பாராட்டுக்குரியவை

தொப்பைக்கு குட்பை சிறப்பிதழ் பகுதியில்  பல வினாக்களுக்கு விடை கிடைத்தது. குறிப்பாக மரு.அகிலாண்ட பாரதி அவர்களின் கட்டுரை.  +2 வுக்கு பின் என்ன படிக்கலாம் என்பதைத் தெளிவாக உணர்த்திய பக்கங்கள் பாராட்டுக்குரியவை. கழுதையைப் பார்த்தாலும் யோகம் வரும் என்பதை தனது தனிப்பட்ட வாய்ப்பாக எடுத்துக் கொண்ட மருத்துவர் ரமேஷ்குமாரின் முன்னேற்றமும் அருமை.தொழில்முனைவு ஆர்வமுள்ளோருக்கு உதவும். சந்தானலட்சுமி சிறுகதையில் கவனம் ஈர்த்தார் மாலன். ஷாஜியின் சாத்தான் ஆட்டம் எதிர்பார்ப்புகளைக் கூட்டியுள்ளது. காத்துள்ளோம்.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை-89

மணிமகுடம்

ஒரு கழுதையின் ஆசிர்வாதம்! கட்டுரை இந்த இதழுக்கு மணி மகுடம் சூட்டுவது போல் உள்ளது.

தொப்பைக்கு குட்பை சர்ப்ரைஸ் சூப்பர். அதற்கான படங்களோ டபுள் சூப்பர்.

பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு என்ன படிக்கலாம்? எனும் தலைப்பிலான தகவல்கள் அனைத்தும் நன்று. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும் மாணவர்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன இந்தக் கட்டுரைகள்.

அ.முரளிதரன், மதுரை - 03

துணிவு

அந்திமழை ஜூன் மாத இதழ் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் எந்தவிதமான கல்வியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ளது.

டாக்டர் படிப்புதான் பெரிய ஜாதி என்ற மனப்பான்மை ஓங்கி நிற்கும் காலம். படித்து அரசாங்க வேலை என்பதைவிட சுய தொழிலும் நம்பிக்கையோடு பார்க்கலாம். அந்த துணிவு வர வேண்டும்.

இரா.சண்முகவேல், தென்காசி

கழுதேன்னு திட்டினால்...

இளக்காரமாகப் பார்க்கப்படும் விலங்கு: கழுதை. அதன் மீது அதீத காதல் கொண்ட மருத்துவர் ரமேஷ் குமார் ஒரு தனிப் பிறவி. வியப்பூட்டும் விஷயங்களால்

 சுவாரசிய மூட்டிய கட்டுரையில் உலகிலேயே விலை உயர்ந்த உணவுப் பொருள் கழுதை சீஸ் தான் என்றும், கழுதைப் பால் விலையோ லிட்டருக்கு ரூ.7 ஆயிரம், அதனால் குஜராத் கழுதை விலையோ ஒரு லட்சம் என்றும் மிரட்டியது, கழுதைகளின் மதிப்பை உயர்த்தியது. இனிமேல் யாரும் ‘கழுதே!' னுதிட்டினால் கோபப்படாதீங்க பாஸ்!

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை - 611102

எப்போ ஸ்வாமி?

நடிகர்,நடிகைகளோட நேர்காணல் என்றாலே வழவழா, கொழகொழானு தாங்க முடியலடா ஸ்வாமி, என்றைக்குத்தான் புத்தி

சாலித் தனமாகத் துணிச்சலோடு, உண்மையான புது தகவல்களை சொல்வாங்களோ!

அ.யாழினி பர்வதம், சென்னை- 78

அடி ஆத்தி!

‘அகம் முகம்‘ என்ற வழிப்போக்கனின் வரிகள் மீது விழிகளைச் சாத்திவிட்டால் அடி ஆத்தி... அப்புறம் நகர மறுக்கின்றனவே!

எஸ்.எல்.ஜார்ஜ் அருண், திசையன்விளை - 628653

சிறப்பு

‘நெஞ்சுக்கு நீதி‘ திரைப்படத்தில் சின்ன கேரக்டர்தான்னு தெரிஞ்சிருந்தாலும், அந்தப்படம் அழுத்தமாக மக்களுக்கு சொல்ல வரும் மெசேஜ். சமூக நீதிக்கு ஆதரவான ஒரு படத்துல ஒரு சின்ன அங்கமாக வந்தாலும் பெருமைதான் என்று அழுத்தமாக சொல்லியிருப்பது தான்யாவின் மெச்சூரிட்டியை காட்டுகிறது. வளர்ந்து வரும் புதுமுகங்கள் அறிய வேண்டிய அரிய தகவலிது.

சின்னச் சின்ன செய்திகளில் களைக்கட்டுகிறது ராஜா சந்திரசேகர் கட்டுரை. ‘தொப்பையும் அழகுதான்‘ அந்திமழை இளங்கோவனின் - ‘தொப்பையில் எத்தனை வகை‘ என்பதையும், தொப்பை இல்லாமல் இருக்க எப்படியெல்லாம் உடலைப் பேண வேண்டும் என்ற ஆழமான தெரிவு செய்யப்பட்ட தரவுகளால் கட்டமைக்கப்பெற்ற கட்டுரையை அறிமுகப்படுத்தியிருப்பதுடன் நியாண்டர் செல்வன், ரவி, அகிலாண்டபாரதி உள்ளிட்டவர்களின் ஆலோசனைகளையும் பெற்று கட்டுரைகளையும் தொகுத்திருப்பது சிறப்பு!

பிரேமா அரவிந்தன், பட்டுக்கோட்டை - 614 602

பாராட்டுக்குரியது

அடடே! ஜூன் ‘அந்திமழை‘ இதழின் தொப்பை சற்று கூடியதுபோலிருக்கிறதே...என்று பார்த்தால் ரியலாகவே ‘தொப்பைக்கு குட்பை‘ சர்ப்ரைஸ் சிறப்பிதழ் தந்து 18 பக்கங்கள் 18 படிகளாக ஏற இறங்க வைத்து ‘தொப்பையை'க் குறைக்க வழிகண்டுள்ள அந்திமழை தொந்தி பிழையை அகற்றியிருப்பது பாராட்டிற்குரியது.

ஆர்.உமாசங்கர், நெல்லை

கோரஸ்

பேரறிவாளனின் வார்த்தைகள் கவனத்தை ஈர்க்கின்றன. அவர் நிரபராதி என்று திரும்பத் திரும்பக் கூறும் சூழலைக் கணக்கிட்டால் ‘ஏழுபேர் விடுதலை‘ என்ற அரசியல்வாதிகளின் கோரஸ் தான் அவரைக் கோரப்படுத்தியிருக்கிறது.

ஆர்.ஜி.பாலன், திசையன்விளை

சத்தான கதை

சாத்தான் ஆட்டம் முதல் இயக்குநர்களின் மாதம் வரையிலான அந்திமழையில், “உள்ள இருக்கிறதெல்லாம் வேட்ட நாய்ங்க... எலும்புத் துண்டாவது போடணும்' என்கிற யதார்த்த வரியும், மாலனின் சந்தான லட்சுமி என்கிற சத்தான கதையும் உலகிலேயே விலை உயர்ந்த பொருள் கழுதைப் பாலில் இருந்து இத்தாலியில் தயாரிக்கப்படும் சீஸ் தான் என்கிற தகவலும், நடைப்பயிற்சி, ஓட்டம் போன்ற பயிற்சிகளே அடிப்படையானவை என்கிற முனைவர் மு.ரவி ஐபிஎஸ் அவர்களின் கூற்றும், ஒரேநாளில் எதுவுமே குறையாது, போதுமான கால அவகாசமும் பொறுமையும் முக்கியம் என்கிற கருத்தும் ஊன்றிப் படிப்பதற்கானவை.

சி.பொன்ராஜ், மதுரை -7

தொப்பை குலுங்க...

பொதுநூலகத்தில் கிடைத்த பொக்கிஷம் அந்திமழை! உடல் நலத்திலிருந்து, கல்வி, அயல்நாடு, அலட்டிக் கொள்ளாத அரசியல், சினிமா எத்தனை விஷயங்கள்! தொப்பை எனக்கில்லை.  இருந்தாலும் தொப்பைக் குலுங்க சிரித்தேன்.

உடற்பயிற்சியில் நடைப்பயிற்சி முக்கியத்துவம் என்றாலும் உண்ணும் உணவுப் பழக்கத்தையும் சுட்டிக்காட்டிய சூத்திரதாரிகளே! பரம்பரை என்ற ஒன்று உண்டு என்பதையும் பதிவு செய்துள்ளீர்கள் பாராட்டுகள்!

கோவிந்தராஜன், சென்னை - 92

சகுன நாயகன்

‘ஒரு கழுதையின் ஆசிர்வாதம்‘ என்று மருத்துவர் ரமேஷ்குமார் தந்துள்ள தொகுப்பு நமது சகுன நாயகன் குறித்து சரியான வகுப்பு! கால்நடை பராமரிப்பில் கழுதைகள் குறித்த ஆய்வில் அந்த இனம் குறைந்தாலும் அதன் பாலின் குணம் குன்றாது என்பதால் பண்ணைகள் தோன்றும் விவரம் ஒரு வரமாகவே தெரிந்தது, கழுதைப் பாலிலிருந்து தயாரிக்கப்படும்  சீஸ் விலை கூடிய உணவுப் பொருள் என்பதையும் படித்தபோது பாஜக அரசு விரும்பாதே என்ற உணர்வு தான் உதைக்கிறது!

என்.ஜே.ராமன், திசையன்விளை - 627 657

ஆவணப்படம்

ஜூன் மாத அந்திமழை ஆரோக்கிய சிறப்பிதழ் என்று சொல்லுமளவுக்கு உடல் எடை குறைப்பு, தொப்பையிலிருந்து மீள என நிறைய கட்டுரைகளை பிரசுரித்து இருந்தது.அதில் ஆரோக்கியமாக வாழ காய்கறி,பழம் மட்டும் போதுமா? என்ற கேள்வி கேட்டு, பேட், சிக் அண்ட் நியர்லி டெட் என்ற ஆவணப்படம் வழியே விடையும் கொடுத்திருக்கிறார் இரா.கௌதமன் அவர்கள், ஆவணப்படம் பற்றிய கட்டுரை யூடியூப் வழியே தேடி பார்க்க வைத்தது.                                              

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

எளியசெய்தி

அராத்து  எழுதியுள்ள  பியரும் தொப்பையும்  என்ற  கட்டுரை  முக்கியமான  ஒன்று  எனக் கருதுகிறேன்.

பியர் என்பது  தன்னளவில்  நன்மை  தீமை என  சொல்லி விட முடியாது.  அதை  பயன்படுத்தும் விதம்தான் முக்கியம் என்ற  அவர்  பார்வையை  ரசிக்கும்படி எழுதி இருந்தார்.

சாப்பாடுக்கு நடுவே  அடிக்கடி தண்ணீர், குடித்துக் கொண்டே இருந்தால்  தண்ணீருமேகூட உடல்நலத்தை  கெடுக்கத்தான் செய்யும்.     வெளிநாடுகளில்  உருளைக்கிழங்கு ஆரோக்கியமான உணவாக இன்னும் சொல்லப்போனால் உயிர் காக்கும் மருந்தாக கருதப்படுகிறது.

நம்மூர்  மாதிரி  மசாலா எண்ணெய் போன்ற அம்சங்களை சேரக்காமல் வெறுமனே வேக வைத்து சாப்பிட்டால்  ஆரோக்கியமும் அதிகம்,  சுவையும்  அதிகம்.  ஆனால்  தவறான சேர்க்கைகளால்  அதை  தகாத உணவாக நம்மூரில்  மாற்றி வைத்திருக்கிறார்கள்.

 மருத்துவப்பொருளான  நெய்யையும் இப்படி  ஒதுக்கி வைத்துள்ளனர்.  நெய்யை  தனியாக தினம்தோறும் சிறிது எடுத்துக் கொண்டால் ஜீரணசக்தி மேம்படும்.  அதை  பிறவற்றுடன் கலந்து சாப்பிடும்போது  ஏற்படும்  கொழுப்புக்கான  பழியை நெய் மீது போட்டு ஆரோக்கியத்தை  இழக்கிறார்கள். அரிசி சாதமும் முறைப்படி எடுத்துக் கொண்டால்  நல்லதே செய்யும்.

மிதமான  உடற்பயிற்சி, ஆரோக்கியமான  உணவு குறித்த அறிவு ஆகியவை  முக்கியம் என்ற  கட்டுரையின் செய்தி  எளிமையானதாகத்  தோன்றினாலும்  பலரும் இந்த அடிப்படையைக்கூட  பயிலவில்லை  என்பதே உண்மை.

இதற்கு புதிதாகக்  கற்க  வேண்டாம்    பழைய  கற்பிதங்களில் இருந்து  வெளியேறினால்  போதும்.

பிச்சைக்காரன், சென்னை

ஜூன், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com