்டமும். அவருடைய நகைச்சுவை உணர்வு... எத்தனை சம்பவங்கள், எத்தனை பெயர்கள் துல்லியமாக அரசியல் கணக்குப் போடும் ஆற்றல்.
தரை டிக்கெட்டில் திருச்செந்தூர் சினிமா அரங்கில் பராசக்தி படம் பார்த்த என் அனுபவம் காலம் கடந்து பேச வைக்கிறது. எப்படி இந்தப் படத்தைத் தடை செய்ய மறந்தார்கள், இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.
என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்று அவருடைய கரகரத்த குரலில் பேசும்போது... எதிரிகள் கூட தன்னை மறந்து கைதட்டி விடுவார்கள். சிவாஜி பேசிய முதல் வசனமும் சக்சஸ், பராசக்தியும் சக்சஸ், சொல்லப்படாத இந்த கதைகளும் சக்சஸ்.
ஓவியர் மருது கலைஞரின் ஓவியத்தை உயிரோட்டமாக வரைந்திருக்கிறார் என்றால் 2 காரணங்கள். ஒன்று அவருடன் பழகக் கிடைத்த வாய்ப்பு. இரண்டாவது நன்கு தமிழ் கற்றவரை உயிரோட்டமாக வரைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம்.
பராசக்தி வசனம் எழுதிய கலைஞரின் பேனா சோழ மன்னர்கள் கையில் பிடித்திடும் வாளைவிட கூர்மையானது.
எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக்குளம்
அலையின்றி சிலை
கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் ஆதரவு + எதிர் அலைகளுக்கு இடையில் ‘அலை' பாய்ந்து வரும் தருணத்தில் அந்திமழை கலைஞர் 100 சிறப்புப் பக்கங்கள் என்ற தொகுப்பையும் அட்டையில் கலைஞரை ஆராதிக்கும் படமும் தந்திருப்பது வாசகர்களின் ஆனந்தக் கடலில் எந்த ‘அலை' பாதிப்புமின்றி ‘சிலை' எழுப்பியது போல் உள்ளது!
ஆர்.ஜி.பாலன், திசையன்விளை
நமக்கு பங்கு
சந்திரயான் - 3 வெற்றியைக் கண்டதும் மகிழ்ச்சியாக இருந்தது! அந்த 3 பயன்களைப் படித்தேன்! நாம் நிலவில் இறங்கிவிட்டதால் நாளைக்கே நிலாவை கேக்போல வெட்டிப் பிரித்தால் நமக்கு ஒருபங்கு உறுதி. அரிய வகை தனிமங்களை எடுத்தாலும் பங்கு உறுதி என்றிருப்பதையும் படித்தேன். என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற பாடல் வரி நினைவுக்குவர ‘வெளிநாடு' என்பதை நிலா நாடு என்று மாற்ற வேண்டும்? என்றெல்லாம் நினைத்தேன்; சிரித்தேன்.
மருதூர் மணிமாறன், நெல்லை
கமகம
வன்மபேதம் என்ற சிறுகதை தலைப்பின் பிரிண்ட் ஆகட்டும், இலக்கியத்தை சிலாகித்த வரிகளாகட்டும், அருகில் வரைந்த சித்திரம் ஆகட்டும்... அந்திமழையில் இலக்கிய இதழ்கள் பாரிஜாதமாக கமகமக்கின்றன! ஒரு ராமையாவின் வன்மம் இன்று உலகெங்கிலும் பல ராமையாக்களாக வடிவெடுத்திருப்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
ஆர்.விநாயகராமன், நெல்லை
சவால்
சந்திரயான் - 3 வெற்றி அந்த 3 பயன்கள் என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் ஒரு செயற்கைக் கோளை தயாரித்து அதை விண்ணில் ஏவி வெற்றி காண்பதென்பது கயிற்றில் நடக்கும் போது கையில் ஒரு கோலை வைத்து சமநிலையைப் பேணுவது போலத்தான்; எல்லாவற்றையும் சமாளித்து விண்கலம் தரையிறங்கும்படி தொடர்ந்து வடிவமைப்பதும் செயல்படுவதும் மிகப்பெரிய சவால் என்று கூறியுள்ளது ஆணித் தரமான உண்மையே!
ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு
சரியே
சாதாரண அடித்தளத்தில் பிறந்த மு. கருணாநிதி தன் மன திடம், வைராக்கியம், விடாமுயற்சி என மேலும் பல தளங்களில் தன்னை வருத்தி இந்தியா முழுவதும் தவிர்க்க முடியாத அரசியல்வாதி என பெயர் பெற்று ஓய்வறியா சூரியன் என மறையும் வரை போராட்டக்களம் கண்டு வெற்றி பெற்ற நிலையில் அவரது நூறாவது ஆண்டு தினத்திற்காக அந்திமழை மூலம் கவுரவம் செய்தது சரியே.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
ஆக்கபூர்வம்
சந்திரயானின் முக்கியத்துவம், இலக்கு, தொழில்நுட்பம், வளர்ச்சி, விண்வெளி, நிலவெல்லாம் மனிதகுலத்தின் பொதுச்சொத்து. அங்கு காணப்பெறும் அரியவகை தனிமங்களால் என்னென்ன பலன்கள், அவை நாட்டின்
சுபிட்சத்திற்கு எப்படியெல்லாம் உதவும் போன்ற அரிய அறிவியல் தகவல்களை அருமையாகத் தொகுத்தளித்திருக்கிறார் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். ஆக்கபூர்வமான அறிவியல் கட்டுரை இதுவெனலாம்.
ஒவ்வொரு இதழிலும் ஏதாவ தொன்றை புதுமையாகச் செய்ய வேண்டும் என்று சிந்தித்துத் தெரிவு செய்து வாசகர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் அந்திமழை கலைஞர் 100 நினைவில் நின்ற நிகழ்வுகளை அருமையாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பது அருமை.
கலைஞரின் தொடக்க கால வாழ்க்கையைத் தொட்டுக்காட்டி, தொடர்ந்து அவரது ஆற்றல்கள் எப்போது எப்படி வெளிப்பட்டு சிறக்க இருந்தது என்று அவரால் உருவாக்கப்பட்ட பல்வேறு ஆளுமைகளின் அனுபவங்களை சுவையாகத் தொகுத்தளித்திருப்பது சுவைஞர்களை வியக்க வைத்திருக்கிறது. ஜப்பானிய மொழியில் இகிகி என்றால் நல் என்பதற்கான விளக்கம் ஓஹோ போட வைக்கிறது
பிரேமா அரவிந்தன், பட்டுக்கோட்டை
நம்மவரே
வினை விதைத்தவன் வினை அறுப்பான்... என்பதை நியாயப்படுத்தி இருக்கிறது அகிலன் கண்ணன்
சிறுகதை வன்மபேதம். எப்பொழுதுதான் தங்கள் வன்மத்தை அழிப்பார்களோ ராமையா போன்றவர்கள்? இருநூறு மில்லிக்காக ஈனச்செயலில் ஈடுபடும் சண்முகம் போன்றோர் சபிக்கப்பட வேண்டியவர்களே. ஆனாலும் அவர்கள் வாழ்வதற்கு வழிகாட்ட வேண்டும் . அவர்களும் நம்மவரே என்ற எண்ணம் ஓங்க வேண்டும்!
வெ. சின்னச்சாமி, பழனி
வித்தியாசம்
கலைஞர் 100 சிறப்புப் பக்கங்கள் அருமையிலும் அருமை! எதை விடுவது என்றே தெரியவில்லை.
அட்டைப் படம் சூப்பர். கலைஞரைப் பற்றிய கட்டுரைகள், சந்திரயான் பற்றிய கட்டுரை செம. கலைஞர் உள்ள புகைப்படங்கள் மிக அருமையாக உள்ளது. பத்திரிகையாளர் மாலன் முதல் இளங்கோவன் வரை அனைவரது பேனாக்களும் கலைஞரை புகழ்ந்து பாராட்டுகின்றன.
போக மார்க்கம் கட்டுரை, விஜய் தேவரகொண்டாவின் பேட்டி வித்தியாசமாக இருந்தன.
அ.முரளிதரன், மதுரை
நேர்த்தி
இந்த மாத அந்திமழையின் அட்டைப் படம் நேர்த்தி. ஜப்பானிய மொழியில் வெளியான இகிகை என்ற புத்தகத்தின் சிறப்பினை ஒரே நாளில் தமிழகமெங்கும் தெரியுமாறு செய்துவிட்டார் அந்திமழை இளங்கோவன்.
“வாழ்க்கையில் குறிக்கோளுடன் வாழ்ந்தவர்கள் அனைவரும் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்' என்ற நெறிக்கு இகிகை என அர்த்தம் என அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
கலைஞரைப் பற்றிய அனைத்துக் கட்டுரைகளும் அவரது மேன்மையான பல்வேறு கோணங்களை வெளிப்படுத்தியுள்ளன. அந்திமழையின் மெனக்கெடல் இந்த இதழிலும் நிறைவேறியுள்ளது. அப்படி இல்லாமலா முரசொலி நாளேட்டில் இகிகை பற்றிய செய்தியினை வெளியிட்டிருப்பார்கள்?
லயன் கா.முத்துகிருஷ்ணன், மதுரை
ஏற்கலாம்
கலைஞர் 100- சிறப்புப் பக்கங்கள் அருமை. பலரின் கட்டுரைகள் தொகுப்பும் தனித்துவம். தாங்கள் வியந்து பார்த்த ஆளுமையை, அனைவருமே அவரவர் கோணத்தில் பேசியது குறிப்பிடத் தக்கது. கலைஞரின் ஆளுமைத் திறன் பற்றி குறிப்பிடுவது என்பது பன்முக ஆய்வகத்தில் நுழைவது போன்றது. எப்படியும் ஏற்கலாம்.
குறிக்கோள் நோக்கிய - இலக்கு சார் வாழ்வை ஜப்பானில் இகிகை என்பதைக் குறிப்பிட்டு புதிய அடையாளம் தந்த நிறுவிய ஆசிரியருக்கு நன்றி. அகிலன் கண்ணனின் வன்ம பேதம்
சிறுகதை...நிகழ்வுச் செய்திகளின் தன்மையில் இழைந்து... நெகிழ வைத்தது.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை - 89.
கலைஞர் வலம்!
ஊர்வலம், நகர்வலம், நினைவு வலம் என்று பலரும் உரைப்பார்கள். இந்த மாத அந்திமழை இதழ், ஓர் கலைஞர் வலம் என்றால் அது சற்றும் மிகையில்லை.
வசந்தராஜன், பெங்களூர்
கலைஞர் வெப் சீரீஸ்!
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலரைப் போய் பார்த்ததில்லை. 12-ஆம் ஆண்டில் அந்திமழை தோட்டத்தில் குறிஞ்சியாய் மலர்ந்த நூற்றாண்டு நாயகனின் சிறப்பிதழ் ரசித்தேன். கவிஞர் இளையபாரதி தலைப்பைப் போல ‘கையில் அள்ளிய கடல்‘.
படித்துக் கொண்டிருக்கும் அண்ணா சிலை போல, எழுதிக் கொண்டிருக்கும் கலைஞர் ஓவியம், அட்டைப்படமாய் அமைந்த கருத்துப்படம்.
19 எபிசோடுகள் கொண்ட வெப் சீரிசில் கலைஞரின் வாழ்க்கை வரலாறு ரசித்தது போன்ற திருப்தியூடிடியது, 19 வி. ஐ. பி களின் சிறப்புப் பக்கங்கள்.
அண்ணா அன்பழகன் அந்தணப்பேட்டை