சாமர்த்தியம்

சாமர்த்தியம்

பிப்ரவரி 23 இதழில் வந்த அத்தனை செய்திகளும் சிறப்பே! பலதரப்பட்ட தரவுகளிடமிருந்தும் வரவைத்துக் கொடுக்கும் சாமர்த்தியம் அந்திமழைக்கே உரியது!  ‘விழுகிறது அவமானம் அல்ல ....விழுந்தே கிடக்கிறதுதான் அவமானம்... உன் மனதிற்கு எது நியாயம்னு படுதோ அதைச்செய்! உன் மனசுதான் உனக்கு எஜமான்; துணைக்கு யாருமில்லைனு நினைச்சு கலங்காதே! என்று சொல்லும் வைதேகி மாமியாரைப் போலவே அனைத்து மாமியார்களும் இருந்தால் இந்த உலகம் எங்கோ சென்று விடுமே! மருமகளை தனது

சொந்த மகளாக நினைத்து ஆறுதலாக அணைத்துக் கொண்ட வைதேகி, பாராட்டுக்குரிய கதாபாத்திரமே! இந்த மாத சிறுகதையினை எழுதிய நித்யாவுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். இறுதியாக... படைப்பாளியும் பணமும் சிறப்பு பக்கங்களில் வந்த அனைத்துக் கட்டுரைகளுமே சிறப்போ சிறப்பு! சம்பளத்தை வாயை ஒன்றாக திறந்து பேசி வாங்க வேண்டும் ...என்று கருந்தேள் ராஜேஷ், அனைத்துக் கட்டுரையாளர்களுக்கும் சேர்த்தே கூறியுள்ளார்.

 லயன்.கா.முத்துகிருஷ்ணன், மதுரை - 20

வழிகாட்டி

நிதியைத் தேடுவது ஒரு கலை. அதை நிர்வகிப்பது பெருங்கலை. இது தெரியாமல் பொருளை இழந்து நடுத்தெருவில் நின்று திண்டாடி இருக்கிறார்கள். கலைஞர்களாயினும், கவிஞர்-களாயினும், எழுத்தாளர்களாயினும் இந்நிலை நேர்ந்தே இருக்கிறது. பிறரை நம்பி ஏமாறுவது ஒரு வகை. பிறரை நம்பாமல் ஏமாறுவது ஒருவகை. இவ்விரு வகையினாலும் இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

போலிகள், தந்திரம் என்னும் படைக்கலன்களுடன் மக்களை மாயவலைக்குள் வீழ்த்தி பணம், அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றைப் பெறுகிறார்கள் என்ற பேருண்மையை ரவி சுப்பிரமணியனின் ‘நாலந்தரமே முதலிடத்தில் நிற்கிறது' என்றவரி நமக்குச் சுட்டி நிற்கிறது.

கலைஞர்களும் பணமும் குறித்த சிறப்புப் பக்கங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பதிவுகள் அனைத்தும் பலருக்கும் வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.

மு.இராமு, திருச்சி - 620 008

இட்லி விலை

பிப்ரவரி மாத இதழில் உக்ரைன் போர் தொடர்வதன் ரகசியம்!, எடப்பாடி பழனிசாமி கை ஓங்குகிறதா?& கட்டுரைகள் நன்று.   நித்யா அவர்களின் ‘இன்னும் சில அம்மாக்கள்' நல்ல சிறுகதை. அன்று இட்லி 6 பைசா, இன்று ரூ.10, ரூ.15 விலைவாசி உயர்ந்துவிட்டது.

கா.திருமாவளவன், திருவெண்ணைநல்லூர் - 607 203

பாராட்டத்தக்கது

1.சிறப்புப் பக்கங்கள் அருமையிலும் அருமை! தரமான கட்டுரையைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவது பாராட்டத்தக்கது.

2.திசையாற்றுப்படை ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. திறமையான எழுத்தாளர்களை தேடிப் பிடித்து, உற்சாகப்படுத்தும் தங்களது பணி பாராட்டுக்குரியது.

3.ராஜேஷ்குமாரின் பேட்டி சூப்பர். அவரது கதைகளை போலவே விறுவிறுப்பாக உள்ளது.

5.உக்ரைன் - ரஷ்யா போர் பற்றிய கட்டுரை டபுள் சூப்பர்.

6.செய்திச்சாரல் பக்கம் அருமை!

7.புத்தகக் கடையில் புதையல் தேடுபவர் கட்டுரை + பேட்டி + படம் ரொம்ப அருமை!

8.படைப்பாளியும் பணமும் இளங்கோவனின் கட்டுரை பாராட்டுக்குரியது.

9.எடப்பாடி கை ஓங்குகிறதா கட்டுரை அருமை.

அ.முரளிதரன், மதுரை - 03

தொடரட்டும்

இரா.பிரபாகரின் புதிய தொடரான ‘திசையாற்றுப் படை' திக்கெட் டும் பரவட்டும் என சொல்லத் தோன்றுகிறது. அருமை...அருமை. படையின் வீர நடை தொடரட்டும்.

‘கடுமையான உடற்பயிற்சி செய்யாதீங்க முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மறுபக்கம் உண்மை உரைத்தது. பயிற்சி...பயிற்சி என்று அலைய வேண்டாம். முடிந்ததைச் செய்தால் போதும் என்ற கருத்தும், உணவுப் பழக்கமும், சத்துப் பானமும் ஏற்புடையதே.

‘இன்னும் சில அம்மாக்கள்‘ என்ற தலைப்பை விட ‘இப்படியும் சில மாமியார்கள்‘ என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும்.

வெ.சின்னச்சாமி, மானூர்

உசுப்புதல்

பணம் தான் பிரதானம் என்ற நிலை சமுதாயம் தோன்றியதிலிருந்து நடக்கும் செயல். உக்ரைன்போரை நிறுத்துவதற்கு பதிலாக உசுப்பி கொண்டிருக்கிறது. நேரடியாக ரஷ்யாவிடம் போர் செய்ய இயலாமல் உக்ரைனுக்கு பணம், படை கொடுத்து உதவி, போர்

நீடிக்கிறது. பொதுவுடமை அமைந்த நாடு இன்று ஏகாதிபத்திய நிலைக்கு வந்துவிட்டது. சிறப்புப் பக்கத்தில் இளங்கோவன் எழுதிய கட்டுரை, ஓவியர் வான்கா ஓவியங்கள், அவர் இறந்த பின்பும் கோடிக் கணக்கில் விற்றிருக்கின்றன.

எழுத்தாளர் ராஜேஷ்குமார், எழுத்தை நம்பினார் கைவிடப்படவில்லை. நான் இளைஞனாக இருக்கும்போது மாலை முத்து, ராணி முத்து வாங்கி, அது இன்று எங்கள் ஜீவா நூலகத்தை அலங்கரிக்கின்றது. திவானைப் பற்றி கண்ணன் சிறப்பாக உண்மையைப் பதிவு செய்துள்ளார்.

இரா.சண்முகவேல், கீழக்கலங்கல் - 627 860

களிநடனம்

சிறப்புப் பக்கங்களில் விரிந்திருக்கும் அனைத்தும், அந்திமழை இளங்கோவன் சொல்லியிருப்பதைப் போன்று, எல்லா படைப்பாளிக்கும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இதழ் என்பதில் மிகையில்லைதான். நான் படித்த சில பகுதிகளை இங்கு சுட்டிக் காட்டுக்கிறேன். அதிஷாவின் நான் பிச்சைக்காரன் இல்லை! கட்டுரை அருமை. ஜோக்ஸ் எழுத்தாளர்கள் அனைவரும் காலரைத் தூக்கிவிட்டு கொள்ளலாம்! ஒரு கலைஞன் என்னவும் பண்ணலாம் சார். ஒரு பெரிய கச்சேரியில அவன் வாசிக்கிற வாத்தியம் எவ்வளவு சின்னதாகவும் இருக்கலாம். ஆனா அதுவும் அந்த கச்சேரிக்கு முக்கியம். பயன்மிக்க பட்டறிவு: ஓவியர் ஷ்யாம் அனுபவங்கள் சிந்தைக்கு விருந்து வைத்த வண்ணக் கலவையால் வார்த்தெடுக்கப்பட்ட பிசிறில்லா கருத்தோவியங்கள்! ஒரு பென்சிலோடும், ரப்பரோடும் சென்னைக்கு வந்த எனக்கு கலை எக்கச்சக்கமாகக் கொடுத்திருக்கிறது. திறமையும், உழைப்பும் இருப்பின் உலகம் நமதே என ஆர்ப்பரிக்கும் அனுபவப் பிழிவுகள்!

‘சில சொற்கள் தருணங்களை அழகாக்குகின்றன. அதில் மனிதர்கள் அழகாகத் தெரிகிறார்கள். ஞானியாகத் தெரிந்தவரை அறிமுகப்படுத்திய ராஜா சந்திரசேகர் நடை, உரை வீச்சாக,  உணர்வுகளை மீட்டெடுக்கும் ஞானப் புதையல்கள், வார்த்தைச் சிக்கனத்துடன் இலக்கியம் வார்த்தளித்திருப்பதாக வாசிப்பவர்களை கட்டிப் போட்டுவிடும் சொற்களின் களிநடனம்!

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை - 614 602

அனுபவம்

அந்திமழை பிப்ரவரி இதழில் வெளியான திசையாற்றுப்படை- இரா.பிரபாகர் எழுதிய ஆரோக்கியம் தேடி...கட்டுரை படிக்க, சிரிக்கவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறார்! நித்யா எழுதிய இன்னும் சில அம்மாக்கள் சிறுகதை படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. பெண்களின் மனநிலையை வெளிப்படுத்தி சிறப்பாக எழுதியிருந்தார்.

பிரமிளைப்பற்றிய கட்டுரை நன்று. ராவ் எழுதிய ‘அன்று இட்லி 6 பைசா‘ கட்டுரையில் அந்தக் கால எழுத்தாளர்களுக்கு எவ்வளவு சன்மானம் அளித்தார்கள் என்றறிய மனம் வேதனைப்பட்டது. பத்திரிகை விலைகளையும் விவரித்திருக்கும் பங்கு போற்றத்தக்கதாகும்.

பி.ஆர்.ராஜாராம், சென்னை - 600040

சிறப்பு

பெண்ணுக்குப் பெண் அவர்கள் மாமியார் மருமகளேயானாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அடைக்கலமும் ஆறுதலும் தருவதும், பெறுவதும் நடைமுறையில் சாத்தியமாகின்ற போது உணர்வுகளும், உறவுகளும் நெருக்கமாகும் என்பதை பயன் மிகுந்த பாடமாக அளித்த நித்யாவின் ‘இன்னும் சில அம்மாக்கள்' சிறுகதை சிறப்பான கதை

மேலை. தமிழ்க்குமரன் முத்தரசநல்லூர் - 620 101

சிந்திக்க வைத்தார்கள்

பணம் போற்றத் தக்கதுமல்ல. தூற்றத் தக்கதுமல்ல. பாதுகாக்கத் தக்கது என்பார் இறையன்பு. அதை சரியாக இந்த நாள் கலைஞர்கள் உணர்ந்திருப்பதை...கலைஞர் களும் பணமும்... சிறப்புப் பக்கங்களில் புரிந்து கொள்ள முடிந்தது.

பணத்தை எந்த அளவீடு கொண்டு மதிப்பிடலாம் என்பதை சொல்லிய ஷீலா ராஜ்குமார், பணம் இல்லாத பயணத்தில் பதுங்கி ஒதுங்கிய வெள்ளைத்துரை, இயல்பாகவே திறமையைப் பணமாக மாற்றிய ஓவியர் ஷியாம், வாழ்வியல் தடங்களில் களமாடும் கல்குதிரைப் பயணத்தில் கோணங்கி, திறமையை திறனுடன் பணமாக்கும் கருந்தேள் ராஜேஷ் என எல்லோருமே நிறைய சிந்திக்க வைத்தார்கள்.

காசைக் கடவுளாக ,சாத்தானாக, தேவதையாகப் பார்க்கும் வாலறிவன், பணத்தினைப் பெருக்கு எனக் கூறிய பாரதியின் அனுபவம் என எல்லாமே பல புதிய கருத்துகளை உணர்த்தின. தான் வாழுங்காலத்திலேயே  படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்டதில் திவானின் மகிழ்ச்சி எனக்கும் உண்டு. பச்சை குத்திய பாசக் காரத் தந்தை, ஆரோக்கியம் தேடி அல்லலுற்ற அனுபவம் என எல்லாமே தனித்துவம். மகிழ்ச்சி.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை - 89

மார்ச், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com